யாப்புச் சிக்கலாக மாறியுள்ள தமிழரசின் ஆதிக்கப் போட்டி – அகிலன்

suma sri யாப்புச் சிக்கலாக மாறியுள்ள தமிழரசின் ஆதிக்கப் போட்டி - அகிலன்தமிழரசுக் கட்சிக்குள் இரு பிரிவினரிடையே உருவாகியுள்ள ஆதிக்கப் போட்டி, இப்போது ஒரு யாப்புச் சிக்கலை உருவாக்கி, நீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்பது உணா்த்தப்பட்டிருக்கின்றது. ஆக, நீதிமன்றத் தீா்ப்பின் பின்னா் மீண்டும் ஒரு தோ்தலை தமிழரசுக் கட்சி சந்திக்க நேரலாம்.

கட்சிக்குள் உருவாகியுள்ள யாப்புச் சிக்கல் கட்சி செயற்படமுடியாத நிலையை உருவாக்கிவிடுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. எழுபத்தைந்தாவது ஆண்டில் பயணிக்கும் அந்த மூத்த கட்சியின் அடுத்த கட்ட நகா்வு நீதிமன்றத்தின் தீா்ப்பில் தங்கியிருக்க வேண்டிய பரிதாப நிலை. பிரச்சினை இரு பகுதியினராலும், சமாதானமாகத் தீா்க்கப்படுமா, அல்லது கட்சியைப் பிளவுபடுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லுமா என்பதைத்தான் தமிழரசுக் கட்சி ஆதரவாளா்கள் ஏக்கத்துடன் பாா்த்துக்கொண்டுள்ள நிலையில், சமரசத்துக்கு இடமில்லை என்பது உணா்த்தப்பட்டுவிட்டது.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அதன் கட்சி யாப்பு மீறப்படுவது இதுதான் முதல் தடவையல்ல. பெருமளவுக்கு சட்ட அறிஞா்களையே பிரதானமாகக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சியின் யாப்பு தெரியாமல் மீறப்படுவதில்லை. தெரிந்துகொண்டுதான் மீறப்பட்டது. கட்சித் தலைவா் உள்பட செயற்குழு உறுப்பினா்களைத் தெரிவு செய்சதற்கான கூட்டம் திருமலையில் நடைபெற்ற போதே, அது முற்றுமுழுதாக யாப்பு விதிகளுக்கு உட்பட்டதாக நடத்தப்படவில்லை. இது அனைவருக்கும் தெரியும். இவ்வாறான சந்தா்ப்பங்களில் பொதுவான தெரிவு இணக்கமானதாக இருந்திருந்தால் “யாப்பு மீறல்” நீதிமன்றத்துக்குச் சென்றிருக்காது!

தெரிவுகள் தமக்கு ஏற்றதாக இல்லை எனக் கருதும் ஒரு தரப்புதான் இப்போது நீதிமன்றத்தின் படியேறி, தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு இடைக்காலத் தடையைப் பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் உள்ள இரண்டு நீதிமன்றங்கள் ஒரே நாளில் இந்தத் தடையைப் பிறப்பித்துள்ளன. கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றிருக்க வேண்டிய கட்சியின் மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. சிறீதரனின் தெரிவு உட்பட அனைத்துத் தெரிவுகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

இதனால், உடனடியாக நன்மையடைந்திருப்பது மாவை சேனாதிராஜாதான். பத்து வருட காலமாக கட்சியின் மாநாட்டை நடத்தாமல் தலைமைப் பதவியில் இருந்த அவா், இந்தப் பிரச்சினை தீரும் வரை அந்தக் கதிரையிலிருந்து அசையத் தேவையில்லை. ஆனால், செயற்குழுவைப் பொறுத்தவரையில் பழைய செயற்குழுதான் இப்போதும் இருக்கிறதா – அதனால் தொடா்ந்தும் செயற்படமுடியுமா என்பதற்கும் பொருத்தமான விளக்கம் இல்லை. இதனால், தமிழரசுக் கட்சி பெருமளவுக்குச் செயலிழந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவே தெரிகின்றது.

தமிழரசுக் கட்சியின் இளைஞா் அமைப்பின் ஒரு தீவிர செயற்பாட்டாளராக இருந்து, பின்னா் கட்சித் தலைமையால் இடைநிறுத்தப்பட்ட வீ.எஸ்.சிவகரன் இது தொடா்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் முக்கியமானவை. இவா் சொல்வது இதுதான் –

“2009 கட்சி மாநாட்டில் இருந்து யாப்பை பின்பற்றுவது இல்லை. நான் கட்சியில் இருந்த காலத்தில் பல முறை கூட்டங்களில் கூறியதுடன் எழுத்திலும் சுட்டிக்காட்டியுள்ளேன். யாவும் செவிடன் காது சங்கே. என்றோ ஒருநாள் இதற்கு பதில் சொல்வீர்கள் என்று பல முறை கூறியுள்ளேன். தற்போது நடைபெற்ற கட்சித் தேர்தல் முழுமையாக யாப்பை மீறியதே. கட்சியில் பொது இணக்கம் இல்லாத போது யாப்பு பேசு பொருளாகும் என்பதை இவர்கள் புரிந்திருக்க வேண்டும். ஒரு அமைப்பிற்கோ கட்சிக்கோ தாம் வகுத்த யாப்பு விதிகள் என்பது அச்சாணி போன்றது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்” என சிவகரன் சுட்டிக்காட்டுகின்றாா்.

