முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்

நன்றி: rt.com
தமிழில்: ஜெயந்திரன்

மேற்குலகத்தின் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த சில வாரங்கள் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உக்ரேன் – ரஷ்ய யுத்தம் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு சோர்வான தன்மையை நோக்கி அண்மைக்காலமாக நகர்ந்துகொண்டிருந்தன. இவ்வாறான ஒரு பின்புலத்தில், இஸ்ரேல் மீது ஈரான் அண்மையில் தொடுத்த தாக்குதல், றொனால்ட் றேகனை அவரது புதைகுழியிலிருந்து விழித்தெழ வைத்தது மட்டுமன்றி, அத்திலாந்திக் சமுத்திரத்தின் இருபுறமும் பழமைவாதக் குரல்களுக்கு ஒரு புதுவித எழுச்சியையும் கொடுத்திருக்கின்றது.

01 முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான மைக் ஜோண்சன், தனது நிலைப்பாட்டிலிருந்து முற்றுமுழுதாக 180 பாகை திரும்பி, தான் ‘ஒரு றேகன் வழிவந்த குடியரசுவாதி’ என்று முழக்கமிட்டதோடு, ‘தீமையின் அச்சு’ என்று முன்னர் விபரித்து, நீண்டகாலமாகத் தான் தடுத்து வந்த, வானியல் தொடர்பான வெளிநாட்டுச் செலவுகள் சம்பந்தப்பட்ட உதவிக்கோரிக்கைகள் பலவற்றுக்கு நிதிவழங்குவதற்கு தற்போது அனுமதி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமன்றி திடீரென்று ரிக்ரொக் சமூக வலைத்தளம் மீது எங்கோ இருந்து கொண்டுவரப்பட்ட தடையும் அவசரஅவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, இதுவரை வழங்கப்படாத அளவில், தனது மிகப் பெரும் நிதியுதவித் தொகையை உக்ரேனுக்கு வழங்குவதற்கு ஐக்கிய இராச்சியம் தீர்மானித்திருப்பதுடன், அதன் பிரதம மந்திரியான றிஷி சுணக், சர்வாதிகார அரசுகளின் அச்சு என்று கூறி, கருத்தியல் ரீதியிலான போர்ச் சொல்லாடல்களை வீசியெறிந்திருக்கிறார். இதே நேரம், போரின் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் என்று கருதி, இதுவரை கொடுக்காமல் தடுத்த வைத்திருந்த, 300 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கக்கூடிய ஏரிஏசிஎம்எஸ் (ATACMS Missiles) ஏவுகணைகளை உக்ரேனுக்கு பைடன் ஏற்கனவே அனுப்பியிருப்பதான செய்தியும் தற்போது வெளியில் கசிந்திருக்கிறது. இது இப்படியிருக்க ஏராளமான சீன ஏற்றுமதிப்பொருட்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபரான ஊர்சுலா வொண் டேர் லேயன் சீனா மீது ஒரு பொருண்மியப் போரை முடுக்கிவிட்டிருக்கிறார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தற்போது ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும், தமது தவறுகளை வெள்ளையடிப்பதற்காகப் பயன்படுத்துவது மட்டுமன்றி, உக்ரேன் யுத்தம், மற்றும் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு போன்ற விடயங்கள் காரணமாக, தாம் தொடர்ச்சியாக இழந்துவரும் மக்கள் ஆதரவை மீளவும் பெற்றுக்கொள்ள இந்த முறுகல் நிலையைப் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பத் தோன்றுகிறது. இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதலைத் தொடுக்கக் காரணமாக இருந்த டமாஸ்கசில் அமைந்திருக்கும் ஈரானியத் தூதரகத்தின் மீது இஸ்ரேலினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல், வேண்டுமென்றே இவ்வாறான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதுமட்டுமன்றி, பிரதம மந்திரி நெத்தன்யாகுவும் மேற்குலக அரசுகளும் இதுவரை சந்தித்து வந்த எதிர்ப்புகளைக் குறைப்பதற்காகவும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

02 1 முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்தமது செயற்பாடுகளால் தாம் தூண்டிவிட்ட யுத்தங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, வோஷிங்டனிலும் சரி, இலண்டனிலும் சரி, தற்போதுள்ள அதிகார மையங்கள் எந்தவிதத்திலும் தயாராக இல்லை என்பதையே இவ்வாறான விடயங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. இவை போதாதென்று, மூன்றாவதாகச் சீனாவுடன் ஒரு யுத்தத்தையும் தொடங்குவதற்கான முனைப்புகளை இந்த நாடுகள் காட்டிவருகின்றன. அறநெறி ரீதியில் மேற்குலகம் இதுவரை அனுபவித்து வந்த மேலாண்மை இஸ்ரேல்-காஸா யுத்தத்தின் காரணமாக சுக்குநூறாக உடைவதை இவர்கள் எந்தவிதத்திலும் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. இங்கு, மேற்குலகின் கொள்கை ‘ஒருவரின் இழப்பு மற்றவரின் வெற்றி’ என்ற சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதுடன், தங்கள் மேலாண்மையைத் தாங்கள் இழந்துவிட்டதாக ஒப்பாரி வைப்பது மட்டுமன்றி, அந்த மேலாண்மையை எந்த விலை கொடுத்தும் மீண்டும் நிலைநாட்டவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உலகை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கு மேற்குலகிடம் எந்தவிதமான தூரநோக்குப் பார்வையும் இல்லை என்பது மட்டுமன்றி, முன்னர் இருந்த நிலைக்கு உலகை மீண்டும் கொண்டு போக வேண்டும் என்பது மாத்திரம் அவர்களது இலக்காக இருக்கின்றது. உலகில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் பல்துருவத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இவர்கள் எவரும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இவ்வாறான காரணங்களால், இவ்வாறான அரங்குகளில் சமரசம் செய்வதற்கு இந்த மேற்குலகத் தலைவர்கள் எவ்விதத்திலும் தயாராக இல்லை என்பதுடன், எந்த சூழலிலும் மூலோபாய ரீதியிலான விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதற்கு இவர்கள் தயாராக இல்லை. உக்ரேனில் நடைபெறும் போரைப் பொறுத்தமட்டில் ‘புட்டினைத் தோற்கடிப்பது’ மட்டுமே இவர்களது இலக்காக இருப்பதுடன், நிலைமை இன்னும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இவ்வாறாக ஒரு பினாமி யுத்தத்தை (proxy war) நோக்கி அங்குலம் அங்குலமாக நிலைமை மோசமாகிக்கொண்டு வருவது அவதானிக்கப்பட வேண்டும். நேட்டோ அமைப்பின் இராணுவ ஆலோசகர்கள் ஏற்கனவே களத்துக்குச் சென்றிருப்பது மட்டுமன்றி, ரஷ்யா மீது உக்ரேன் தற்போது முன்னெடுக்கும் தாக்குதல்கள் நேட்டோவின் புலனாய்வு அமைப்பினால் வழிநடத்தப்படுவது மட்டுமன்றி, பிரித்தானிய உயர்தர இராணுவ அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்படுவதையும் அறியமுடிகின்றது.

மேற்குலகத்தின் ஊடகத்தைப் பொறுத்தவரையில், குறிப்பாக பிரித்தானியாவின் ஊடகங்கள் போரைப் பற்றியே தற்போது பேசிக்கொண்டிருக்கின்றன. (அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஊடகங்கள் இடையே வித்தியாசமான பார்வைகள் உண்டு). பிபிசி ஊடகமானது இடைவிடாது உக்ரேனின் பரப்புரைகளை தாமும் பெரிய அளவில் எடுத்துவைப்பதுடன், போதிய ஆதாரங்களோ அல்லது நடைமுறைப் பெறுமதியோ இன்றி, உக்ரேனுக்கு உதவியாக அமையக்கூடிய வகையில் தமது பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன என்பது மட்டுமன்றி இதற்குமாறான குரல்கள் அனைத்துமே மௌனமாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது தொடர்பாக எந்தவிதமான சிந்தனையும் மேற்கொள்ளப்படாமல், ரஷ்யாவுடன் ஓர் முழுமையான யுத்தத்தை முன்னெடுக்க இவர்கள் முடிவு செய்திருக்கக்கூடும். ஆகவே தான், இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான அதிர்வலைகள் அனைத்தும் எல்லா முனைகளிலும் போரைத் தீவிரப்படுத்துவதற்கே பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தேர்தல்கள் அண்மித்து வருவது இவ்வாறான ஒரு அணுகுமுறைக்கு இன்னும் ஓர் முக்கிய காரணமாகும்.

இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக, இரண்டாம் உலகப் போரின் பின்னரான எந்தக் காலகட்டத்திலும் இருக்காத வகையில், தற்போது, மிகவும் ஆபத்தானதும் நிச்சயமற்றதுமான ஒரு கண்ணோக்கை தற்போதைய உலகம் எதிர்கொள்கிறது. நிலைமைகளை தீர ஆராய்ந்து அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்த பனிப்போர் காலத்தில் நாம் கண்ட தலைவர்களைப் போலன்றி, இப்போதுள்ள தலைவர்களோ, ஆக்ரோஷமானவர்களாகவும் தாம் தான் மீட்பர்கள் என்ற மனநிலையிலும், தமது மேலாண்மையை உறுதிப்படுத்துவதையுமே காணமுடிகின்றது. இந்தத் தலைவர்கள், உலகில் ஸ்திரமான தன்மையை விரும்புவதற்குப் பதிலாக 1914ம் ஆண்டுக்கு முன்னர் உலகில் நிலவிய சூழ்நிலையையே பிரதிபலிக்கிறார்கள். இவ்வாறான காரணங்களினால், போர் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு இந்த மேற்குலகத் தலைவர்கள் எந்தவிதமான முயற்சியையும் எடுக்காமல், தேவைப்பட்டால், போரை முன்னெடுக்க மட்டுமே இவர்கள் தயாராக இருக்கிறார்கள். பிரித்தானிய இராணுவக் கட்டமைப்பும் ஊடகங்களும் அண்மைக்காலங்களாக கட்டாய ஆட்சேர்ப்புத் தொடர்பாகப் பேசிவருவதை அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது. அமெரிக்காவில் அடுத்து நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெறுவாராக இருந்தால் எல்லா முனைகளிலும் போர் தீவிரமடையும் என்பதை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இவ்வாறான அனைத்தையும் கண்ணோக்கும் போது, மூன்றாம் உலகப் போர் என்பது ஏற்கனவே மக்கள் மத்தியில் நிலவுகின்ற அச்ச உணர்வுகளை பெரிதுபடுத்தும் ஒரு நாடகம் என்பதற்கு அப்பால், அது நாம் நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு யதார்த்தம் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.