முதலாம் உலகப் போரில் ஆர்மீனியர்கள் சந்தித்த படுகொலையை இனவழிப்பாக அமெரிக்கா ஏற்றிருக்கிறது – தமிழில் ஜெயந்திரன்

ஒட்டோமான் ஏகாதிபத்தியக் (Ottoman Empire) காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்மீனியன் மக்களின் படுகொலையை ஓர் இனவழிப்பு என்று உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க அதிபராக பைடன் திகழ்கிறார். இந்த அறிவிப்பு துருக்கிய அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விரிசல்களை ஏற்படுத்தலாம் என்ற போதிலும், பன்னாட்டு ரீதியில் மனித உரிமைகளுக்கு பைடனது ஆட்சியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற பலமான சமிக்ஞையை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

“ஒட்டோமான் யுகத்தில் நிகழ்த்தப்பட்ட ஆர்மீனியன் இனவழிப்பின் போது இறந்த ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வருடமும் இக்குறிப்பிட்ட நாளில் நாங்கள் நினைவு கூருகிறோம்” என்று குறிப்பிட்ட படுகொலையின் 106 வது நினை வுநாளில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பைடன் குறிப்பிட்டிருந்தார்.

1313549936.0 முதலாம் உலகப் போரில் ஆர்மீனியர்கள் சந்தித்த படுகொலையை இனவழிப்பாக அமெரிக்கா ஏற்றிருக்கிறது - தமிழில் ஜெயந்திரன்

“இன்றைய நாளில் நாம் இழந்தவர்களையும் இழந்தவற்றையும் நினைவு கூரும் அதே வேளை, எதிர்காலத்தை நோக்கியும் அதாவது, எமது பிள்ளைகளுக்காக நாம் கட்டியெழுப்ப ஆசிக்கின்ற உலகத்தை நோக்கியும் எமது பார்வையைத் திருப்புவோம். இன, மத, மொழி வாதம் என்பவற்றின் காரணமாகவும் சகிப்புத் தன்மை இல்லாத காரணத்தாலும் நாளும் நடைபெறும் தீமைகளால் கறைப்படுத்தப்படாத, அதே வேளை மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, மாண்புடனும் பாதுகாப்புடனும் மனிதர் எல்லோரும் தங்கள் வாழ்க்கையை வாழக் கூடிய ஓர் உலகையும் கட்டியெழுப்பவே நாங்கள் விரும்புகிறோம்.

இப்படிப்பட்ட கொடூரங்கள் உலகிலே எங்கும் நிகழாமல் தடுப்பதற்கு எமக்கிருக்கும் அர்ப்பணிப்பை இந்த நேரத்தில் நாம் புதுப்பித்துக் கொள்கிறோம். உலகில் வாழும் அனைத்து மக்கள் நடுவிலும் இழைக்கப்பட்ட கொடூரங்களினால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் குணமாகவும் நல்லிணக்கம் ஏற்படவும் நாம் உழைப்போம்.”

ஆர்மீனியன் மக்கள் மீது ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலையையும் இன்றைய துருக்கிக்கு அவர்கள் நாடு கடத்தப்பட்டமையையும் குறிப்பதற்கு இனவழிப்பு என்ற பதத்தைத் தான் பயன்படுத்துவேன் என்று தனது தேர்தல் பரப்புரையில் பைடன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக பைடனின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது. அக்குறிப்பிட்ட பிரதேசத்தில் இருக்கின்ற தமது ஒரு முக்கிய நட்பு நாட்டுடன் ஏற்கனவே உள்ள உறவு பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணிய முன்னைய அமெரிக்க அதிபர்கள் இனவழிப்பு என்ற பதத்தைப் பயன்படுத்த முன்வரவில்லை.

118173678 mediaitem118173677 முதலாம் உலகப் போரில் ஆர்மீனியர்கள் சந்தித்த படுகொலையை இனவழிப்பாக அமெரிக்கா ஏற்றிருக்கிறது - தமிழில் ஜெயந்திரன்

ஆர்மீனியப் படுகொலையை ஓர் இனவழிப்பு என அமெரிக்க அதிபர் அறிவிக்க இருக்கிறார் என்ற செய்தியை தமது நிர்வாகத்துக்கு வெளியே இருந்து கொண்டு இவ்விடயம் தொடர்பாக ஓர் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை மேற்கொண்ட தமது நட்பு நாடுகளுகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே பகிர்ந்திருந்தார்கள். “எம்மோடு இருக்கும் உறவை அமெரிக்கா இன்னும் மோசமாக்க விரும்பினால் அது அவர்களைப் பொறுத்தது” என்று  அமெரிக்கா இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிடக் கூடும் என்ற செய்தி கசிந்த வேளையில் துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவ்லுட் சவுசோலு (Mevlut Cavusoglu)  ஒரு துருக்கிய வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இனவழிப்பு என்ற பதத்தை பைடன் பயன்படுத்துவதை அங்கரா (Ankara) முற்று முழுதாக எதிர்க்கிறது என்று இரு வாரங்களுக்கு முன்னர் சவுசோலு தெரிவித்தார். “எமது வரலாறு தொடர்பாக வேறு எவரிடமிருந்தும் நாங்கள் பாடம் கற்கப் போவதில்லை. அரசியல் சந்தர்ப்பவாதமே அமைதிக்கும் நீதிக்கும் எதிரானதாகும். எந்தவித கொள்கைகளும் இன்றி மக்களைக் கவருவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இக்கூற்றை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கிறோம்” என்று ருவிற்றரில் வெளியிட்ட செய்தியில் சவுசோலு தெரிவித்தார்.

முதலாம் உலகப் போரின் மிகக் கடினமான சூழ்நிலைகளில் உயிரிழந்த ஒட்டோமான் ஆர்மீனியர்களுக்குத் தனது அனுதாபங்களைத் துருக்கிய அதிபரான எர்டோகான் தெரிவித்தார். துருக்கிய ஆர்மீனியர்களின் பிதாப்பிதாவான சஹாக் மஷாலியானுக்கு (Sahak Mashalian) அவர் அனுப்பிவைத்த செய்தி ஏப்பிரல் 24க்கு முன்னர் எர்டோகான் வெளியிட்ட கூற்றுக்களைப் பிரதிபலித்ததுடன் பைடன் மேற்கொண்ட பிரகடனத்துக்கு முன்னதாக வெளிவந்திருந்தது.

0424 armenia anniversary 1000x652 1 முதலாம் உலகப் போரில் ஆர்மீனியர்கள் சந்தித்த படுகொலையை இனவழிப்பாக அமெரிக்கா ஏற்றிருக்கிறது - தமிழில் ஜெயந்திரன்

“உள்நாட்டு அரசியல் ஆதாயங்களைக் கருத்திற் கொண்டு வரலாற்றை தவறாகச் சித்தரிக்கும் பைடனின் செயல் துருக்கி – அமெரிக்க உறவைப் பொறுத்த வரையில் துரதிட்டமானதாகும்” என்று துருக்கி அதிபரின் தொடர்பாடல் பணிப்பாளரான பாரெற்றின் அல்ற்றுன்  (Fahrettin  Altun) கூறினார்.

துருக்கியின் அரச ஊடகமான அனடோலுவின்  (Anadolu) படி, துருக்கிக்கான அமெரிக்கத் தூதுவராக விளங்குகின்ற  டேவிட் எம் சற்றபீல்ட்டை (David M.Satterfield)  துருக்கி அரசு அழைத்து, துணை வெளிவிவகார அமைச்சர் செடாற் ஓணல் (Sedat Onal) மூலம் தமது ஆட்சேபனையைத் தெரிவித்ததாக துருக்கியின் அரச ஊடகமான அனடோலு  தெரிவித்தது.

துருக்கியில் 1915ம் ஆண்டில் தொடங்கிய நிகழ்வுகளைக் குறிக்க இனவழிப்பு என்ற பதத்தை ஒரு வெளிநாட்டு அரசு பயன்படுத்துமானால் துருக்கி அரசு வழமையாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும். அது போர் நடைபெற்ற காலம் என்றும், சம்பந்தப்பட்ட இரு தரப்புகளிலுமே இழப்புகள் இருந்தன என்றும் குறிப்பிட்ட நிகழ்வில் இறந்தவர்களின் எண்ணிக்கை 300,000 மட்டுமே என்றும் துருக்கி அரசு இன்று வரை சொல்லிவருகிறது.

அங்கராவைக் கோபமூட்டுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக பரக் ஒபாமாவும் டொனால்ட் ட்ரம்பும் இனவழிப்பு என்ற பதத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தார்கள்.

கடந்த பல வருடங்களாக அமெரிக்கத் துருக்கி உறவு தொடர்ச்சியாக மோசமடைந்து வந்திருந்தாலும், ஒரு நூற்றாண்டு காலப்பகுதிக்கு முன்னர் ஆர்மீனியன் மக்கள் அனுபவித்த இன்னல்களை முறைப்படி ஏற்றுக் கொள்ளக்கூடிய இப்பதத்தைப் பயன்படுத்துவதற்கு அது எந்த விதத்திலும் தடையாக அமையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் அதே வேளை மனித உரிமைகளுக்கான இன்றைய தங்கள் அர்ப்பணத்தையும் அது சுட்டுவதாக அமையும் என்பது பைடனின் நம்பிக்கை ஆகும்.

மனித உரிமைகளைக் காப்பதிலும் எல்லோருக்கும் பொதுவான விழுமியங்களைப் பேணுவதிலும் தாம்  கொண்டுள்ள  அசைக்க முடியாத அர்ப்பணத்தை அமெரிக்கா மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்தியிருக்கிறது என்று பைடனின் அறிவிப்பை வரவேற்று ருவிற்றரில் செய்தியைப் பகிர்ந்து கொண்ட ஆர்மீனியன் முதல் அமைச்சரான நிக்கோல் பஷின்யன் (Nikol Pashinyan) குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இப்புதிய பிரகடனம் துருக்கியைப் பொறுத்தவரையில் எந்தவித சட்டரீதியான தாக்கத்தைச் செலுத்தப் போவதில்லை. ஆனால் இராஜீக உறவுகளில் இது கணிசமான தாக்கத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை அதிபர் என்ற வகையில,  எர்டோகானுடன் பைடன் தொடர்புகளைப் பேணியதுடன், எர்டோகானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியடைந்த சதி முயற்சிக்குப் பின்னரான காலம் உட்பட நான்கு தடவைகள் துருக்கிக்கு அவர் பயணஞ் செய்திருக்கிறார். ஆனால் அக்காலப் பகுதியிலிருந்து துருக்கிய அதிபர் தொடர்பாக பைடனின் புரிதல் எதிர் மறையாகவே இருந்து வருகிறது.

“எர்டோகானுடன் நிறைய நேரத்தை நான் செலவிட்டிருக்கிறேன். அதிகாரம் முழுவதையும் அவர் தன்னிடத்திலே தான் வைத்திருக்கிறார்”  என்று 2020ம் ஆண்டில் நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழின் (New York Times) ஆசிரியர் குழுவிடம் பைடன் தெரிவித்தார். “வேறு விதமான ஒரு அணுகு முறையைத் தான் இப்போது நாங்கள் அவருடன் பேண வேண்டும் என நான் நினைக்கின்றேன். எதிர்க்கட்சிகளின் தலைமைத்துவத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்பதை அவருக்கு நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.”

இரு வாரங்களுக்கு முன் தொலைபேசி வழியாக  எர்டோகானுடன் பைடன் உரையாடினார். பதவிக்கு வந்த பின் பைடன் அவருடன் மேற்கொண்ட முதலாவது உரையாடல் இதுவாகும். அமெரிக்க துருக்கி உறவுக்கு பைடன் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற பார்வையை நீண்ட நாட்களாக பைடன் எர்டோகானுடன் உரையாடாத விடயம் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வருடம் ஆனி மாத நடுப் பகுதியில் பிரஸ்ஸல்சில் நடைபெறவிருக்கின்ற நேட்டோவின் உச்சி மாநாட்டின் போது இருவரும் நேரடியாகச் சந்திப்பதற்கு இணங்கி இருக்கிறார்கள். ஓர் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவை முன்னெடுக்கத் தான் ஆர்வமாக இருப்பதாகவும் மேலும் பல விடயங்களில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தாம் உடன்படாத விடயங்களைப் பக்குவமாக கையாள விரும்புவதாகவும் பைடன் துருக்கிய அதிபருக்குத் கூறியதாக வெள்ளை மாளிகைக் குறிப்பு தெரிவித்தது. ஆனால் ஆர்மீனியன் இனவழிப்பு தொடர்பாக மேற்குறிப்பிட்ட அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

