2009 இல் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி நேற்று(12) இரவு உடைக்கப்பட்டுள்ளது.
நேற்று நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் பொது நினைவுக்கல் ஒன்று நடுகைக்காக கொண்டு வரப்பட்டதையடுத்து, அங்கு படையினர், மற்றும் பொலீசார், படைப் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு படையினருக்கும் நினைவேந்தல் கட்டமைப்பினை சேர்ந்தவர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது
குறித்த பகுதி முல்லைத்தீவு பொலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதால் முல்லைத்தீவு பொலீஸ் நிலைய அதிகாரிகள், பொலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு எந்த பணிகளும் செய்யக் கூடாது என அறிவித்துள்ளனர்.
நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவிற்கொள்ள உரிமை உண்டு என தங்கள் நிலைப்பாட்டினை பொலீசாருக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து நேற்று இரவு தொடக்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதி பொலீசாரின் பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிகளில் படையிரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இரவோடு இரவாக நினைவுக்கல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நினைவுத்தூபியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையை காரணமாக கூறி முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.