நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு  அமரதாஸினால் வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை

 நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு  அமரதாஸினால் வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச் சங்கத்தின் அறிக்கை

முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடைபெற்று 10 ஆண்டுகளாகிய பின்பும் அவை பற்றியஆவணங்கள் எமது சமூகத்தினால் குறிப்பிடக்கூடிய அளவுக்கு இதுவரை
ஆவணப்படுத்தப்படவில்லை. இந்தக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில்
நோர்வே தமிழ்ச்சங்கமானது, ஒரு சமூக நிறுவனமாகத் தன்னால் சாத்தியப்படக்கூடிய அளவிற்கு இவற்றை ஆவணப்படுத்தி வெளியிடும் நோக்கோடு முள்ளிவாய்க்கால்அவலம் மற்றும் வன்னியின் இறுதிப் போர்க்காலப் புகைப்படங்களை ஆவணமாக்கும்முயற்சியில் ஈடுபட விரும்பியது.

தமிழ்ச் சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவின் போது இந்த ஆவணத்தை
வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நோக்கின் முதற்கட்டமாக பல
இடங்களிலும் போர் தொடர்பான புகைப்படங்களைக் கண்காட்சியில் வைத்துக்
கொண்டிருக்கும் அமரதாஸின் புகைப்படங்களை ஆவணமாக்கலாம் என்ற யோசனை
முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டது. இதற்கான பொறுப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர்,
செயலாளர் ஆகியோரிடம் சங்கத்தினால் ஒப்படைக்கப்பட்டது.
செயலாளர் திரு அமரதாஸிடம் தொடர்பு கொண்டு உரையாடியதை அடுத்து
இதற்கென அமரதாஸினால் வழங்கும் புகைப்படங்கள் புத்தக வடிவில்
ஆவணமாக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பானதும், இந்நூலை
தயாரிக்கிற ஒப்பந்தம் அமரதாஸுடன் நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் செய்து
கொள்ளப்பட்டது.

இருதரப்பும் உடன்பட்ட அடிப்படையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தத்
திட்டத்தின் முன்னெடுப்புகள், செயற்பாடுகளைப் பற்றி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக
உறுப்பினர்களுக்கு மாதாந்தம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களின் போது
செயலாளரால் தெரிவிக்கப்பட்டு வந்தது. அப்போது இந்தப் புகைப்படங்களின் உரிமம்
குறித்த சர்ச்சைகள் இருக்கின்றன என நாம் அறிந்திருக்கவில்லை. அமரதாஸும்
இதைப்பற்றி எம்மிடம் தெரிவிக்கவில்லை.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் புகைப்பட நூலாக்கப் பணிகளில்
வெளியீட்டாளர் சார்பில் சஞ்சயனும் புகைப்படங்கள், உள்ளடக்கம் பற்றிய
விடயங்களில் அமரதாஸும் இணைந்து பணியாற்றி வந்தனர். நூலின்
வெளியீட்டிற்கான முதலீடு/தயாரிப்பு, பாதிப்பு, வெளியீடு ஆகியவற்றையும்

தமிழ்ச்சங்கம் பொறுப்பேற்றது. இந்த ஒழுங்கில் நூலிற்கான படத்தேர்வுகள்
முதற்கொண்டு தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிவுறும் தறுவாயில் நோர்வே
தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் இந்தப் புகைப்பட ஆவண நூலான Through The Grey Zons மும்
திட்டமிடப்பட்டபடி வெளியிடப்படவுள்ளது என்ற அறிவிப்பும் இணைக்கப்பட்டது.

அப்போது எம்முடன் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்பு
கொண்ட ஊடகத்துறைப் போராளிகள் (அந்த அமைப்பின் ஒளிக்கலைப் பிரிவு மற்றும்ஊடகத்துறையில் ஈடுபட்டவர்கள்) நோர்வேயில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள்ஒருவர் மற்றும் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பாரிஸ்,சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் மேற்படி புகைப்பட நூலில்தம்மாலும் தம்முடனும் இணைந்து பணியாற்றிய மாவீரர்களாலும் எடுக்கப்பட்டபுகைப்படங்கள் பல உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என்று தாம் கருதுவதாகக்குறிப்பிட்டனர்.

