முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1

674 Views

எனக்கு வழமை போல திடீர் பயணம் தான். ஆனால் போய் வந்த பிறகு என்னட்ட சொல்லாம போயிட்டீங்களே. சொல்லியிருக்க நானும் வந்திருப்பேன் என புலம்பியவர்கள் தான் அதிகம்.

நான் போனதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு போன பயணங்களில் முதல் இடம், இந்த இடத்துக்கு தான் கொடுப்பேன்.

மட்டக்களப்பில் இருந்து அண்ணளவாக 142 மைல்கள் தொலைவில் கொட்டியாகல எனும் இடம் உள்ளது. இங்கு செல்வதே பெரும் பாடாக இருந்தது. மக்கள் வசிக்கும் கடைசி கிராமம் இது தான். அதனால் கடைசி 10 மைல் அளவு பாதையை கடப்பதற்கு சற்று கடினமானதாக இருந்தது.

கொட்டியாகலயில் இருந்து தான் காட்டு வழி தொடங்குகிறது. காட்டில் ஜீப், உளவு இயந்திரம் மூலமாக மட்டும் தன் செல்ல முடியும். மழை இல்லாத நேரத்தில் உந்துருளிகளில் சிலர் பயணம் செய்வதுமுண்டு.

வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் ஐயா மூலமாக இன்னும் 17 முகப்புத்தக நண்பர்களுடன் இணைந்தவாறு கபிலித்தை புனித யாத்திரை செல்வதற்கான திட்டங்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே தீட்டப்படுகிறது.

வாகன செலவு 2500 ரூபாயாகவும் சாப்பாட்டு செலவு 500 ஆகவும் மொத்தம் 3000 ரூபாய் ஒருவருக்கு செலவாகும் என திட்டமிடப்பட்டது.

கபிலித்தை என்பது ஒரு புனித வனம். முருகன் வள்ளியை சந்தித்த புளியமரத்தடி இந்த வனத்தில் தான் உள்ளது. இந்த புனித தன்மையை தொடர்ச்சியாக பேணுவதற்காக அங்கு செல்பவர்கள் அனைவரும் 21 நாள் கடுமையான விரதம் இருந்து தான் செல்ல வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி.

விதியை மீறினால் காட்டில் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என்ற பயத்தினால் பயபக்தியுடன் அனைவரும் விரதம் இருக்க ஆரம்பித்தோம்.

ஜூலை 4 ஆம் திகதி பூரணை நாளன்று செல்வோம். அது தான் சிறப்பாக இருக்கும் என அந்த நாளையே கபிலித்தை செல்வதற்கு ஒதுக்கினோம்.

சென்றால் உடனே திரும்ப முடியாது ஒரு நாள் காட்டில் தங்கிவிட்டு, அடுத்த நாள் வெளிச்சம் உள்ள நேரத்தில் தான் வர வேண்டும். இருட்டிய பின் வகனத்தில் பயணம் செய்வது எவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

4 ஆம் திகதிக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என எண்ணியபடியே நாட்கள் கழிந்தது. தேவையான பொருட்கள், பூசை பொருட்களை எல்லாம் ஒழுங்கு செய்து எடுத்துகொண்டு அதிகாலை 3.30 அளவில் மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டேன்.

முகப்புத்தக நண்பர்கள் என்பதால் இலங்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்து வருகின்றனர். அனைவரும் 4 ஆம் திகதி காலை 7 மணிக்கு களுவொப்ப சந்தியில் சந்திப்பதாக திட்டம் இருந்தது.

அதிகாலை என்பதால் வாகன நெரிசல் எதுவும் இல்லை. இரண்டரை மணிநேர பயணத்தின் பின்னர் சியம்பலாண்டுவ சந்தியில் இருந்து மொனராகலை பக்கமாக 2 மைல் தொலைவில் உள்ள களுவொப்ப சந்திக்கு 6 மணியளவில் வந்து சேர்ந்தேன்.

அனைவரும் அவ் இடத்துக்கு வந்து சேரும் வரை அந்த சந்தியில் இருந்த சாப்பாட்டு கடையில் தேநீரும் ஒரு பணிஸ் உம் வாங்கி சாப்பிட்டு விட்டு அனைவருடனும் இணைந்து கொட்டியாகல நோக்கி பயணம் தொடர்ந்தது.

களுவொப்ப சந்தியில் இருந்து 20 மைல்கள் பயணம் செய்து கொட்டியாகல சந்தனவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். சந்தன 27 வயது இளைஞர். அவர் தான் அங்கிருந்து நாம் செல்வதற்கான ஏற்பாடுகள், திட்டங்கள் அனைத்தும் வகுத்து கொடுப்பவர்.

சந்தனவின் வீட்டில் காலை உணவாக அனைவருக்கும் இடியப்பம் வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடிவதற்குள் இரு உளவு இயந்திரங்கள் பின்னல் உள்ள பெட்டியில் மெத்தைகள் போட்டு அமர்ந்து செல்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு எம் முன்னால் வந்து நின்றது.

வேக வேகமாக நாம் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் உளவு இயந்திரத்தில் ஏற்றினோம். நேரம் காலை 10.30 மணியாகியதால், தாமதிக்காமல் கிளம்பினால் தான் இருட்டுவதற்கு முன் சென்றடையலாம் என சந்தனவின் அப்பா சத்தமாக சொல்லிக்கொண்டே அனைவரையும் வேகமாக செயல்பட வைத்தார்.

முதல் ஒரு மணி நேரத்தின் பின்னர் நல்ல பெரிய கூழா மரத்தடியில் இரு வண்டிகளும் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் 10 நிமிட ஓய்வு வழங்கப்பட்டது. அந்த 10 நிமிடத்தையும் நான் விழுந்து கிடந்த கூழாம் பழங்களை பொறுக்குவதிலேயே கழித்தேன்.

மீண்டும் 2 மணி நேர பயணத்தின் முடிவில் அடர்ந்த காட்டினை சென்றடைந்தோம் அங்கே சென்றதும் ஓரளவு மகிழ்ச்சி வெயிலில் இருந்து விடுதலை கிடைத்து விட்டது என்று.

காட்டினுள் போனதும் எமக்கு அங்கு வித்தியாசமானதொரு சவால் காத்திருந்தது. மரங்கள் அடர்ந்து இருந்தமையால் உளவுஇயந்திரம் இரு மரங்களுக்கிடையிலாக சென்றுகொண்டிருந்தது. பெட்டியின் வெளியே நமது கை வந்தால் மரமும் பெட்டியும் மோதும் போது மரத்தில் பட்டு கை துண்டிக்கப்பட்டு விடும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் கையை வெளியே வைக்கக் கூடாது என சந்தனவின் அப்பா எச்சரித்துக் கொண்டிருந்தார்.

3 மணி நேர பயணத்தின் பின் காட்டின் நடுவே ஒரு இளைப்பாறும் இடம் வந்தது. அங்கே ஏற்கனவே ஒரு டிரக்டரில் ஜிந்துப்பிட்டியில் இருந்து சிங்கள பக்தர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் எமக்கும் சேர்த்து கோப்பி போட்டு தந்தார்கள்.

அங்கே ஒரு முருகன் சிலை உயரத்தில் இருந்தது அதற்கு இலைகளை முறித்து வைத்து வழிபட வேண்டும். நாமும் அவ்வாறே வழிபாடுகளை செய்துவிட்டு அவர்கள் தந்த கோப்பியையும் அருந்திக்கொண்டு அவர்கள் தந்த உறைப்பான சம்பலும் பாணையும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்.

அதன் பின்னர் புறப்பட்ட நாம் சேற்றுப்பகுதியால் வந்து கொண்டிருக்கும் போது எமக்கு எதிர் திசையில் இருந்து இன்னும் 4 டிராக்டர்கள் ஒன்றாக வந்து சேர்ந்தன.

அப்போது வேகமாக சேற்று பகுதியால் சென்ற டிராக்டர் ஒன்று அவிடத்தில் தடம்புரண்டது. பின்னல் பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர்.

அவ்விடத்தில் இருந்த அனைவரும் தடம் புரண்ட பெட்டியை நிமிர்த்துவதற்கும் வீசி எறியப்பட்ட மக்களை தூக்குவதற்குமாக ஓடிச்சென்று 2 நிமிடத்துக்குள் அனைத்தையும் சரி செய்து விழுந்தவர்களையும் காப்பாற்றினர்.

பின் அனைவரும் சற்று நேரம் அவ்விடத்தில் தரித்து நின்று தடம் புரண்ட பெட்டியில் இருந்த கபிலித்தை பிரசாத்தத்தையும் பகிர்ந்து உண்டுவிட்டு. அவசரப்படாமல் பயணத்தினை தொடர்ந்தோம்.

12 சிற்றாறுகளை கடந்து இறுதியாக ஐந்தரை மணி நேரத்தின் பின்னர் குமுக்கன் ஆற்று கரையை வந்தடைந்தோம்.

அங்கு கபிலித்தையின் காவல் சிலை (வீரபாகு தேவர் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை) கையில் கத்தியுடன் எம்மை வரவேற்றது.

ஆற்றை கடந்தால் கபிலித்தை புனித வனம். ஆனால் உடனே ஆற்றை கடந்து சென்றிட முடியாது. அதற்காக சில சம்பிரதாயங்களை சரியாக செய்த பின்னரே அங்கு செல்ல முடியும்.

 – மட்டுநகர் திவா-

பயணம் தொடரும்….

Leave a Reply