மேலதிக வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கையும் புற்றுநோயும் பகுதி 1 -தமிழில்: ஜெயந்திரன்

ஈராக்கின் ஏர்பில் (Erbil) நகரில் கவகொஸ்க் (Kawergosk) முகாமில் வாழுகின்ற ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளில் ஒருவரான 53 வயது நிரம்பிய ஷெரீனுக்கு (Shireen) 2020 மார்ச் மாதத்திலிருந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின.

“ஆரம்பத்தில், எனது முதுகு, மார்பகம், கை போன்ற அவயவங்களில் வேதனையை அனுபவிக்கத் தொடங்கினேன். இப்படிப்பட்ட வலி தசைநார்களில் ஏற்படும் பிடிப்புகளினால் அல்லது ஏதாவது ஒரு நோய்த்தொற்றினால் ஏற்படுகின்றது என்று எண்ணி, இந்த நோவுகள் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை” என்று அவர் கூறினார்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கான சிகிச்சையை முகாமில் உள்ள சுகாதார மையத்தில் மட்டுமே அவரால் பெற முடிந்தது. அங்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சிகிச்சைகள் வழங்கப்பட்டுவந்தன. அந்நேரத்தில் நிலவிய கோவிட் பெருந்தொற்றின் காரணமாக முகாமை விட்டு அவரால் வெளியே செல்ல முடியவில்லை. அவருக்கு எந்தவொரு தொழிலும் இல்லாத காரணத்தினால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை அவரால் நாடமுடியவில்லை.

கடைசியாக, 2020ம் ஆண்டின் கோடை காலத்தில் ஏர்பில் நகரத்தில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் ஒரு மருத்துவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஷெரீனுக்குக் கிட்டியது. அங்கு தான் முதன் முதலாக மார்பகப் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக அவருக்குச் சொல்லப்பட்டது.

எனது முலைக்காம்பிலிருந்து இரத்தம் சொட்டத்தொடங்கியதன் காரணமாக உடனடியாக காத்திரமான ஒரு மருத்துவ பரிசோதனையைச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர் அவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், புற்றுநோய்க்கான மருந்துச் சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான சிகிச்சைகளை அவர் பெற்றிருந்தாலும் கூட, உடலில் அவர் அனுபவிக்கும் நோவு தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

இவ்விடயத்தில் ஷெரீன் தனியாக இல்லை. கவர்கொஸ்க் முகாமில் அவரது பிரிவில் உள்ள இன்னும் ஒன்பது பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வட ஈராக்கின் குர்திஷ் மக்கள் வாழும் பிரதேசத்தில் பணிபுரியும் மருத்துவர்களும், அங்கு வாழும் மக்களும் அங்குள்ள பெற்றோலிய நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒரு செயற்பாடே  இவ்வாறு அங்கு புற்றுநோய் அதிகமாக ஏற்படுவதற்குக் காரணம் என நம்புகின்றனர். அந்த முகாமுக்கு அருகாமையில் உள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பெற்றோலியம் உற்பத்தி செய்யப்படும் பொழுது, அங்கு உருவாகும் மேலதிக வாயு எரிக்கப்பட்டு  (gas flaring) வளிமண்டலத்துக்குள் விடப்படுகிறது. இவ்வாறான ஒரு செயற்பாடு தான் அங்கு வாழும் மக்களிடையே புற்றுநோய் பரவுவதற்கு அடிப்படைக்காரணம் என்று அங்கு வாழும் புத்திஜீவிகளும் மக்களும் நம்புகின்றனர். ஈராக்கில் தனியாரால் நடத்தப்படும் சக்தியை வழங்கும் பெருநிறுவனமான கார் (KAR) என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானதே அந்த சுத்திகரிப்பு நிலையம் ஆகும். இவ்விடயம் தொடர்பாக கார் என்று நிறுவனத்திடம் வினவப்பட்டபோது, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் பதில்தர முன்வரவில்லை.

2013ம் ஆண்டுக்கும் 2019ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஏர்பில் டியூஹொக் ஆகிய நகரங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானதாக, புற்றுநோயைத் தடுப்பதற்கான ஆசிய பசிபிக் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு (Asian Pacific Journal of Cancer Prevention), செய்தி வெளியிட்டது. ஐஎஸ் பிரிவுடனான போர் ஒரு முடிவுக்கு வந்த பின்னர் அப்பிரதேசத்தில் எண்ணெய் உற்பத்தி அக்காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுவாசக் கோளாறுகளில் தொடங்கி புற்றுநோய் வரையான பல்வேறு கோளாறுகள் தமக்கு இருப்பதாக அங்கு வாழும் மக்களில் பலர் எம்மிடம் தெரிவித்தனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஷெரீனுடைய வாழ்க்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. “எமது சொந்தக் கிராமத்தில் எமது வாழ்க்கை மிகவும் சந்தோசமானதாக அமைந்திருந்தது. அதற்குக் காரணம் நாங்கள் மிகவும் இயற்கையான, சேதன உணவுகளையே உண்டு வந்தோம். அங்கு வாழ்ந்த போது, எமது வாழ்க்கையும் எமது உளநிலையும் நன்றாகத் தான் இருந்தன” என்று சிரியாவில் கஹத்தன்யா (Qahtaniyah) என்ற பிரதேசத்தில் உள்ள ஷெயீர் (Sheir) என்ற கிராமத்து வாழ்க்கையைப் பற்றிக் கூறும்போது அவர் குறிப்பிட்டார்.

2013ம் ஆண்டு ஐஎஸ்ஐஎல் (ISIL) போராளிகள் அந்தக் கிராமத்தைத் தாக்கினார்கள். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஷெரீனும் அக்கிராமத்தவர்களும், அக்கிராமத்தையும் தமது கால்நடைகள் வயல்கள் என்பவற்றையும் கைவிட்டுவிட்டு, தமது நாட்டு எல்லையைக் கடந்து ஈராக்கினுள் நுழைந்தார்கள்.

இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கம்

1991 – 2003 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற வளைகுடாப் போர்களின் போது, 1200 தொன்கள் அளவிலான வெடிபொருட்கள் ஈராக்கின் மேல் போடப்பட்டன. இதன் காரணமாக அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு, உண்மையில் பெற்றோலிய எரிவாயு தான் காரணமா அல்லது குண்டுவீச்சுகளின் காரணமாக வெளிப்பட்ட யுரேனியத்திலிருந்து ஏற்பட்ட கதிர்வீச்சுத் தான் காரணமா என்பதைக் கண்டறிவது கடினமானதாக இருக்கிறது.

இது எப்படி இருப்பினும் கவர்கொஸ்க் அகதிகள் முகாமில் வாழுகின்ற 8000 அகதிகளும் பெற்றோலிய வாயு எரிக்கப்படுவதன் காரணமாக வெளியேறும் பென்ஸீன் (benzene) போன்ற இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கத்துக்கு உள்ளாவது தொடர்பாக நிபுணர்கள் மிக அதிகமான கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

“பெற்றோலிய எரிவாயுவிலிருந்து வெளிப்படும் பென்ஸீன் குருதிப்புற்றுநோயை (leukaemia) ஏற்படுத்தக்கூடிய இரசாயனக் கதிர்வீச்சுப் பதார்த்தங்களைத் தன்னில் (carcinogen) கொண்டிருக்கிறது” என்று அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரத்திலுள்ள கலிபோர்ணியாப் பல்கலைக்கழகத்தின் பொதுச்சுகாதாரக் கற்கைப் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கின்ற லோறா குஷிங் (Laura Kushing) தெரிவித்தார். “அந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் இவ்வாறான இரசாயனப் பதார்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்பாக மிகவும் கவலையடைகிறேன்” என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

“தங்கள் மேலதிக வாயுவை எரிக்கின்ற நடைமுறையைப் பின்பற்றுகின்ற எண்ணெய்க் கிணறுகளுக்கும் இயற்கை வாயுவை உற்பத்தி செய்யும் நிலையங்களுக்கும் அண்மையில் குடியிருக்கின்ற கர்ப்பிணிப் பெண்கள் ஏனைய சாதாரண சூழ்நிலையில் வாழுகின்ற கர்ப்பிணிப் பெண்களுடன் ஒப்பிடும் போது, 50 வீதம் அதிகமாக குறைமாதப் பிள்ளைகளைப் பெறுவது அவதானிக்கப்பட்டிருக்கிறது” என்று மேற்படி பல்கலைக்கழகத்தில் குஷிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவு சுட்டிக்காட்டுகிறது.

“தமது கர்ப்பிணிக் காலத்தில் பத்து அல்லது அதற்கு அதிகமான தடவைகள் எரிந்துகொண்டிருக்கும் வாயுவின் தாக்கத்துக்கு உள்ளானவர்களைப் பொறுத்தவரையில், 50 வீதம் அதிகமாக குறைமாதப் பிள்ளைகள் பெறுபவர்களாக இருந்தார்கள். அதாவது 37 வாரங்களுக்கு குறைவான காலத்தைக் கொண்டிருந்தார்கள்” என்று குஷிங் மேலும் தெரிவித்தார். “குழந்தைகள் உரிய காலத்துக்கு முன்னர் பிறக்கும் போது, அவர்களது ஆரோக்கியத்தில் அது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”

இந்த எரிவாயுவின் தாக்கத்துக்கு நீண்ட காலம் முகம் கொடுப்பவர்களுக்கு, எலும்பு மச்சை (bone marrow) பாதிப்புக்கு உள்ளாகின்றது. அவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, குருதியில் செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கை குறைவதன் காரணமாக, அவர்கள் பலவீனமாகவும் களைப்பாகவும் இருப்பார்கள். இவ்வாறானவர்களுக்கு உடலில் அதிக உரசல் காயங்கள் ஏற்படுவதுடன் இரத்தம் அதிகமாக வெளியேறுவதுடன் அந்நோயிலிருந்து குணமாவதற்கும் அதிக காலம் எடுக்கிறது.

தென் கலிபோர்ணியாப் பல்கலைக்கழகத்தின் கெக் மருத்துவக் கல்லூரி (Keck School of Medicine), லொஸ் ஏஞ்சலசின் கலிபோர்ணியாப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளுடன் இணைந்துமேற்கொண்ட ஆய்வும் “தம்மிடம் மேலதிகமாக உள்ள வாயுவை எரிக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துகின்ற எண்ணெய்க்கிணறுகள் மற்றும் இயற்கை வாயு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அருகிலே வாழும் பெண்களுக்கு 50 வீதம் அதிகமாகக் குறைமாதப் பிள்ளைகளைப் பெறுகின்ற வாய்ப்பு இருக்கின்றது” என்று தெரிவித்தது.

இவ்விடயத்தைப் பார்க்கும் போது, புற்றுநோயும் குறைமாதப் பிறப்பு மட்டும் இங்கே பிரச்சினை அல்ல. “குர்திஸ்தான் பிரதேச அரசின் (Kurdistan Regional Government) நிர்வாகத்தில் வாழுகின்ற 15 வயதுக்குக் குறைவான பிள்ளைகளைப் பொறுத்த வரையில், ஈரானில் உள்ள அதே வயதுப் பிள்ளைகளுடன் ஒப்பிடும் போது, சுவாசப்பகுதி தொடர்பான வைரசுகள் அவர்களுக்கு இரண்டு மடங்காக இருப்பதாக” குளோபல் பீடியாற்றிக் ஹெல்த் (Global Paediatric Health) என்ற அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவு தெரிவித்தது. தங்களது பிரதேசத்தில் வாழும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படுவதன் காரணத்தால் 2023ம் ஆண்டில் பெற்றோலிய வாயுவை எரிக்கும் நடைமுறையைக் குறைக்குமாறு அந்தப் பிரதேச அரசு எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனங்களுக்குக் கட்டளையிட்டது. 18 மாத அவகாசத்தை அவ்வாறான நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அரசு வழங்கியிருந்தது.

2018ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை செய்மதிகள் மூலம் திரட்டப்பட்ட தரவுகளைப் பார்க்கும் போது, மேலதிக வாயுவை எரிக்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. சுற்றாடலை ஆய்வு செய்யும் ஈஆர்சி (Environmental Reporting Collective) என்னும் அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையாக குறிப்பிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஏர்பில் நகரமும் அதனைச் சுற்றியிருக்கும் கவர்கொஸ்க் மற்றும் லலிஷ் (Lalish) உட்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளே இவ்வாறான வாயு எரிக்கும் நடைமுறையால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன என்றும் அந்த ஆய்வின் முடிவு மேலும் தெளிவுபடுத்தியது.

குளிர்காலத்தில் இவ்வாறான வாயு எரிக்கும் நடைமுறையில் ஒரு வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. அதற்குக் காரணம் என்னவென்றால் இவ்வாறாக உற்பத்தி செய்யப்படும் வாயு நேரடியாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கோடைகாலத்தில் வீடுகளால் அந்த வாயு அதிகம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் 2018ம் ஆண்டு மற்றும் 2019 ஆண்டுகளில் பெறப்பட்ட வரலாற்று ரீதியிலான தரவுகளுடன் ஒப்புநோக்கும் போது, வாயுவை எரிக்கும் செயன்முறை குறைந்ததாகத் தெரியவில்லை. கோடைகாலங்களில் எரிவாயுவை எரிக்கும் செயற்பாடுகள் மீண்டும் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டது. வெப்பம் அதிகமான காலங்களில் வீடுகள் வாயுவை அதிகம் பயன்படுத்தவில்லை.

நன்றி: அல்ஜஸீரா