மாங்குளம் வைத்தியசாலையின் ஒரு பிரிவு வடக்கில் 4 வது கொரோனா சிகிச்சை நிலையமாகிறது

549 Views

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கொவிட் -19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பிரிவு நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆகேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருந்தங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒரு பகுதி கொவிட்-19 சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மருந்தங்கேணி ஆரம்ப வைத்தியசாலையில் 50 நோயாளர் படுக்கைகளைக் கொண்டதாக கொவிட்-19 சிகிச்சை நிலையம் கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கி வருகிறது. அத்துடன், கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரி வளாகத்தில் ஒரு பகுதி 350 கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும் நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்த்தில் கிருஷ்ணபுரம் பகுதியில் கொவிட் -19 சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது. சுமார் 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த கொவிட்-19 சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சிநிலையமாக இருந்து தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஆளுகைக்குள் இருக்கும் காணியிலேயே இந்தசிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply