மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அழைப்பு – ஜனநாயக செயற் பாட்டாளர்கள் சிறீலங்காவுக்கு கண்டனம்

470 Views

மியான்மர்  ஆளும் இராணுவக் குழுவின்  வெளியுறவுத் துறை அமைச்சரை இணையவழி BIMSTEC  கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சிறீலங்கா அரசு அழைப்பு விடுத்துள்ளதை மியான்மரின் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.

BIMSTEC என்பது வங்கதேசம்,பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம்,மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட பிராந்திய கூட்டமைப்பு ஆகும்.

இந்த கூட்டமைப்பின் ஏப்ரல் 1ம் திகதி அமைச்சர்கள்  கூட்டத்திற்கு மியானமர் அரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா, மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் வுன்னா மவுங் ல்வின் -க்கு அனுப்பிய கடிதத்தில், “17ஆவது  அமைச்சர்களின் சந்திப்பு, மாண்புமிகு அமைச்சரின் பங்கேற்பால் மதிப்படையும். இந்த சந்திப்பின் போது நெருக்கமாகஉறவாடுவதை எதிர்பார்த்து உள்ளேன் “ என்று எழுதியுள்ளார்.

மியான்மரில் கடந்த பெப்ரவரி 1ம் திகதி அன்று, ஜனநாயகத்துக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆங் சான் சூழ்ச்சி -ம் ஆளும் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக   குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

இராணுவத்தின் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பெரும் அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் இது வரையில் சுமார் 70 பேர்  வரையிலானோர் கொல்லப்பட்டுள்ளதாக  இராணுவத்தின் மீது ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், இராணுவ ஆட்சியின் அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மியான்மரின் குடிமக்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட பலர் சிறீலங்காவின் வெளியுறவுத் துறையின் அதிகாரப் பூர்வ பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து “இப்போாதைய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு BIMSTEC  -ன் வரம்புக்குள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. BIMSTEC  -ன் மியான்மரை வெளியேற்றினால் தவிர, அந்த நாட்டை  ஒதுக்கி வைக்க சிறீலங்காவிற்கு  அதிகாரம் இல்லை” என்று சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் அட்மிரல் (ஓய்வு) ஜெயந் கொலம்பேஜ்  தி இந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் சிறீலங்காவில் அமைந்துள்ள மியான்மர் துாதரகத்திற்கு வெளியில் மியான்மரில் போராடும் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த 40 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply