யாழில் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன – அரசாங்க அதிபர் மகேசன் தகவல்

306 Views

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர். எனினும் அவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட வர்களைத் தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்தி பி.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலிலிருந்து சுகாதாரப் பிரிவினரால் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றனர். அத்துடன் ஏற்கனவே தொற்று அச்சத்தால் முடக்கல் நிலையிலிருந்த மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 600 குடும்பங்கள் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தோரின் எண்ணிக்கையை விட சற்று குறைவாகவே இது காணப்படுகின்றது.

இந்துக்களின் கந்தசஷ்டி விரதம் ஆரம்பித்துள்ளதால் பூசகர் மற்றும் திருவிழா உபயகாரர் உட்பட ஐவர் மட்டுமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்குமாறு ஏற்கனவே சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதற்கேற்ப விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அநாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து ஒன்றுகூடல்களையும் தவிர்ப்பதன் மூலமே யாழ்.மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

Leave a Reply