இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை நாட்டின் முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அங்கு விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் எனும் புத்த பிக்கு புற்று நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் அவரது உடல் கோயில் வளாகத்திற்குள்ளேயே எரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கின்றது.
இது அங்கு வாழும் தமிழ் மக்களிடையே தேவையற்ற பதற்றத்தையும், பெரும் பீதியையும் உருவாக்கி, இரு இன மக்களிடையே மோதல் நிகழ்கின்ற சூழலை உருவாக்கியிருக்கின்றது.
புத்த பிக்குவின் உடலை கோயில் வளாகத்திற்குள் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும்கூட, அதனைத் துளியும் மதியாது காவல்துறையின் கண்முன்னே அவர்களின் துணையோடு பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த அநீதியைத் தட்டிக்கேட்ட வளக்கறிஞர்களும், கோயில் நிர்வாகிகளும், அப்பாவித் தமிழ் மக்களும் சிங்கள வெறியர்களின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இது தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் தொடர்ச்சியான வன்மத்தின் வெளிப்பாடே என்பது தெளிவாகத் தெரிகின்றது.
சிங்களப் பேரினவாதத்தின் ஆதிக்கத்தினை தொடர்ந்து நிலைநாட்டவும், சிங்களமயமாக்கலைத் துரிதப்படுத்தி செயற்படுத்தவும் முல்லைத்தீவில் நடைபெற்ற இச்சம்பவமானது வன்மையான கண்டனத்திற்குரியது.
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் மீண்டும் தமிழர்களுக்கெதிராக ஒரு இனப்படுகொலை நடப்பதற்கான அறிகுறியே இச்சம்பவம் என்பதைப் பன்னாட்டு சமூகம் உணர வேண்டுமென அங்கிருக்கும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள். இதுவே ஈழ நிலத்தில் இன்று நிலவும் சூழலாகும்.
தமிழர்களுக்கு எதிராக தொடரும் இத்தகைய அநீதிகள் யாவும் தமிழர்கள் மீதான சிங்கள இனப்பகையின் விளைவாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவையே. ஓர் இனப்படுகொலையை நடத்தி முடித்து இரண்டு இலட்சம் உயிர்களைப் பலியெடுத்த பின்னரும் சிங்களப் பேரினவாதம் தனது கோரப்பசி அடங்காது இன்னும் தமிழ் உயிர்களை காவு வாங்கத் துடிக்கின்றது என்பதன் மூலம் தமிழர்களும், சிங்களவர்களும் இலங்கை என்னும் ஒற்றை நாட்டிற்குள் இனியும் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதை உலகத்தினர் உணரவேண்டும்.
தமிழ்த்தேசிய இன மக்களுக்கு எதிராக நிகழும் இத்தகைய பேரவலத்திற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியது எட்டுக்கோடித் தமிழர்களை உள்ளடக்கி வாழும் இந்தியப் பேரரசின் தார்மீகக் கடமையாகும்.
அதற்குரிய அழுத்தத்தை தமிழக அரசானது இந்தியப் பெருநாட்டை ஆளும் பாஜக அரசிற்குத் தரவேண்டும் என இத்தருணத்தில் மீண்டுமொரு முறை நினைவுட்டுகின்றேன்.
ஆகவே, பன்னாட்டு சமூகமும், ஐ.நா.பெருமன்றமும் இனியாவது ஈழ நிலத்தில் நிகழ்ந்த படுகொலைக்கு ஒரு சுதந்திரமான எவரது தலையீடடுமற்ற பன்னாட்டு விசாரணையை நடத்தி, ஈழ மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகின்றேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.