யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

810 Views

ஈழத்தமிழரின் மக்களாட்சியினை வலுப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் – ஈழத்தமிழருக்கு மக்களாட்சி உரிமை மறுக்கப்பட்டமையின் வெளிஅடையாளமாகச் சிறிலங்காவால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்.

யாழ்ப்பாண பொதுநூலக இயக்கம் என்பது பிரித்தானியக் காலனித்துவ அரசால் ஈழத்தமிழர்களுக்கு அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை டொனமூர் அரசியலமைப்பு மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் 1931ம் ஆண்டில் மக்களின் அறியாமையை நீக்கி மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான பொதுக்கோளத்தை உருவாக்கி, சிறந்த முறையில் அவர்கள் மக்களாட்சியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற தலையாய நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட மன்றில் செயலாளராகப் பணிபுரிந்த கே. எம். செல்லப்பா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

தன்னுடைய வீட்டிலேயே அறையொன்றில் தினஇதழ்களையும் வார மாத இதழ்களையும் வாங்கி வைத்து மக்களிடை வாசிப்புப் பழக்கத்தைத் தனது முயற்சியால் ஊக்குவித்து வந்த இவர் 1933ம் ஆண்டு கார்த்திகை பதினொராம் நாள் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம், திருகோணமலை,மட்டக்களப்பு, மற்றும் மலையகத் தமிழர்கள் அதிகம் வாழும் கண்டி,ஆங்கிலம் படித்த தமிழர்களும் பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட தலைநகரில் தொழிலுக்காகவும் உயர்கல்விக்காகவும் குடியமர்ந்த தமிழர்ககளும் அதிகமாக வாழும் கொழும்பிலும் “இலவச மத்திய வாசிகசாலை” அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையைப் பிரித்தானிய அரசிடம் முன்வைத்தார். இந்துசாதனம்,சிலோன் பிரீபிரஸ் போன்ற ஊடகங்கள் இவரின் இக்கோரிக்கையைத் தாங்கி வெளிவந்தன.

இதன் விளைவாக யாழ்ப்பாணப் பொதுநூலகத்தை அமைப்பதெப்படியென ஆராயும் பொருட்டு 04.06.1934 யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் மத்திய இலவச தமிழ் வாசிகசாலைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட சங்கத்திலேயே யாழ்ப்பாண பொதுநூலகம் கருவாகியது.

1934 யூன் 4 இல் கருவாகிய பொதுநூலகம், 1934 ஆவணி முதல் திகதி முதல் ஆஸ்பத்திரி வீதியில் 25 ரூபா வாடகைக் கட்டிடத்தில் 844 நூல்களுடனும் 30 பத்திரிகைகள் உடனும் மாதம் 20 ரூபா ஊதியம் பெற்றுத் தன்னையே நூலக வளர்ச்சிக்கு அர்ப்ணித்த நூலகருடனும் செயற்பட்டு, யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபராக இருந்த அருட்தந்தை லோங் அவர்களின் பெருமுயற்சியால் விரிவு பெற்று,1959 இல் யாழ்ப்பாணத்தின் வான் அடையாளமாக விளங்கிய குவிந்த கூம்புக் கோபரத்துடன் கூடிய அழகிய அனைத்துலக தரமுள்ள நூலகமாக நிலைபெற்று,ஆசியாவின் தலைசிறந்த தமிழ் நூலகமாகவும் சேவையினை அறிவுக்களஞ்சியமாகவும் உலகில் பெருவளர்ச்சி பெற்று, 47 ஆண்டுகள் அதிசயிக்கத்தக்க சேவையை வழங்கி வந்த நிலையிலேயே 1981ம் ஆண்டு யூன்மாதம் 01ம் திகதி அதிகாலை சாம்பல்மேடாக, சிறிலங்கா அமைச்சர் காமினி திசநாயக்காவின் வழிகாட்டலின் கீழ் சிங்களப் பொலிசாரால் எரித்தழிக்கப்பட்டது.download 11 யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

சிறிலங்காவின் முன்னாள் அரசஅதிபர் ரணதுங்க பிரேமதாசா அவர்கள் 1991இல் புத்தளம் முஸ்லீம் கல்லூரியில் அக்டோபர் மாதத்தில் உரையாற்றிய பொழுது வெளிப்படையாகவே சிறிலங்கா அமைச்சர் காமினி திசநாயக்கா அவர்களே யாழ்ப்பாண 1981 அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பு என வெளிப்படையாக எடுத்துரைத்தார். காமினி திசநாயக்காவுடன், அமைச்சர் சிறில்மத்தியூ என்னும் சிங்கள இனவெறி பௌத்த மதவெறிச் செயற்பாட்டாளரும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்.

யாழ்ப்பாணம் விளையாட்டரங்கில் தங்கவைக்கப்பட்டிருந்த சீருடை அணிந்த சிங்களப் பொலிசாரும், அவருடன் உடன் பங்கேற்றச் சீருடை அணியாத சிங்களக் காடையர்களாலும் யாழப்பாணம் பொதுநூல்நிலையத்திற்கு தீமூட்டப்பட்ட பொழுது அதனைத் தடுப்பதற்கு விரைந்த யாழ்ப்பாண மாநகரசபையின் இரவுக் காவல்காரர்களை தீயை நெருங்கவிடாது பொலிசார் விரட்டியடித்ததின் மூலம் தாங்கள் திட்டமிட்டுத்தான் யாழப்பாண பொதுநூலகத்தை 31ம் திகதி இரவிரவாக எரிக்கின்றார்கள் என்பதை உறுதி செய்தனர்.

தீ வானளாவ கொழுந்து விட்டு எரிகையில் தமிழர்களுடைய அறிவுப்பலத்தையே வீழ்த்தி விட்ட மகிழ்வில் சிங்களப்படையினர் பாட்டுப்பாடி பைலா இட்டு மகிழ்ந்த கொடுமையைக் கண்டு கண்கலங்கியவர்கள் பலர். 96000க்கு மேற்பட்ட நூல்களையும் ஆவணங்களையும் கொண்டிருந்த இந்த யாழ்ப்பாண பொதுநூலகம் தீக்கிரையாகி எரிவதைத் தனது சென்பற்றிக்ஸ் கல்லூரி மாடியில் இருந்து கண்ணுற்ற யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பல்துறைப் பேராசிரியரும், இந்தப் பொதுநூலகத்தின் காப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்த, பல முனைவர் பட்டங்களையும் நூற்றுக்கணக்கான மொழிகளில் புலமையையும் கொண்டிருந்த பேரறிஞரும் உலகப் புகழ்பெற்ற ஆய்வாளருமான அருட்தந்தை முனைவர் ஹயசிந்து தாவீது அடிகள் திகைப்பால் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இது எந்த அளவுக்கு யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு அறிவுலகையும் கல்வி உலகையும் பாதித்தது என்பதற்கு மிகச்சிறந்த சான்றாகியது.DBNgk9WXgAE0XGy யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

அதே வேளை பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்து,அனைவருக்கும் வாக்குரிமை வழியாக ஈழத்தமிழரின் மக்களாட்சியினை தொடக்கி வைத்த பொழுது அதனை வலுப்படுத்த மக்களுக்கு அறிவூட்டி அரசியல் மயப்படுத்த 1931இல் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் – 1972 இல் ஈழத்தமிழருக்கு மக்களாட்சி உரிமையினை மறுத்து அவர்களை நாடற்ற தேகஇனமாக அவர்களின் சொந்தத் தாயகத்திலேயே மாற்றிய சிறிலங்கா அரசாங்கம்,தமிழர்களின் மக்களாட்சியைப் பலப்பத்த உதவி வந்த யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்து, ஈழத்தமிழ் மக்களின் மக்களாட்சி பங்களிப்பைத் தாங்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வெளிஅடையாளமாக அதனைச் செய்தனர்.

இந்த வகையில் யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு என்பது சிறிலங்காவின் ஈழத்தமிழினப் பண்பாட்டு இனஅழிப்புத் தொடர்திட்டத்தின் ஒரு அலகாகவே அமைந்தது.

ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தாயகமென வரலாற்று வெளிப்பாடு கொண்ட யாழ்ப்பாணத்தில் ஈழத் தமிழர்கள் நடாத்திய,உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 10.01.1974இல் 11 ஈழத்தமிழர்களை இனஅழிப்புக்கு உள்ளாக்கி தொடக்கி வைத்த சிறிலங்காவின் ஈழத்தமிழர் பண்பாட்டு இனஅழிப்பே, தமிழர்களை ஆயுத எதிர்ப்பின் மூலம் தம்மைப் பாதுகாக்கும் தப்பிப் பிழைக்கும் வாழ்வியலைஉருவாக்கியது.

மீளவும் மீளவும் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சான்றுகளையும் பண்பாட்டுப் பதிவுகளையும் மானிடவியல் தொல்லியல் தடயங்களையும் இயன்றளவுக்கு இல்லாமல் செய்து அவர்களின் வரலாற்றுத் தாயகத்தன்மையை நிலைகுலைத்து அவர்களை சிறிலங்காவின் சிறுபான்மையினம் என்று பாராளமன்றப் பெரும்பான்மைச் சர்வாதிகார ஆட்சியை அவர்கள் மேல் நிலைப்படுத்துதல் என்பதே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் 1948 முதலான தொடர் அரசியல் செயற்பாடாகத் தொடர்கிறது.

இதனையும் 1991இல் சிறிலங்காவின் முன்னாள் அரசஅதிபர் ரணதுங்க பிரேமதாசா அவர்களின் பேச்சே வெளிப்படுத்தியது.

“வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார்? இதற்குப் பிரதான காரணம் காமினியே,பத்து வருடங்களுக்கு முன் 1981இல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கிடையேயான உறவுகளில் ஒரு கறைபடிந்த துயரமான சம்பவங்களாகும். பாராளமன்றத்தில் மாவட்ட அபிவிருத்தியைக் கொண்டு வந்து நாம் அதிகாரத்தைப் பரவலாக்க முயன்ற பொழுது காமினி திசநாயக்கா அதனை எதிர்த்தார். தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் திரு.காமினி நிறைய ஆட்களைக் கூட்டிக் கொண்டு யாழப்பாணம் சென்றார். யாழ்ப்பாணம் சென்ற அவர் அங்கு நிறைய வாக்குப் பெட்டிகளைச் சேகரித்து கள்ளவாக்குகளைப் போட்டார். இதனை நான் கூறவில்லை. பாராளுமன்றத்தில் காமினி திசநாயக்கா பிரசன்னமாக இருந்த போது, கூட்டணியின் செயலதிபர் ஆற்றிய உரை என்னிடம் உள்ளது.hqdefault யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

மாவட்ட அபிவிருத்திச் சபைத்தேர்தல்களில் சதி நாச வேலைகளைச் செய்த பின்னர் ஒரு சர்வதேச நூல் நிலையமான யாழ்பொது நூலகம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுக்களால் நீதியைப்பெறுவதற்கு எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியைக் குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ்த் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாதச் செயல்களில் இறங்கினார்கள். காமினி திசநாயக்கா யாழ்ப்பாணத்தில் தேர்தல்களில் தலையீடு செய்தார் என்பது இரகசியமல்ல. 300 பேர் தேர்தல் கடமைகளைச் செய்யவென அவரால் அழைத்துச் செல்லப்பட்டனர். பல வாக்குச்சீட்டுப் பொட்டிகள் காணாமல் போயின.”

என்பது சிறிலங்காவின் முன்னாள் அரசஅதிபர் பிரேமதாசா சாட்சியம் பகர்ந்து உள்ளதுடன்,மக்களாட்சியில் மறுப்பை காமினி ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தியமையும்,சிறிலங்கா சட்ட ஆட்சியை நடுநிலையுடன் முன்னெடுக்காததுமே தமிழ் மக்கள் தங்கள் பாதுகாப்புக்கு ஆயுத எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டி வந்தது என்ற உண்மையையும் உலகுக்குப் பிரேமதாசா தெளிவாக்கினார்.

அத்துடன் 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின் பொழுது இக்கட்டுரை ஆசிரியராகிய நான் யாழ்ப்பாணத்தின் தமிழர் கூட்டணி வேட்பாளர் சூவைப்பிள்ளை அழகையா அவர்களின் 13ம்வட்டாரத் தேர்தல் வாக்களிப்பு நிலையமான சென். யோன்ஸ் கல்லூரியில் அவரின் முகவராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த நேரத்திலேயே ஊரடங்குச் சட்டம் அமுலாகியதால் வீட்டுக்குத் திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டேன் . ஆனால் அந்த ஊரடங்குச் சட்டத்துக்கு மத்தியில் தான் ஊரே எரிக்கப்பட்ட கொடுமையையும் கண்டேன். படையினரே இவற்றைச் செய்தனர் என்பதற்கான உயிர்ச்சான்றுகளாக இன்றும் நாம் உள்ளோம்.

யாழ்ப்பாண 1981 ஆனிமாத அசம்பாவிதங்களுக்கு நான்கு நோக்கிருந்தன.

1. ஒன்று தமிழர்களின் மக்களாட்சிக்குப் பலமாக உள்ள அவர்களின் கல்விப்பலத்தை அழிப்போம் என்னும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எச்சரிக்கையாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டது.
2. தமிழர்களின் தொழில் செய் உரிமைகள் மறுக்கப்படும் எஎன்னும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எச்சரிக்கையாக யாழ்ப்பாண நகரத்தின் கடைகள் வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன.
3. யாழ்ப்பாண மக்களின் சொத்துக்களை நாம் நினைத்த மாதிரி அழிப்போம் என்னும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எச்சரிக்கiயாக யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்களின் வீடு எரிக்கப்பட்டு அவரும் அவரின் மனைவியும் ஏதிலிகளாக வீட்டுப் பின்புற மதிலேறிக் குதித்து உயிருக்காகத் தப்பியோடினர்.
4. நான் செய்தியளாராகவும் கட்டுரையாளராகவும்; பணியாற்றிக் கொண்டிருந்த ஈழநாடு தினஇதழ் அலுவலகம் எரிக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் பத்திரிகைச் சுதந்திரத்தைச் சிங்கள பௌத்த பேரினவாதம் எச்சரித்தது.li h யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

இவைகள் எல்லாம் யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு என்பதை உலகவரலாற்றில் பண்பாட்டு இனஅழிப்பொன்றின் வரலாற்றுச்சான்றாக மாற்றியது. இன்று யாழ்ப்பாண பொது நூலக எரிக்கப்பட்டு 49 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழர்களின் சுதந்திரமான மக்களாட்சி பங்களிப்பு சிறிலங்காவால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை மக்களாட்சி முறை மூலம் பெற இயலாத நிலையும் தொடர்கிறது.சிறிலங்காவின் ஈழத்தமிழர்கள் மீதான பண்பாட்டு இனஅழிப்பும் பலவழிகளில் தொடர்கிறது. இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் இந்த உண்மைகளைத் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் எடுத்துச் சொல்லி ஈழத்தமிழர் உரிமைகளை உலகம் தன் தலையீட்டால் காத்திட உதவிடல் அவசியமாகிறது

Leave a Reply