யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

யாழ். குடாநாட்டில் நேற்று ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆய்வுகூடங்களில் 743பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு  ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் யாழ். மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுவருகின்ற நிலையில், சந்தைத் தொகுதியில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் அதற்கு அண்மையில் உள்ள விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார். அத்துடன் பாற்பண்ணைப் பகுதி கண்காணிப்பு வலயமாக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இலங்கையில் 91,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 558 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.