மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? – ராச்குமார்

552 Views

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் மூன்றாவது பகுதி.

 

கேள்வி

இன அழிப்பு என்ற பதத்தைப் பாவிப்பதற்கு சர்வதேசம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். ஏனென்றால், இது ஒரு ஆரம்பப் புள்ளியாகி விடும். பலருக்கு பல விதங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கூறினார்கள். இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது.

பதில்

அரசியல் தளத்தில் ஏன் இவர்கள் இன அழிப்பு என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறா்கள் என்றால், சர்வதேச குற்றங்களுக்கு எதிரான சட்டம் என்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. ஐ.நா.வில் முதலாவதாக எழுதப்பட்ட சாசனம் இன  அழிப்பு பாதுகாப்பிற்கான சாசனம். இன்று பல மாற்றங்களுக்க ஊடாக இந்த சாசனம் வந்திருக்கின்றது. ஏதோ ஒரு நாட்டில் இன அழிப்பு நடக்கின்றது என்று ஒத்துக் கொண்டால், எல்லா நாடுகளுக்கும் உடனடியாகத் தலையிட்டு, அந்த இன அழிப்பை நிறுத்த வேண்டிய அல்லது தடுக்க வேண்டிய அடிப்படைக் கடைப்பாடு இருக்கின்றது. அந்தக் கடப்பாட்டிலிருந்து தப்பிப்பதற்காகவே அந்த வார்த்தையை சொல்ல வேண்டாம் என்று எங்களுக்குச் சொல்கின்றார்கள். அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களுக்கு இலகுவான வழியில் நகர்வதையே இராஜதந்திரம் என்று சொல்வார்கள். எங்கள் பக்கத்தால் அழுத்தம் குறைவாக இருந்தால் அவர்கள் எங்கள் பக்கத்தாலேயே நகர்வார்கள். இலங்கை அரசாங்கத்தின் பக்கம் அழுத்தம் மிகமிகக் கடுமையாக இருப்பதால் அந்தப் பக்கம் நகர மாட்டார்கள்.

அந்த அடிப்படையில் நாங்கள் இதை அழுத்தம் திருத்தமாக இன அழிப்பு என்று சொல்ல வேண்டியது எங்கள் கடமை. இன அழிப்பு இல்லை என்பதற்கு அவர்கள் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  ஏனெனில், எந்தக் கட்டத்தில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்கின்றார்களோ அந்தக் கட்டத்தில் அவர்கள் செயற்பட வேண்டியது என்பது அவர்களின் சர்வதேசக் கடமை. இந்த அடிப்படையில் தான் அவர்கள் இதைக் கதைக்க  வேண்டாம் என்கிறார்கள். இதுமுதலாவது.

இரண்டாவது இது தொடர்பாக ஐ.நா.வில் முக்கியமாக மனித உரிமைக் கழகத்தில் பேசும் போது, இலங்கை அரசாங்கம் ஐ.நா.வை விட்டு விட்டுப் போய்விடுவார்கள். அப்படி விட்டு விட்டுப் போனால், இலங்கை அரசாங்கத்துடன் செயற்பட முடியாது என்ற ஒரு நொண்டிச் சாட்டை சர்வதேசம் கொடுக்கின்றது.

இலங்கைக்கு எதிரான தடைகள் தொடர்பான உரையாடல்கள் சர்வதேசத்தில் பேசப்படுகின்றது. இவ்வாறு பேசுகின்றார்களாக இருந்தால், இலங்கை மனித உரிமைக் கழகத்திலிருந்து வெளியில் போனால், எப்படி இலங்கையை பொறுப்புக்கூறும் நடவடிக்கைக்கு கொண்டு வரவேண்டும் என்ற அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் இந்த விடயம் நகர்த்தப்படலாம்.

ஆகவே இன அழிப்பு என்பதை அவர்கள் சொல்லாமல் இருப்பதற்கான காரணம் தாங்கள் சர்வதேசக் கடமைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காகவே. ஆனால் நாங்கள் சொல்லாமல் இருப்பது அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே என்பது என் கருத்து. எங்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை ஆய்வுகள் ரீதியாகவும், கல்வியியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், நிரூபிக்கப்படக் கூடியது. நோக்கம் என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இன அழிப்பு நடைபெற்றதை விசாரிக்க வேண்டும். அது இன அழிப்பா இல்லையா என்ற தீர்ப்பு அடுத்த விடயம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது இன அழிப்பு. இதற்கு உடனடியான தீர்வு வேண்டும். இதை நிறுத்த வேண்டும் எனச் சொல்ல வேண்டியது தமிழ் மக்களின் கடமை. அரசியல் தலைமைகளின் கடமையும் ஆகும். இதை சட்டபூர்வமாக, ஆதாரபூர்வமாக, தர்க்கபூர்வமாக நிறுவச் சொன்னால்கூட நிறுவ முடியும். இதைப் பேசுவதற்குப் பலர் இருக்கின்றார்கள்.  கிழக்கு மாகாணத்தில் வரலாற்று ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகளுக்கான ஒரு குழு (Task Force) ஒன்றை அரசு நியமித்திருக்கின்றது. இந்தக் குழுவின் நோக்கமே தமிழ் மக்களின் ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சிகளைப் பலவீனப்படுத்தி, அதை சிங்கள மக்களின், அல்லது சிங்கள தேசிய அடையாளங்களாக மாற்றுவதே அவர்களின் நோக்கம். அது எல்லோருக்கும் தெரிந்தது. பல கல்வி சார் சமூகத்தினர் இது பற்றி சொல்கின்றார்கள். இதுவும் ஒரு உதாரணம். இதைப் போல பல உதாரணங்களை நாங்கள் கொண்டுவர முடியும்.

 கேள்வி

புலம்பெயர்ந்த நாடுகளில் இவற்றை சரியான பாதையில் எடுத்துச் செல்வதற்கு எங்களிடம் சரியான வளம் இருக்கின்றதா? அழுத்தத்தைக் கொடுப்பதற்கு காத்திரமாக செயற்படுவதற்கு அமைப்புக்கள் இருக்கின்றதா?

பதில்

நிச்சயமாக. புலம்பெயர் தேசத்தில் இந்த விடயங்களை நகர்த்தக்கூடிய பல திறமைசாலிகள் இருக்கின்றார்கள். ஒரு நிகழ்ச்சி நிரலில் இதை நகர்த்துவதற்கும், அதற்கான நிதி வளத்தைச் சேர்க்கக்கூடிய நிலையிலும் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அது இதுவரை நடக்கவில்லை என்பது தான் எனது கருத்தாக இருக்கின்றது. அதற்கான காரணங்கள் பல கூறலாம்.  அது ஒரு தூர நோக்காகவே இருக்கின்றது. இப்படியான நிபுணத்துவம் வாய்ந்தவர்களை இந்தத் துறையில் இருத்தி இந்த வேலைகளைச் செய்வதற்கான தன்மை தமிழ் மக்களின் மத்தியில் ஒரு வெற்றிடமாகவே இருக்கின்றது.

ஊடக பரப்பிலே வரக்கூடிய தங்களுடைய அமைப்பிற்கு ஒரு  பிரபல்யத்தை ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் தான் அவை ஈடுபடுகின்றதோ என்ற ஒரு சந்தேகம் எனக்கு வருகின்றது. இப்படியான ஆதாரங்களடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தூர நோக்கோடு செய்யப்பட வேண்டிய விடயங்கள். இவை செய்யப்படுவதில்லை. 2010ஆம் ஆண்டு மிக முக்கியமான ஒரு சர்வதேச அளவில் இயங்கிய தமிழ் அமைப்பு இன்று நிலை தெரியாது போன ஒரு அமைப்பிடம் நான் நேரடியாக கேட்ட கேள்வி இதுதான். ஆதாரங்கள் எல்லாம் நீங்கள் எடுக்கின்றீர்கள். இந்த ஆதாரங்களை எல்லாம் நாங்கள் ஐ.நா.விற்கு கொடுக்கின்றோம். அங்கே கொடுக்கின்றோம், இங்கே கொடுக்கின்றோம். தமிழரை மையமாக இந்த ஆதாரங்களை வைத்திருக்கும் ஒரு அமைப்பு இருக்கின்றதா? ஏனெனில், நாளை ஒரு விசாரணை என்று வரும் போது, நாங்கள் கொடுத்த ஆதாரங்களை கொடுத்த இடங்களில் போய் எடுக்க முடியாது. அத்துடன் எங்கள் ஆதாரங்களை வழங்கியவர்கள்கூட உயிருடன் இருப்பார்களோ என்ற ஒரு கேள்வி இருக்கின்றது.

எங்களுக்கு நடந்த இன அழிப்பு 2003ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடந்து கொண்டிருந்த பல செயற்பாடுகள் தொடர்பாகவும், 2009இல் நடந்த செயற்பாடுகள் தொடர்பாகவும்  முக்கியமான நாடுகளாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளிடம் பல ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்களை  கட்டங்கட்டமாக, ஏதோ ஒரு விதமாக அவர்களிடமுள்ள சட்ட இடைவெளிகளுக்கு ஊடாக எடுத்து பொதுமைப்படுத்தி ஒரு ஆதாரமாக வைக்க வேண்டிய ஒரு கடமை இருக்கின்றது.

ஒரு உதாரணம் தருகின்றேன். பில் மிலர் என்கின்ற ஒரு ஊடகவியலாளர், 5, 6 வருடங்களாக தன் முழு நேரத்தைப் போட்டு பிரித்தானியாவின் கூலிப்படை எப்படி நாடுகளில் போர்க் குற்றங்களை இழைத்திருக்கின்றது என்ற ஆதாரங்களை சேரத்திருக்கின்றார். அதை கீனி மீனி என்ற ஒரு புத்தகமாகவே வெளியிட்டிருக்கின்றார். அவர் மிகவும் கடினப்பட்டு, சட்டத்தின் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்தே இவற்றிற்கான ஆதாரங்கள் பலவற்றை எடுத்திருக்கின்றார். அப்படியாக நாங்கள் செயற்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம்.

ஆதாரங்கள் இருக்கும் இடங்களில் இருந்து அவற்றைப் பெற்று ஒரு தமிழர் அமையமாக பொதுமையான இடத்தில் அவற்றை வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது.

இந்த விடயத்தை நாங்கள் முன்னிலைப்படுத்திவில்லை. இவை எல்லாம் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய விடயமாக இருந்தாலும், இன்று எம் முன் இருக்கின்ற ஒரு அவசர செயற்பாடாக, இந்த விடயங்கள் சார்ந்து தமிழர்களுடைய ஒரு நிலைப்பாடாக, தெளிவாக அந்த நிலைப்பாட்டை வைக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம். அதை நாங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கின்றது என்று தான் நான் நினைக்கின்றேன். பல அமைப்புக்கள் இதற்கான முயற்சிகளை செய்கின்றார்கள். ஆனால் எல்லா அமைப்புக்களும் ஒரே தளத்தில் வந்ததாக இல்லை.

Leave a Reply