ஒட்டோமான் ஏகாதிபத்தியத்தின் தலைநகரமாகத் திகழ்ந்த கொன்ஸ்தந்தி நோப்பிளில் (Constantinople)  ஆர்மீனிய புத்திஜீவிகளாகவும் சமூகத் தலைவர்களாகவும் இருந்த 250 ஆர்மீனியர்களை 1915ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் துருக்கிய அதிகாரிகள் கைது செய்ததைத் தொடர்ந்து பைடன் பிரகடனம் செய்த இனவழிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகின. அவர்களில் பலர் ஒன்றில் நாடு கடத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். சிவப்பு ஞாயிறு (Red Sunday) என்று அழைக்கப்படும் ஏப்பிரல் மாதம் 24ம் திகதியை உலகெங்கும் பரந்து வாழும் ஆர்மீனியர்கள் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக நினைவுகூர்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆர்மீனியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பலமான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள், 1914க்கும் 1923க்கும் இடையே கொல்லப்பட்ட ஆர்மீனியர்களின் எண்ணிக்கையை 300,000 இலிருந்து 2 மில்லியன் வரையாகக் காட்டுகின்றன. ஆனால் அங்கே கொல்லப்பட்ட அனைவரும் ஒட்டோமான் ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. ஆனால் ஒட்டோமான் அதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்பட்ட அதிகமான கணிப்பீடுகள் – 1915க்கும் 1918க்கும் இடையே 800,000 ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடும் கணிப்பு உட்பட – இந்த எண்ணிக்கையை 600,000 க்கும் 1.5 மில்லியனுக்கும் இடைப்பட்டதாகக் காட்டுகின்றன.

பலவந்தமாக நாடுகடத்தப்பட்டதன் காரணத்தினாலோ அல்லது படுகொலை செய்யப்பட்டதன் காரணத்தினாலோ, 1914 இல் 2 மில்லியன்களாக இருந்த துருக்கியில் வாழ்ந்த ஆர்மீனிய மக்களின் எண்ணிக்கை 1922இல் 400,000 ஆகக் குறைவடைந்தது.

கொல்லப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் கூட, படுகொலை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஒன்றாகப் படுகொலை செய்யப்பட்டதை ஆவணப்படுத்தி இருக்கின்றது. துண்டிக்கப்பட்ட தலைகளுடன் சில ஒட்டோமான் இராணுவ வீரர்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கும் அதே வேளை வேறு சில இராணுவ வீரர்கள் நிலத்திலே வைக்கப்பட்டிருக்கும் மண்டை ஓடுகளுக்கு நடுவில் நிற்பதையும் காணக் கூடியதாகவிருக்கின்றது. ஒன்றாக வைத்து எரிக்கப்பட்டு, தண்ணிக்குள் மூழ்கடிக்கப்பட்டு, சித்திரவதை, வாயு, நஞ்சு, நோய் மற்றும் பட்டினி எனப் பலவகையான வழிமுறைகள் மூலம் இந்த மக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கையிடப்பட்டிருக்கின்றது. சிறு பிள்ளைகள் படகுகளில் ஏற்றப்பட்டு கடலுக்குள் கொண்டுசெல்லப்பட்டுப் பின்னர் கடலுக்குள் வீசியெறிப்பட்டிருக்கிறார்கள். பாலியல் வன்புணர்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பதிவாகியிருக்கிறது.

அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆர்மீனியன் மக்களின் படுகொலையை ஓர் இனவழிப்பாக ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவளிப்பேன் என்று உறுதியளிப்பது மட்டுமன்றி, மனித உரிமைகளைப் பேணுவதற்கு எனது நிர்வாகத்தில் மிகவும் அதிக முன்னுரிமை கொடுப்பேன் என்றும் தனது தேர்தல் பரப்புரையின் போது அதிபர் வேட்பாளரான பைடன் தெரிவித்திருந்தார்.

இதற்கு முதல் ஆட்சியிலிருந்த அமெரிக்க அதிபர்கள் இப்படிப்பட்ட உறுதி மொழிகளை முன்னர் வழங்கியிருந்த போதிலும் அவை ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. “ஆர்மீனிய இனவழிப்பிலிருந்து உயிர் தப்பியவர்களின் வாரிசுகளாக இருக்கின்ற ஆர்மீனிய அமெரிக்கர்களின் உணர்வுகளைத் தான் பகிர்ந்து கொள்வதாகவும் இனவழிப்பை நினைவுகூரவும் அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் தான் உறுதியளிப்பதாகவும்” ஒபாமா தனது தேர்தல் கால பரப்புரையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதிபராகப் பதவியேற்றதும் அவருக்கு முன்னர் அதிபர்களாக இருந்தவர்களைப் போல இராஜீக அழுத்தங்கள் குறுக்கிட்டன. தனது எட்டு வருட அதிபர் பதவிக்காலம் பூராவும் ஏப்பிரல் நிகழ்வுகளை நினைவு கூர்ந்த பொழுதெல்லாம் இனவழிப்பு என்ற பதத்தைப் பயன்படுத்துவதை ஒபாமா தவிர்த்தே வந்திருக்கிறார். ஐசிஸ் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் துருக்கி ஒரு முக்கிய பங்குதாரராக இருந்த காரணத்தினால் இனவழிப்பைப் பற்றி உரையாடுவது பொருத்தமானதாக இருக்கவில்லை.

ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றிய தேசிய பாதுகாப்புக்கான துணை ஆலோசகர் பென் றோட்ஸ் (Ben Rhodes) மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் (Samantha Power) போன்றோர் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது பற்றிப் பின்னாளில் தமது கவலையை வெளியிட்டார்கள். பன்னாட்டு அபிவிருத்திக்கான அமெரிக்க அமைப்புக்கு தலைமை தாங்கும் பொறுப்புக்கு சமந்தா பவரின் பெயரை பைடன் தற்போது பரிந்துரை செய்திருக்கிறார்.

2019ம் ஆண்டில், 1915 இலிருந்து 1923 வரை படுகொலை செய்யப்பட்ட ஆர்மீனிய மக்களின் படுகொலையை இனவழிப்பு என அமெரிக்க நாடாளுமன்றமும் செனட் சபையும் ஏற்று அங்கீகரித்தது. துருக்கியுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கக் கூடும் என்ற காரணத்தைக் காட்டி மேற்படி முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொள்வதை நிறுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகம் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர்களைக் கேட்டிருந்தது. ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட விமான எதிர்ப்பு ஏவகணைத் தொகுதியைத் துருக்கி வாங்கியதைத் தொடர்ந்தும் சிரியாவில் துருக்கியின் ஆதரவுடன் இயங்கும் படைகளினால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதன் காரணத்தாலும் அமெரிக்க துருக்கி உறவுகள் பாதிக்கப்பட்ட போதும் அதிபர் ட்ரம்ப் எர்டோகானுடன் நட்புறவைப் பேணவே முயற்சி செய்துவந்தார்.

ஆர்மீனியன் இனவழிப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு, நூற்றுக்கும் அதிகமான சனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் பைடனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். கலிபோர்ணியா மாநிலத்தைச் சேர்ந்த சனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அடம் ஸ்கிவ் (Adam Schiff) இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். ஒரு மிகப் பெரிய ஆர்மீனிய அமெரிக்க சமூகத்தினர் ஸ்கிவ்வின் மாவட்டமான லொஸ் ஏஞ்சலெசிலும் சுற்று வட்டாரங்களிலும் வசிக்கிறார்கள்.

“ஆர்மீனியன் இனவழிப்பு நாளை உத்தியோக பூர்வமான முறையில் ஏற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்துடன் பைடன் இணைந்திருப்பது தொடர்பாக எமது இதயங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றன” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான நான்சி பெலோசி (Nancy Pelosi)  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

“மிகப் புனிதமான இந்த நினைவேந்தல் நாளை நினைவுகூரும் பொருட்டு  இனத்துவேசமும் வன்முறைகளும் உலகின் எப்பாகத்தில் இடம் பெற்றாலும் மிகப் பலமாக அவற்றை எதிர்க்க உறுதி பூணுவதுடன் இவ்வுலகில் வாழும் பிள்ளைகள் அனைவருக்கும் நம்பிக்கை, அமைதி, சுதந்திரம் போன்ற விழுமியங்கள் நிறைந்த எதிர் காலத்தைக் கட்டியெழுப்பவும் எங்களை நாம் மீளவும் அர்ப்பணித்துக் கொள்கிறோம்.”

நன்றி: சிஎன்என்.கொம், cnn.com