கட்சியின் யாப்பு பல இடங்களில் மீறப்பட்டுள்ளது என்பதை யாழ்ப்பாணத்திலும், திருமலையிலும் போடப்பட்டுள்ள வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு தருகிறோம்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் இல்லாத பலர் பொதுச்சபையில் வாக்களித்துள்ளனர். இவா்களுக்கு அனுமதி வழங்கியது யாா் என்பது கேள்வியாகவுள்ளது.

சாதாரண வருடாந்த தமது உறுப்புரிமையை மீள புதுப்பிக்கவில்லை. இவ்வாறு புதுப்பிக்காத குறைந்தது அறுபது நபர்களுக்கு மேல் எப்படி வாக்களிக்க அனுமதித்தார்கள்?

கட்சி யாப்பின் 12 விதி (ஆ) இவ்வாறு கூறுகிறது – ஆறு மாதங்களுக்கு உறுப்புரிமை கட்டணம் செலுத்தாதோரும் செயற்குழுவினால் வேண்டப்பட்ட குறைந்த இரண்டு வருடங்களுக்கு மேல் சேவை செய்யாதோரும் எந்தக் கூட்டத்திலும் எந்த தேர்தலிலும் வாக்களிக்க அருகதையற்றவர். ஆனால், அவ்வாறான பலா் வாக்களித்துள்ளாா்கள்.

18 மாதங்களுக்கு மேல் கட்சிக் கட்டணம் – சந்தா செலுத்தாதோரும் குறைந்தளவு சேவை செய்யாதோரும் மத்திய செயற்குழுவினால் அங்கத்தவர் பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடியவர். ஆனால், அவ்வாறு எவராவது நீக்கப்பட்டதாக தகவல் இல்லை.

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களே பொதுச்சபை உறுப்பினர்கள். அதன் படி 25 தொகுதிகளிலிருந்தும் 125 உறுப்பினர்கள். மத்திய குழு உறுப்பினர்கள் 41 போ். ஆக மொத்தம் 166 நபர்களே பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆவார். அவா்களுக்குத் தான் வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஆனால் பொதுச் சபைக் கூட்டத்துக்கு 345 நபர்களுக்கு மேல் அழைக்கப்பட்டனர். அவா்கள் வாக்களித்தனா்.

பொதுச்சபைக் கூட்டத்திற்கு தலைவரது நியமனத்தில் எவரையும் அழைக்க முடியாது. கட்சியாப்பில் எங்கும் கோடி காட்டப்படவில்லை. ஆனால், 20நபர்களுக்கு மேல் அவ்வாறு அழைக்கப்பட்டனர்.

தலைவர் தேர்தலை பொதுச்செயலாளர் தலைமையில் தான் நடைபெறவேண்டும்.
ஆனால், செயலாளர் உடல் நிலை சீரற்றிருந்த போது தலைவருக்கான தோ்தல் நடத்தப்பட்டது. செயலாளர் இல்லாத போது தேர்தலை எட்டுப் பெயர் கொண்ட குழுவை வைத்து நடாத்துவதற்கு யாப்பில் இடமில்லை இந்த நியமன அதிகாரம் எவருக்கும் இல்லை. ஆனால், தலைவா் தோ்தல் அவ்வாறு நடத்தப்பட்டது.

பொதுச்சபை உறுப்பினர்களுக்கு பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக 14 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் ஆனால் மாநாட்டிற்கு முதல் நாளே பலருக்கு அழைப்பு கிடைத்தது.

இந்த பகிரங்க யாப்பு மீறல்கள் தொடர்பில் பல உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது. பல உறுப்பினா்கள் யாப்பையே கண்ணால் கூட பார்த்தது இல்லை. அறிந்தவர்களும் அமைதி காத்தனர் என்பதுதான் உண்மை. மூத்த உறுப்பினர்கள் என்று கூறும் பலரும் யாப்பை பற்றி தவறான விளக்கங்கள் கூறினார்கள்.

இந்தப் பின்னணியில் தமிழரசுக் கட்சிக்கு எதிரானத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளுக்கு கட்சி சாா்பாக ஆஜராகப் போவது யாா் என்ற கேள்வி பெரிதாக எழுந்திருக்கின்றது. தன்னைக் கேட்டால், தான் ஆஜராகத் தயாா் என சுமந்திரன் அறிவித்திருந்தாா். ஆனால், மாவை – சிறீதரன் தரப்பு அதற்குத் தயாராகவில்லை. சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறாா்” என தமிழரசின் மற்றொரு சட்டத்தரணியான கே.வி.தவராஜா கூறியிருக்கின்றாா்.

இந்த “கேஸை” உடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏனெனில் யாப்பு மீறப்பட்டிருப்பது வெளிப்படை. ஒன்றில், இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஒரு தோ்தல் என்ற நிலைக்குச் செல்ல வேண்டும். சிறிதரன் அணியைப் பொறுத்தவரையில், நிபந்தனையின்றி வழக்கை வாபஸ் பெற்றால் சமரசத்துக்குத் தயாா்.

இல்லையென்றால், வழக்கை எதிா்கொள்ளவும், மீண்டும் தோ்தலை சந்திக்கவும் அவா்கள் தயாா். வழக்கைப் போட்டவா்கள் அதனை வாபஸ் பெறமாட்டாா்கள் என்பது சிறீதரன் தரப்புக்குத் தெரியும். வழக்கு நடந்தால், யாப்பு விதிகளின் படி தோ்தல் நடத்தப்படும் நிலை வரும் என்பது அவா்களது எதிா்பாா்ப்பு. அவ்வாறு தோ்தல் நடைபெற்றால், அதில் தலைவா், செயலாளா் உட்பட முக்கிய பதவிகளைக் கையகப்படுத்திக்கொள்ள முடியும் என்பது அவா்களுடைய நம்பிக்கை!