இது எமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
“இதற்கான ஆதாரம் என்ன? புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பு இந்தப் புத்தகத்தில் உள்ள படங்களைப் பற்றி நீங்கள் எப்படி இவ்வாறு கூற முடியும்?” என்று நாம்அவர்களிடம் விளக்கம் கோரியிருந்தோம். இதற்குப் பதிலளித்த அவர்கள், ஏற்கனவேபல சந்தர்ப்பங்களிலும் தம்மால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமரதாஸ்பயன்படுத்தி வந்திருக்கின்றார்.

அமரதாஸினால் முன்பு நடத்தப்பட்ட கண்காட்சிகளில்இதனை நாம் அவதானித்திருக்கின்றோம். எனவே ஒரு முன்னறிவிப்பாக இதைத்
தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம். இது தொடர்பாக மேலதிக விபரங்கள்
தேவையென்றால் அவற்றை வழங்குவதற்குத் தயாராக உள்ளோம் என்று
தெரிவித்தனர்.

“இதைப்பற்றி நீங்கள் அமரதாஸுடன் தொடர்பு கொண்டு பேசவில்லையா?” என்று
கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள், “இந்த விடயம் பற்றி நாம் ஏற்கனவே பல
வழிகளிலும் அமரதாஸுடன் பேசியிருக்கின்றோம். பொது வெளியிலும்
எழுதியுள்ளோம். மூத்த போராளிகள் பலரும்கூட நேரில் அமரதாஸிடம் இதைப் பற்றிச்
சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆகவே இந்தப் படங்களின் உரிமைப் பிரச்சினையைப் பற்றி அமரதாஸிற்கு நன்றாகத் தெரியும். அப்படிச் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் போது அதற்குத் தீர்வு காணாமல் தமிழ்ச் சங்கத்திற்கு அவர் எப்படிதனது பெயரில் படங்களைக் கொடுக்க முடியும்” என்று பதிலாகக் கேட்டனர்.

இதனையடுத்து நாம் இந்தப் படங்களைக் குறித்த சர்ச்சை பற்றி அமரதாஸுடன்
தொடர்பு கொண்டு கேட்டோம். அப்பொழுதும் அவர் இந்தப் படங்கள் அனைத்தும்
தன்னுடையவையே என்று குறிப்பிட்டார். விசமிகளின் வதந்திகளை கருத்துக்களைக்
கவனத்தில் எடுக்க வேண்டாம் என்றும் எங்களை அமைதியாக இருக்குமாறும்
அறிவுறுத்தினார்.

ஆனாலும் இந்த நூலை வெளியிடும் நிறுவனமாகிய நாம் போராளிகளின் இந்தக்
கோரிக்கையை கவனத்தில் எடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புக்குள்ளானோம்.
போராட்டத்தில் ஈடுபட்டு, போரினால் பாதிக்கப்பட்டு, உடல் உள நெருக்கடிகளுக்கு
உள்ளாகியிருக்கும் போராளிகளின் குரலையும் அவர்களுடைய நியாயத்தையும்
புறக்கணிக்காமல் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதில் எமது செயற்குழு
தீர்மானமாக இருந்தது.

புத்தகத்தில் உள்ளடக்கப்படும் படங்களில் போராளிகள் குறிப்பிடுவதைப் போன்று
அவர்களின் படங்களும் இருக்கும் பட்சத்தில், அது தமிழ்ச் சங்கத்தால் போராளிகளுக்குஇழைக்கப்படும் பெரும் வரலாற்றுத் துரோகமாக அமைந்துவிடும். அந்தத் தவறுக்குநோர்வே தமிழ்ச்சங்கம் இடமளிக்கக் கூடாது என்பதால், நாம் ஐரோப்பாவில் வாழும்ஒளிப்படத்துறைக்கும் வேறு பிரிவுகளுக்கும் பொறுப்பாக இருந்த ஒரு மூத்த போராளியைச் சந்தித்து உண்மையை அறிய முயன்றோம்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்ச்சங்க நிர்வாகமே முடிவெடுத்திருந்தது.

இதன்படி செயலாளர் ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்று மேற்கூறிய பொறுப்பாளரைச்சந்தித்து விபரங்களை அறிய முற்பட்ட வேளை, எமது நூலில் உள்ளடங்கியிருக்கும் படங்களில் பல அவரிடம் உள்ளதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அதேவேளைஅவற்றில் உள்ள Metadata களும் அக்காலத்தைக் குறிப்பனவாக இருந்தன.

அத்துடன்அமரதாஸின் முகப்புத்தகப் பதிவுகள் மற்றும் Tervor Grant இன் Sri Lanka Secretsநூலில் உள்ள புகைப்படங்களும் குறித்த பொறுப்பாளரிடம் இருந்தன. இது எமக்குஅதிர்ச்சியை அளித்தது. Sri Lanka Secrets நூலிற்காக Tervor Grant இற்குத் தானேஅந்தப் புகைப்படங்களைக் கொடுத்திருந்தேன் என்று அமரதாஸ் ஏற்கனவே எம்மிடம்கூறியிருந்தார்.

இதைப் பற்றி குறித்த பொறுப்பாளரிடம் நாம் கேட்ட போது, அந்தப் புத்தகத்திற்கு
யாரிடமிருந்து புகைப்படங்களைப் பெற்றேன் என்று Tervor Grant அந்தப்
புத்தகத்திலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததைக் குறித்த பொறுப்பாளர்
சுட்டிக்காட்டினார். அதற்கான ஆதாரத்தையும் அவர் மெய்ப்பித்தார். இதே கருத்தினைவேறு போராளிகளும் எம்மிடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்தனர். இவைஅமரதாஸின் புகைப்படங்களின் உரிமம் பற்றிய நம்பகத் தன்மையை
உறுதிப்படுத்தப்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பினை எம்மீது சுமத்தியது. ஆகவே,
இந்த விடயத்தை நாம் மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும்
தீர்மானித்தோம்.

மேலும் குறித்த பொறுப்பாளர் தெரிவித்ததாவது, “அமரதாஸ் இந்தப் படங்களை
ஜெனீவா அரங்கு தொடக்கம் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தி வந்த போது
அவற்றைப் பொது வெளியில் நாம் கண்டிக்காது விட்டதற்குக் காரணம், போர்க்
குற்றங்களைப் பேசும் காலத்தில் அதற்கான ஆவணங்களைப் பற்றிய சர்ச்சைகளைக்

கிளப்புவது அதை நீர்த்துப் போகச் செய்துவிடும். அது எமது போராட்டத்திற்கும்
இனத்திற்கும் மாறான செயலாக அமைந்து விடக்கூடியதாக மாறிவிடும் என்பதால்
அமைதி காத்தோம்” என்றார்.ஆனால் 30 வருட போராட்டத்தை நிகழ்த்திய ஒரு விடுதலை இயக்கம் தனது மக்களின்அவலங்களையும் அதற்கான சாட்சியங்களையும் ஆவணப்படுத்தவில்லை என்பதாகவும் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுழைத்தவர்களின் அர்ப்பணிப்பை மறுப்பதுபோன்றும் உயிரிழந்த போராளிகளின் உயரிய பங்களிப்பை மறைப்பதாகவும்அமரதாஸ் தனது செயற்பாடுகளின் ஊடாகச் சித்தரிப்பதை இனியும் எம்மால்பொறுக்க முடியாததாலேயே தமிழ்ச் சங்கத்திடம் இதைத் தெரியப்படுத்தினோம்.

பலருடைய அர்ப்பணிப்பான கூட்டு உழைப்பை தனியொருவர் தன்னுடையது என்று
உரிமை கோருவது நீதியற்றது. “அதற்காக இந்த நூலினை தமிழ்ச் சங்கம் வெளியீடு
செய்வதை நாம் தடுக்கவில்லை. இது கட்டாயமாக வெளிவரவேண்டியதொரு
ஆவணம். நோர்வே தமிழ்ச் சங்கம் விரும்பினால், இந்தப் புகைப்பட நூலில் உள்ள
படங்களைப் பற்றிய சர்ச்சை இருக்கிறது என்ற தகவலை வாசகர்களுக்கு அறிவித்து
விட்டு வெளியிடலாம்“ என்றார். இதனையே சம்பந்தப்பட்ட ஏனைய போராளிகளும்
எம்மிடம் தெரிவித்தனர்.

மிகுந்த பொறுப்புடன் ஆவணப்படுத்தப்படும் நூல் என்னும் காரணமாக, உண்மை
அதற்கான நேர்மையோடு பேசுவதாக இருக்க வேண்டும் என்பதால் அமரதாஸிடம்
மீண்டும் மீண்டும் படங்கள் உங்களுடையயவையா என்று கேட்ட போது அவர்
அனைத்தும் தனது புகைப்படங்களே என்றார்.

தொடர்ந்து விசாரித்ததில், இணையத்திலும் இலங்கையில் வாழும் பலரிடத்திலும்,
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களிடத்திலும் இச்சர்ச்சை பல
ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. அதனால்,
“இந்த நூலில் உள்ள புகைப்படங்களின் உரிமம் மீதான சர்ச்சை உண்டு என்பதை
வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்”என்ற அறிவிப்பை மட்டும் நூலில் இணைத்து இந்த நூலினை வெளியிடலாம் என்று அமரதாஸிற்கு எம்மால் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இதற்கு மேல் தாமதித்துமுடிவெடுப்பதற்கான கால அவகாசம் எமக்கிருக்கவில்லை. தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுவிழா மிக நெருங்கி வந்திருந்தது. எமது நிலைப்பாட்டினை அமரதாஸ் முற்றிலுமாக மறுத்தார்.
முழுவதும் தன்னுடைய படங்களே அவை எனத் தொடர்ந்தும் வாதிட்டதுடன், நூலில்
எதுவித மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன் என்றார். இதன் பின்பே நூல்
வெளியீடு பற்றிய சர்ச்சை எழுந்தது. அமரதாஸின் பதிலும் பின்வரும் சர்ச்சைக்குரிய
விபரங்களும் செயற்குழுவில் ஆராயப்பட்டன.

1. ஒப்பந்தப்படியும் நாமே இந்நூலின் தயாரிப்பாளர்கள் ஆவோம். இருப்பினும்
ISBN பதிவிலக்கத்தில் உள்ள தயாரிப்பாளர்/ வெளியீட்டாளர் விபரங்களை
எமக்குத் தெரியாமல் தன்னிச்சையாக தனது பெயருக்கும்/ நிறுவனத்திற்கும்
அமரதாஸ் மாற்றிக் கொண்டுள்ளார். (பொதுவான நூல் வெளியீட்டு
நியதியின்படி தயாரிப்பாளர் என்பவரே வெளியீட்டாளராவார்)
2. இந்தப் புகைப்படங்கள் பற்றிய பாரிய சர்ச்சை ஏற்கனவே பல ஆண்டுகளாக
இருந்து வந்துள்ளது என்பதையும் இந்தத் திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே
எமக்கு மறைத்து வந்துள்ளார்.

3. Tervor Grant இன் Sri Lanka Secrets நூலில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள்
தனது புகைப்படங்களே என்று அமரதாஸ் குறிப்பிடுவதாலும் அவை எமது
நூலிலும் காணப்படுவதால் அமரதாஸ் Tervor Grant இற்கு அனுப்பியதற்கான
ஆதாரங்களை முன்வையுங்கள் என்று ஒரு வாரத்திற்கும் மேலாகக் கேட்டுக்
கொண்டிருக்கின்றோம். அவர் இன்று வரை நம்பத்தகுந்ததான ஒரு சிறு
ஆதாரத்தையேனும் முன்வைக்கவில்லை.

