முன்னாள் தென் ஆபிரிக்க அதிபருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை

நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக முன்னாள் தென் ஆபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு (Jacob Zuma) அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் 15 மாதச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பிட்டிருக்கிறது.

2018 வரை தென் ஆபிரிக்காவின் அதிபராகப் பதவி வகித்த சூமாவை 5 நாட்களுக்குள் சரணடையுமாறு நடுவர் உத்தரவிட்டார். அப்படி அவர் செய்யத் தவறினால், அவரைக் கைதுசெய்து சிறை அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்கக் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று  நடுவர் மேலும் தெரிவித்தார்.

துணை நீதியரசர் றேமன்ட் சொண்டோவின் (Raymond Zondo) தலைமையில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணைக்குச் சூமா சமூகமளிக்கவில்லை. சூமா அதிபராகப் பதவி வகித்த காலப்பகுதியில் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். அரச ஒப்பந்தங்களைத் தீர்மானிப்பது, அமைச்சர்களை நியமிப்பது உட்பட பல அரச முடிவுகளில் சூமாவின் நண்பர்களான குப்தா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டு சூமாவின் மேல் சுமத்தப்பட்டது.

“நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை சூமா புரிந்திருக்கிறார் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு வேறு எந்தத் தெரிவும் கிடையாது” என்று நடுவர் காம்பெப்பே (Khampepe) குறிப்பிட்டார்.

“சூமா நீதியின் முன் நிற்கும் ஒரு சாதாரணப் பிரசை அல்ல. அவர் தென் ஆபிரிக்கக்குடியரசின் ஒரு முன்னாள் அதிபர். அரசியல் அரங்கில் அவர் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தி வருகிறார். இவ்வாறாக நீதிமன்றத்தின் கடடளைகளைப் புறக்கணிக்கும்படி ஏனையோரைத் தூண்டிவிடக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் அதே வேளையில் அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பொதுமக்கள் கூர்ந்து அவதானித்து வருகிறார்கள். நீதிமன்றத்தை அவமதிக்கும் அவரது நடவடிக்கை உரியமுறையில் தண்டிக்கப்படாவிட்டால் சட்டத்தின் ஆட்சிக்கு அவரால் கணிசமான பாதிப்பு ஏற்படும். முன்னாள் அதிபர் என்ற வகையில் அரசியல் ரீதியான செல்வாக்கைச் செலுத்தக்கூடிய ஒருவராக அவர் திகழ்கிறார். சமூகத்தில் அவர் செலுத்தும் செல்வாக்கு இந்த தண்டனையை நியாயப்படுத்துகிறது” என்று நடுவர் காம்பெப்பே தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தென் ஆபிரிக்கக் குடியரசின் அதி உச்ச அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் (Constitutional Court) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் காரணத்தால் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையிடக்கூடிய எந்த வாய்ப்பும் சூமாவுக்கு இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.