யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர் என்று யாழ்ப்பாண ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது;
கீரிமலைப் பகுதியில் நேற்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விவரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விவரங்களை அளிக்குமாறும் கேட்டுள்ளனர். முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாகப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
என்ன காரணத்துக்காக முன்னாள் போராளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வந்த இராணுவத்தினரிடம் கேட்டபோது, அது பற்றி எதுவும் கூற முடியாது. எமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.
அதேநேரம், மக்களின் விவரங்களைப் புதுப்பிப்பதற்காகவே இவ்வாறு இராணுவத்தினர் தகவல்களைத் திரட்டி வருகின்றனர் என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையால் முன்னாள் போராளிகளின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர்.