4. ஒளிப்படத்துறை பொறுப்பாளரின் புகைப்படங்கள் பற்றிய கதை மற்றும்
விளக்கங்களுக்கும் அமரதாஸின் விளக்கங்களுக்குமிடையில் வேறுபாடுகள்
உண்டு.

இவற்றை ஆராய்ந்த செயற்குழு, இவை அனைத்தும் ஒப்பந்த மீறல்கள் என்பதால்
அமரதாஸுடனான தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தவும், அவரது நேர்வேக்கான
விமானப் பயணச்சீட்டை இரத்துச் செய்யவும் நிர்வாகம் முடிவெடுத்தது.
செயற்குழுவின் அறிவித்தலை நாம் அமரதாஸிற்கு அறிவித்த பின்னர், அமரதாஸ்,
ஒஸ்லோவில் வாழும் ராஜன் செல்லையா மூலமாக எம்முடன் இரு தடவைகள்
தொடர்பு கொண்டார்.

“அமரதாஸ் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன” என்று சொல்கின்றார். அவற்றை
நேரடியாக மட்டுமே முன்வைக்கலாம் என்பதால் அவருடைய ஆதாரங்களைச்
சமர்ப்பிக்க அமரதாஸிற்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்கு வாய்ப்பளிக்குமாறு ராஜன்
செல்லையா கேட்டுக் கொண்டார்.

ஒப்பந்த மீறலின் காரணமாக இந்தக் கோரிக்கையை முதலில் மறுத்த நாம், அக்கூற்றில்உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டதனால் அமரதாஸிற்கு பின்வருமாறு குறிப்பிட்டுமின்னஞ்சல் அனுப்பி வைத்தோம்.

25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று எமது 40ஆம் ஆண்டுக்கான இரண்டு
விழாக்களுக்குமான ஒத்திகை ஆயத்தங்கள் உண்டு. நிகழ்வுக்கான ஒழுங்குகள்,
ஒருங்கிணைப்புகள் செய்ய வேண்டும். எனவே முழு நிர்வாகமும் உங்களைச் சந்திப்பது சாத்தியமல்ல. நிச்சயமக தலைவரும் செயலாளரும் உங்களைச் சந்திப்பார்கள் என. நேரப்பற்றாக்குறை காரணமாக குறுகிய நேரமே உங்களைச் சந்திக்க முடியும் என்றும் அமரதாஸிடம் அறிவித்திருந்தோம்.
இதன்படி அவரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்து உரையாடிய போது
அமரதாஸ், எம்மால் எழுப்பப்பட்ட புகைப்படங்களின் ஆதாரங்கள் பற்றிய
கேள்விகளுக்கு உரிய பதிலைத் தரவில்லை.

அப்பொழுது அமரதாஸ் முன்னிலையில் ஐரோப்பாவில் தற்போது வதியும் மேற்குறித்த
பொறுப்பாளருடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு “நீங்கள் ஏற்கனவே
அமரதாஸுடன் இப்புகைப்படங்கள் பற்றி ஏற்கனவே உரையாடியுள்ளீர்களா
என்றோம்”. அவர் “ஆம்“ என்றார். அமரதாஸும் அதனை ஏற்றுக் கொண்டார்.
இப்புத்தகத்தின் பதிப்புக்காக பெறப்பட்ட ISBN தகவலில், பதிப்பாளர் குறித்த
மாற்றத்தைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, அது தனது உரித்துக்குரியது என்றே
வாதிட்டார். அப்படியென்றால் இதிலே தமிழ்ச் சங்கத்தின் பங்கு என்ன என்ற போது
புத்தகத்தை நோர்வேயில் வெளியிடுவது மட்டுமே என்றார்.

நோர்வே தமிழ்ச் சங்கம் ஒரு பொது அமைப்பு என்ற வகையில் அதனுடைய பொறுப்பு,
அதற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவற்றை விளக்கிக் கொண்டு செயற்படுங்கள்.
Tervor Grantஇன் Sri Lanka Secrets நூலில் உள்ளவை உங்களது புகைப்படங்கள்
என்று நீங்கள் சொல்வதால் அவற்றை நீங்கள் Tervor Grant இற்கு அனுப்பியதற்கான
ஆதாரம் ஒன்றினை முன்வையுங்கள் என்ற போது, ஆதாரங்களை முன்வைக்க
முடியாமல் தொடர்ந்து பிடிவாதம் செய்து பொருத்தமற்றதும் எம்மால் ஏற்க
முடியாததுமாகும் என்று குறிப்பிட்டோம்.

தமிழ்ச் சங்கத்தின் 40ஆம் ஆண்டு விழாவில் புத்தகத்தை வெளியிடுவது என்று
அறிவித்திருப்பதால் இதற்குரிய ஏற்பாட்டை நாம் செய்ய வேண்டும் என்று எம்மால்
அமரதாஸிற்குத் தெரிவிக்கப்பட்டது. அமரதாஸ் தொடர்ந்தும் எம்மால் ஏற்றுக்
கொள்ள முடியாத விளக்கங்களை முன்வைத்துக் கொண்டேயிருந்தார்.

போராளிகள், ஏன் பொது வெளிக்கு வந்து இவை தம்முடைய படங்கள் என்பதை
விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாது? அவர்களால் ஏன் பொது வெளியில் முகம்
காண்பித்துப் பேசமுடியாது இருக்கின்றது? அவர்களுக்கு என்ன
பிரச்சினையிருக்கின்றது இதைப் பற்றிப் பேச? இப்போது அனைவரும் பேசும் நிலை
உள்ளதே என்று, எமது தேசத்திற்காக அனைத்தையும் இழந்து தற்போது இக்கட்டான
சூழ்நிலைகளில் மாற்றுத்திறனாளிகளாக வாழும் போராளிகளை எதுவித
மனச்சாட்சியும் நியாயமும் இன்றி எடுத்தெறிந்து பேசியதால், இதனையடுத்து
உரையாடல் வாக்குவாதமாகியது. இதன்போது சஞ்சயனால் கடுமையான சொற்கள்
பயன்படுத்தப்பட்டன.

இதன் பின்னர் அவர் தன்னை ராஜன் செல்லையா வீட்டில் இறக்கி விடுமாறு கேட்டுக்
கொண்டார். நாமும் அவரை அங்கேயே இறக்கி விட்டாம்.
இந்தச் சர்ச்சையின் சாராம்சம் புகைப்படங்களின் உரிமத்திலிருந்தே எழுந்தது.
அதற்குத் தீர்வு காணப்படுவதே முக்கியம். ஆனால், இந்தப் படங்களுக்கான
உரிமத்தைக் கோருவோரில் சிலர் இலங்கையில் உள்ளனர். சிலர் புலம் பெயர்ந்து
ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பல நாடுகளில் இருக்கிறார்கள்.
இவர்களை ஒருங்கிணைப்பது இலகுவானதல்ல. அதோடு சிலருக்கு இதில்
பாதுகாப்புப் பிரச்சினைகளும் உண்டு. இதனையே தனக்கான வாய்ப்பாக அமரதாஸ்
பயன்படுத்திக் கொள்கிறார்.

படங்களை உரிமம் கோருவோர், வந்து அதை நிரூபியுங்கள் என்று அமரதாஸ்
கேட்பது அந்தப் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் அது உடனடியாக
சாத்தியமற்றது என்பதால்தான்.ஆகவே, இவ்வாறு சிக்கலுக்குள்ளாகியிருக்கும் இந்த நியாயத்திற்கான பிரச்சினையைசஞ்சயன் உடனான தனிப்பட்ட விவகாரமாகச் சிலரும் தமிழ்ச் சங்கத்தின்விவகாரமாகச் சிலரும் பொது வெளியில் கருத்துரைத்து வருவதைக் கண்டு வருந்துகிறோம்.

அமரதாஸ் நோர்வேயில் தங்கியிருந்த காலத்தில் அல்லது அதன் பின் இன்று வரை,
புத்தக வெளியீடு சம்பந்தமாக எதுவித உத்தியோகபூர்வமான தொடர்புகளையும்
எம்முடன் மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகள் புலம்பெயர் சூழலில் பொதுப்பணியாற்றி வரும் நோர்வே தமிழ்ச்சங்கம்
பொறுப்பற்ற முறையில் செயற்பட முடியாது. அது பொறுப்புடன் செயற்பட்ட
காரணத்தினால்தான் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது.

இப்பொழுதும் நோர்வே தமிழ்ச்சங்கமானது இந்த விடயத்தை உரிய முறையில் தீர்த்து
வைப்பதற்கான முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது. இதற்காக நாம் ISBN பதிவுக்கான
அலுவலகம் மற்றும் இத்திட்டத்திற்கு உதவி வழங்கிய நிறுவனம் ஆகியவற்றுடன்
தொடர்பு கொண்டோம். அவர்களிடம் இருந்து நேற்றுக் கிடைத்திருக்கும் பதிலின்
அடிப்படையில் இதற்குப் பின்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளோம்.

1. நாமே இன் நூலின் தயாரிப்பாளர்/ வெளியீட்டாளர் என்ற பதிவு நோர்வே ISBN
பதிவகத்தில் ஏற்கனவே உள்ளதால் இதனை குறிக்கும் ஒரு குறிப்பினை நாம்
புத்தகத்தில் புதிதாக இணைக்கலாம் என்பதற்கு எமக்கு அனுமதி
கிடைத்திருக்கின்றது. எனவே இது புதிதாக நூலில் இணைக்கப்படும்.

2. இந்த நூலின் தயாரிப்பாளர்/வெளியீட்டாளர் ஆகிய நாம் புகைப்படங்கள்
பற்றிய சர்ச்சை உண்டு என்பதை வாசகர்களுக்கு அறிவிக்கும் தார்மீகக் கடமை
உண்டு என்பதால், “இந்த நூலில் உள்ள புகைப்படங்களின் உரிமம் மீது

சர்ச்சை உண்டு என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்” என்னும்
குறிப்பையும் இணைத்து இந்நூல் வெளியிடப்படும். நூல் வெளியீட்டிற்கு
கலந்து கொள்வதற்கு அமரதாஸிற்கு அழைப்பு விடப்படும்.

3. இந்தப் புகைப்படங்கள் சர்சசைக்குரியன என்று தெரிந்து கொண்டே அதை
வேண்டுமென்றே மறைத்துத் தமிழ்ச் சங்கத்திற்கு பலத்த நெருக்கடியை
ஏற்படுத்தியதுடன் அதன் மூலம் ஏற்பட்ட சிரமங்களக்கும் அபகீர்த்திக்குமான
பொறுப்பினை அமரதாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றை அமரதாஸை நோக்கியும் பொது வெளியை நோக்கியும் நோர்வே தமிழ்ச்
சங்கம் முன்வைக்க வேண்டிய சூழலை முதலில் உருவாக்கியது அமரதாஸே.
அவருடன் இணைந்து தொடர்ந்து உள் விவகாரங்களையும் நியாயத் தன்மைகளையும்
அறிந்து கொள்ளத் தவறி, எமது கருத்துக்களை அறிவதற்கு சற்றேனும் ஆர்வம்
காண்பிக்காது, அமரதாஸின் நியாயமற்ற கூற்றுக்களின் பின்னர் தங்களை செலுத்த
முற்பட்டோரும் இதற்குக் காரணமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், தவிர்க்க முடியாதவாறு, நோர்வே தமிழ்ச் சங்கம் இது தொடர்பாக
என்ன நடந்தது என்பதை இன்று பொது வெளியில் கூறவேண்டிய அவசியத்தின்
அடிப்படையில் இவ் அறிக்கை வெளியாகிறது.

இது நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுகால வரலாற்றில் மிகுந்த
வருத்தத்திற்குரிய விடயமே. இனிவரும் காலத்தில் இதுபோன்ற சிக்கலான
விடயங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்த நூலானது அவசியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டியது என்பது எமது
வரலாற்றுக் கடமையாகும்.

நிர்வாகம் 2019
நோர்வே தமிழ்ச் சங்கம்
07.11.2019

Leave a Reply