மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக அன்னை பூபதி !!

361 Views
தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயங்களை அடைய, காலத்தின் நிலைமைகளுக்கு அமைய தனது தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வது போல், தற்போதைய உலக நிலைமைகளுக்கு அமைய, நினைவேந்தல் நிகழ்வுகளையும், மக்கள் சந்திப்புக்களையும் மெய்நிகர் தகவல்தொழில்நுட்ப பரிமாணத்தில் மாற்றியுள்ளதன் முதன்நிகழ்வாக தமிழீழத் தாய்மார்களது தியாகத்தின் குறியீடாக இருக்கின்ற நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32வது ஆண்டு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்பட்டது.

1988ம் ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டு தமிழர் தரப்புக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவம் யுத்தநிறுத்தத்தினை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடவேண்டும் என கோரிக்கையுடன் 1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி தனது சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கிய அன்னை பூபதி, 31 நாட்களின் பின்னர், ஏப்ரல் 19ம் நாள் தனதுயிரை தமிழீழ தேசத்துக்கு காணிக்கையாக்கியிருந்தார்.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை தந்த தமிழீழத் தாய்மார்களது குறியீடாக அன்னை பூபதி ஆண்தோறும் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தை முடக்கியுள்ள நிலையிலும் அன்னை நினைகூரப்பட்டுள்ளார்.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் தாய்மார்கள், தமிழர் தாயகத்தில் நினைவேந்தியிருக்க, மெய்நிகர் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் ஊடாக புலம்பெயர் தேசங்களையும், தமிழ்நாட்டையும் ஒருங்கிணைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

கவிதை, அன்னையின் நினைவுப் பகிர்வுகள், சிறப்புரை என அமைந்திருந்த இவ்மெய்நிகர் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து தமிழ்உறவுகள் பங்கெடுத்து நினைவேந்திக் கொண்டனர்.

தமிழீழ தாய்மார்களின் குறியீடாக அன்னை பூபதி இருப்பதற்கு சான்றாக இன்று தமிழர் தாயகத்தில் தொடர்சியாக நீதிக்கான போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களது ஓயாத போராட்டத்தினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த உறுப்பினர் பாலா அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ தேசத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் நாம் அனைவரும் நாட்டுப்பற்றாளர்களாக பங்காற்ற வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply