முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன் 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப்பாரிய உணர்வெழுச்சியுடன் ஆயிரக் கணக்கான தாயக உறவுகளின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படு கொலை நாளான மே 18ஆம் நாளன்று நடை பெற்று நிறைவடைந்திருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் செய்யப்பட்டிருக் கின்றது. குறித்த பிரகடனத்தில் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்தினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது.
ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரச  அடக்குமுறைக்கெதிராகவும், சிங்கள ஒற்றை யாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன் களுக்காக தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்கு முறைக்கெதிராகவும், போராட அணிதிரள்வதை தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்பட வில்லை.
இரத்தம் தோய்ந்த இம் மண்ணிலிருந்து போராட, கனத்த காற்றுச் சுமந்து வரும் எம்
மவர்களின் நினைவுகளின் மீதும், நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கை மீதும் சபதம் செய்வோம் என்றுரைத்து ஐந்து முக்கிய விடயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில்,
• சிங்கள-பௌத்த மயமாக்கப்படும் தமிழர் தாயகம் சிங்கள- பௌத்த மயமாக்கலைத் தடுக்கவும், தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ் வியலாக்கவும்
• ஈழத்தமிழ் இன அழிப்பில் சர்வதேச நீதி வேண்டி, அரச பொறுப்பையும், மேற்குலக நாடுக ளின் உடந்தைத் தன்மையையும் வலியுறுத்தி, குற்றவாளிகளை குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்தவும்,
• தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக் குரியவர் கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒரு போதும் பாரதீனப் படுத்த சுயநிர்ணய அடிப் படையிலும், தமிழர்க ளின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும்,
• கூட்டு ஈழத்தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்க்கப்
பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை தடுக்கவும்,
• தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழ் இன அடக்கு முறைக் கெதிராக தமிழ் இன விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்தும் அடிபணியாது போராடுவோம் என்று அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.
இரத்தினச்சுருக்கான தமிழின விடு லையை வெளிப்படுத்தி நிற்கும் பிரகடனம். பொறுப்புக்கூறலும், அரசியலுரிமைகளும் வெவ் வேறாக கையாள முடியாதவை என்பதை அழுத்திக் கூறியிருக்கின்ற பிரகடனம். வரவேற்கத்தக்கது. ஆனால் பிகடன இலக்குகளை அடைவதற்கு என்ன வழி என்பது கேள்விக்குரியது.
2009இல் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பு நடந்தேறி 16வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தற்போது வரையில் ஒட்டுமொத்த சர்வதேசமும் மௌனம் சாதித்தே வருகின்றது. ஆனால் ஆட்சிப்பீடத்தில் மாறி மாறி இருக்கும் சிங்கள, பௌத்த மையவாத அரசுகள் தொடர்ச்சியாக ‘கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில்’ ஈடுபட்டு வருகின்றன.
இனவழிப்பு, மனிதாபிமானச் சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகக் கொடூரமான மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை வரைமுறையற்ற வகையில் தமிழி னத்தின் மீது திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் பொறுப்புச் சொல்வதற்கும் தயாராக இல்லை.
பல்லினங்களைக் கொண்ட தீவை, சிங்கள, பௌத்த தீவாக மட்டும் பிரகடனப்படுத்தும் திட்டத்தோடு, உலகநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன் படுத்தி, வக்கிரமான வழிமுறைகளிலேயே கொடிய போரை அரச கட்டமைப்பு முன்னெடுத்தது என்பது பரகசியமான விடயம்.
தென்னிலங்கை தேசிய கட்சிகள் தான் அவ்வாறு நடந்து கொள்கின்றன என்றால் ஆட்சிப்
பீடத்தில்; அமர்ந்திருக்கும் ஜனாதிபதி அநுரகு மாரவின் அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை மிகக்குறுகிய காலத்திலேயே வெளிப் படுத்திவிட்டது.
தாயக கோட்பாட்டை உடைப்பதற்கும், தமினத்தின் மீது உக்கிரமான போர் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் ராஜபக்ஷக்களுக்கு முட்டுக்கொடுத்த தரப்புத் தான் ஜே.வி.பி. அதன் தலைமையில் தேசிய மக்கள் சக்தியாக பரிணமித்திருக்கும் அத்தரப்பு ‘முறைமை மாற்றத்தை’ மையப்படுத்தி ஆட்சிப் பீடம் ஏறியதால் முற்போக்காக செயற்படும், பாரபட்ச மின்றி செயற்படும் போன்ற எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தது.
ஆனால் ஆட்சிப்பீடத்திலேறி ஆறுமாதங் களுக்குள் அனைத்தையும் அநுர அரசாங்கமே சிதைத்துக்கொண்டுள்ளது. தன்னுடைய உண்மையான முகத்தினை அப்பட்டமாக வெளிப்படுத்தி யிருக்கின்றது.
குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முற்றம் கண் ணீரால் தோய்ந்திருக்கையில் அதற்கு மறுநாள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள போர் வீரர்களுக்கான நினைவிடத்தில் ‘போர் வெற்றி விழாவும், நினைவேந்தல் நிகழ்வும்’ ஏற்பாடாகியிருந்தது.
இந்த நிகழ்விற்கான உத்தியோக பூர்வ மான அறிவிப்பைச் செய்தவர் பாதுகாப்புச் செயலாளர் ஏயர் வைஷ்மார்ஷல் சம்பந் தூயகொந்தா. அந்த அறிவிப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையிலேயே குறித்த நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
போர் நிறைவடைந்து கடந்த 16ஆண்டுக ளில் பதவியில் உள்ள ஜனாதிபதிகளே போர் வெற்றி விழாவுக்கு தலைமையேற்பது வழக்கம். ஆனால் அநுர ஆரம்பத்தில் அதற்கு தயாராக இருந்திருக்காதபோதும் பின்னர் சிங்கள பொளத்த மையவாத ஆட்சியின் தூண்களாக இருக்கும் பௌத்த தேரர்களும், பாதுகாப்புத்துறையும் ராஜபக்ஷக்களின் திட்டமிடலும் அநுரவை இறுகப் பிடித்து நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.
ஈற்றில் ஜனாதிபதி அநுர தான் குறித்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். இராணுவத்தை பாதுகாத்து உரையாற்றினார். குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார். பொறுப்புக்கூற வேண்டிய விடயங்கான காணாமலாக்கப் பட்டவர்களின் அன்புக்குரிய உறவுகளுக்கு பதிலளிப்பைத் தவிர்த்து வடக்கு மக்களின் பிரச்சினை யும், ஊழியத்துக்காக படைகளில் சேர்ந்தவர்கள் மற்றும் குடும்பங்கள் போரின் பின்னர் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளையும் சமநிலைப் படுத்த முயன்று தோற்றுப்போனார்.
எனினும் அநுரகுமாரவும் ‘சிங்கள,தேசிய பௌத்த மையத்துக்குள்’ ஊறித்திழைத்துப் போனார் என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் இருக்க முடியாது. இந்த நிலைமை தான் ராஜபகஷக்கள் மீண்டும் அரங்கிற்கு வருகை தருவதற்கு வித்திட்டிருக்கின்றது.
மஹிந்த,கோட்டா, நாமல் உள்ளிட்ட தரப்புக்கள் போர் வெற்றிவிழாவுக்கு மறுநாள் தேசிய வீரர்களுக்காக தமது அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம் என்ற பெயரில் செயற்பாட்டு அரசியல் தளத்துக்கு வந்திருக்கின்றார்கள்.
இவ்வாறு நிலைமைகள் இருக்கையில், தற்போது முள்ளிவாய்க்கால் மக்கள் பெரு வெள்ளத்துக்குள் பிரகடனம் செய்தாகிவிட்ட நிலையில் அடுத்தகட்டம் சம்பந்தமாக கடந்த காலங்கள் போலல்லாது முக்கிய சில தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை தமிழினத்துக்கே ஏற்பட்டுள்ளது.
அதில் முதலாவது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பதற்கு நிரந்தமான தூபியொன்றை அமைப்பதாகும். இது தமிழினத்தின் அடையாளமாக பிரகடனப் படுத்தப்படல் வேண்டும். இரண்டாவது, போரின் போதான அவலங் களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் தாங்கிய கலையகமொன்றை நினைவுத்தூபிக்கு அருகில் நிர்மாணித்தலாகும்.  இந்த இரு செயற்பாடுகளும் பரம்பரை ரீதியான பாய்ச்சலுக்கும், பாதிக்கப் பட்ட எதிர்கால சந்ததியின் மீட்சிக்கும் உதவுவதாக இருக்கும்.
மூன்றாவதாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்களை முன்னின்று முன்னெடுக் கும்  ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு(வடக்கு-கிழக்கு) செயற்பாட்டு ரீதி யான விரிவாக்கத்தையும் எதிர்கால பாதைவழி வரைபடத்தையும் தயாரிக்க வேண்டியுள்ளது.
வெறுமனே முல்லைத்தீவுக்குள் குறித்த கட்டமைப்பை முடங்குவதும், வரையறுத்துச் செயற்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவொரு விடயமாகும். ஏனென்றால், தாயக தேசமெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே நினைவேந்தலின் பங்குதாரர்கள்.அதுமட்டுமன்றி குறித்த கட்டமைப்பு பிரகடனத்தினை தனியாக இறுதி செய்ய முடி யாது. மாவட்ட அடிப்படையில் ஏகமனதான ஏற்றுக்கொள்ளலுடன் பிரகடனம் இறுதி செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு இறுதி செய்யப்படுவதன் ஊடாகவே செய்யப்படுகின்ற பிரகடனம் அடுத்த நினைவேந்தலுக்குள் எவ்வளவ தூரம் நடைமுறை ரீதியான அடைவு மட்டத்தினைக் கண்டிருக்கின்றது என்பதை அளவிட முடியும். அது இலக்கு நோக்கி மக்களை கூட்டாக அணிதிரட்டுவதற்கு வழிசமைப் பதாக இருக்கும்.
நான்காவதாக, தாயகத்தில் தெருவுக்குதெரு குழுக்களாகவும், அணிகளாவும் பிரிந்து நின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகளிலே முதலாம், இரண்டாம் போரில் மரணித்தவர்களுக்கான அஞ்சலிகள் ஓரிடத்தில் தான் நடைபெறுகின்றன. அவ்வளவு ஏன் போர் வெற்றியைக் கொண்டாடும் சிங்கள தேசத்துக்குள் ஆயிரம் முரண்பாடுகள் கொண்ட அரசியல், சிவில் அமைப்புக்கள் காணப்பட்டாலும் அவை மே 19இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுரவிலேயே கூடுகின்றார்கள். அஞ்சலித்து போர் வெற்றியை முன்னெடுக்கின்றார்கள்.
ஆகவே, பாதிக்கப்பட்ட உறவுகள் அரசி யல், மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்து நின்று நிகழ்வுகளை முன்னெடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டு அனைவரும் அணிதிரண்டவொரு பாரிய நிகழ்வாக மே-18முன்னெடுப்பதற்குரிய ஏகமனதான அங்கீகாரம் அவசியமாக உள்ளது. அதுமட்டுமன்றி, இந்த விடயத்தில் அரசி யல்,சிவில் தரப்புக்ககளின் கூட்டிணைவு தான் மக்களை ஓரிடத்தில் ஓரணியாக திரளச் செய்யும் என்ற ஆகக்குறைந்த புரிதல் அவசியமாகும். இதில் தீட்டுப்பார்த்துக்கொண்டிருப்பது வீணான செயலாகும்.
ஐந்தாவதாக, புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வீதிக்குவீதி, அமைப்புக்களின் பலத்தைக் காண் பிப்பதற்காக முன்னெடுக்க கூடாது. உண்மையான உணர்வெழுச்சியுடன் ஒரு நாட்டில் பிரதான இடமொன்றில் முன்னெடுக்கும் வகையில் அணிதிரள வேண்டும். அவ்வாறு அணி திரள்வதன் ஊடாகவே தாயகத்தில் காணப்படும் உள்ளக பிரிவுகளுக்கு முடிவு கட்ட முடியும்.
ஆறாவதாக, ஒட்டுமொத்த தரப்பினரும் ஒன்று கூடி நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்து பிரகடனத்துக்காக உரத்துக் குரலெழுப்பும் போது தான் அந்த ஒலியின் அதிர்வு சில செவிப்பறைகளை அடையயும் என்ற புரிதல் அவசியமானது. இதில் தனிப்பட்ட அடைவு மட்டங்களை தாண்டி, இனரீதியான அடைவே மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஆகவே, சிறு முரண்பாடுகளை சில்ல றைக் கதைகளாக கூறுவதைத் தவிர்த்து முள்ளி வாய்க்கால் நினைவேந்தலின் ஓரணியாக ஒருங்கி ணைந்து திரள்வதே தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் காத்திரமான செயற் பாடாக இருக்கும்.
அந்தத் திரட்சி பல செய்திகளை ஆட்சியாளர்களும், சர்வதேச சமூகத்துக்கும் தெரிவிக் கும். அவ்விதமான செயற்பாடுகள் தான் பிரகட னங்களை நடைமுறையில் சாத்தியமாக்கும். இல் லாது விட்டால்முள்ளிவாய்க்கால் பிரகடனம் ஆண்டுதோறும் ஏட்டுச்சுரக்காயாகவே இருக்கும்.மேற்கண்ட விடயங்களை அடைந்து தமிழினம் தனது அபிலாஷைகளை தொட்டுப்பார்ப்பதற்குரிய நகர்வுகளைச் செய்வதற்கான பொருத்தமான தருணம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இந்த தருணத்தினை புரிந்தறிந்து நகர்வது இனவிடுதலைப் பயணித்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும். அதுவே முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சியான திரட்சியின் அறுவடையாக இருக்கும்.