ரஸ்யாவுடன் போரிட தயாராகின்றது பிரான்ஸ்

உக்ரைனில் ரஸ்யாவுக்கு எதிராக போரிட பிரான்ஸ் துருப்புக்கள் செல்வதற்கு தடையில்லை என கடந்த திங்கட்கிழமை(26) பிராஸின் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்ததைத் தொடர்ந்து, ரஸ்யா பிரான்ஸிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என பிரான்ஸின் பிரதமர் கப்ரியல் அட்டால் கடந்த புதன்கிழமை(28) தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்காவில் பிரான்ஸ் தனது பிடியை இழந்ததற்கு ரஸ்யாவே காரணம், ரஸ்யா எமக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் படைத்துறை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அதிகரிக்க வேண்டும். எமது படையினர் உக்ரைனுக்கு உதவிகளை வழங்க அங்கு செல்ல வேண்டும். நாம் உக்ரைனின் வான்பரப்பையும் எல்லைகளையும் பாதுகாப்தற்கு தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் ஜேர்மனியை போல பெப்ரவரி மாதம் பிரான்ஸ் உக்ரைனுடன் தனது பாதுகாப்பு உடன்பாடுகளை மேற்கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் 3 பில்லியன் ஈரோக்களை இந்த வருடம் வழங்குவதற்கும், SCALP-EG வகை நீண்டதூர 40 ஏவுகணைகளை வழங்கவும், ஆட்டிலறி பீரங்கிகளுக்கான எறிகணைகiளின் உற்பத்தியை அதிகரித்து அதனை உக்ரைனுக்கு வழங்கவும் பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.

எனினும் உக்ரைனுக்கு நேட்டோ தனது துருப்புக்களை அனுப்புவது தொடர்பில் பல நேட்டோ நாடுகள் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளன.