மாலைதீவை மீட்டது போல சிறீலங்காவை மீட்க முயற்சி செய்கின்றது இந்தியா

சிறீலங்காவுக்கு சில மணிநேர பயணத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு இந்தியா உதவும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் உறுதி வழங்கியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

மோடியின் பயணம் மிகவும் குறுகியதாக அமைந்ததால், சில முக்கிய பேச்சுவார்த்தைகளை சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா வாகனத்தில் பயணம் செய்யும்போதே மேற்கொண்டிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பேச்சுக்களுக்கே அங்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

ஏப்பிரல் 21 ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்காவின் பொருளாதாரம் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. அதனை சீர் செய்வதன் மூலம் சிறீலங்காவைக் காப்பாற்றும் முயற்சிகளை மேற்குலகமும், இந்தியாவும் முதன்மைப்படுத்தி வருகின்றன.

modi sl மாலைதீவை மீட்டது போல சிறீலங்காவை மீட்க முயற்சி செய்கின்றது இந்தியாஅவசர அவசரமாக பயண எச்சரிக்கைகளை தளர்த்திய மேற்குலக நாடுகள், தமது மக்களை சிறீலங்காவுக்கு அனுப்புவதற்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதே சமயம் இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்ற இந்தியப் பிரதமர் மோடி அவசர அவசரமாக சிறீலங்காவுக்கு மேற்கொண்ட பயணமும் தற்போதைய மேற்குலகம் மற்றும் இந்திய கூட்டணிக்கு ஆதரவான ரணில் அரசைக் காப்பாற்றும் முயற்சியாகும் என கொழும்பைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் ஒருவர் இலக்கு இணையத்திற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடியின் இந்தப் பயணம் ரணில் அரசுக்கு ஒரு உறுதித்தன்மையை வழங்கும் அதேசமயம் சிறீலங்காவின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், சிறீலங்கா பாதுகாப்பானது அங்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல முடியும் என்ற தோற்றப்பாட்டையும் அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வானூர்தி நிலையத்தில் இருந்து சிறீலங்காவின் தலைநகருக்கு வரும் வழியில் இருவரும் பல விடயங்களை அவசரமாக கலந்துரையாடியுள்ளனர்.

தீவிரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது, நீண்டகாலப் திட்டதின் அடிப்படையில் சிறீலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது போன்றவை அங்கு முக்கியமாகப் பேசப்பட்ட விடயங்களாக இருந்தபோதும், தற்போததைய சூழ்நிலையில் சிறீலங்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் குறித்தும், அதில் தற்போதைய ரணில் அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதகமான நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைதீவு அரசு சீனாவிடம் இருந்து பெற்ற பெரும் தொகை கடன்களை அடைத்து அங்கு தனக்கு சாதகமான ஒரு அரசை அமைப்பதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்த இந்தியா தற்போது சிறீலங்கா பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

Leave a Reply