மியான்மர் இராணுவத்தினரால் ஏழு வயது சிறுமி சுட்டுக்கொலை

மியான்மர் இராணுவத்தினரால் ஏழு வயது சிறுமி ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட சிறுமியின் பெயர் கின் மியோ சிட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறுமியின் 19 வயது  சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி குடிமை அரசிடம் இருந்து மியான்மர் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதுவரை நடந்த போராட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

அதே நேரம்  போராட்டங்களின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 261 என்கிறது அரசியல் கைதிகளுக்கான உதவிக் கூட்டமைப்பு எனும் குழு.

இந்நிலையில், மியான்மர் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின் நடக்கும் போராட்டங்களின் போது உயிரிழந்தவர்களில் கின் மியோ சிட் சிறுமிதான் மிகவும் குறைந்த வயதுள்ளவராக அறியப்படுகிறார்.

அந்தச் சிறுமி அவரது வீட்டிலேயே கொல்லப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மியான்மர் இராணுவம் எதுவும் இது வரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.