மாகாண சபை முறைக்கும் ஆப்பு? கோத்தா வகுக்கும் ரகசிய தீட்டம்-கொழும்பிலிருந்து அகிலன்

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து பொதுத் தேர்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில், முக்கியமான ஒரு விடயம் மக்களின் கவனத்திலிருந்து தப்பிப் போயிருக்கின்றது. அதுதான் மாகாண சபைகளுக்கான தேர்தல். மாகாண சபைகள் கலைக்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டன. சில மாகாண சபைகள் சில வருடங்களுக்கு முன்னரே கலைக்கப்பட்டுவிட்டன. ஒன்பது மாகாணங்களிலும் இப்போது ஆளுநர் ஆட்சிதான். மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமலிருப்பதன் பின்னணியில் இரகசியத் திட்டம் ஒன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதில் உண்மை இருக்கின்றதா? அது குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் தேர்தல் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அங்கு உரையாற்றிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முக்கியமான ஒரு கோரிக்கையை புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகிய கோத்தபாய ராஜபக்ஷவிடம் முன்வைத்தார். “மாகாண சபைகளுக்கான தேர்தல் பல மாத காலமாக நடத்தப்படாமலிருக்கின்றது. அதனை உடனடியாக நடத்துங்கள்” என்பதுதான் அந்த கோரிக்கை. வழமைபோலவே கொடுப்புக்குள் சிரித்தாவாறே இதனைச் செவிமடுத்த கோத்தாபய ராஜபக்ஷ, இவ்விடயத்தில் என்ன செய்யப் போகின்றார் என்பது இன்றுவரை மர்மமாகத்தான் இருக்கிறது.

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாத பிற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில்தான் முடிவுக்கு வருகின்றது. இருந்தபோதிலும் அதனை கலைப்பதற்கான அதிகாரம் மார்ச் மாதத்தில் ஜனாதிபதியின் கைகளுக்கு வருகின்றது. அந்த அதிகாரம் தன்னுடைய கைகளுக்கு வந்த உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலுக்கான உத்தரவை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் மூன்றில் இரண்டைப் பெறுவதுதான் அவரது எதிர்பார்ப்பு.

பொதுத் தேர்தல் 6 மாதங்கள் முன்னதாகவே நடைபெறப் போகின்றது. ஆனால் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது தெளிவற்றதாக இருக்கின்றது. ஒன்பது மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு இப்போது அந்த மாகாணங்களில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் ஆட்சியே நடைபெறுகின்றது. பொதுத் தேர்தலுக்குப் பின்னரே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால், அதில் இப்போது ஒரு சிக்கல் இருப்பதாகவும், சிங்களத் தேசியவாதிகள் இரகசியத் திட்டம் ஒன்றுடன் செயற்படுவதாகவும் தமிழ்க் கட்சித் தலைவர் ஒருவர் சொல்கிறார்.Sri Lanka provinces மாகாண சபை முறைக்கும் ஆப்பு? கோத்தா வகுக்கும் ரகசிய தீட்டம்-கொழும்பிலிருந்து அகிலன்
கோதாபய ராஜபக்ஷவை பொறுத்தவரையில் அதிகாரப் பரவலாக்கல் மற்றும் 13வது திருத்தச்சட்டம் குறித்து தன்னுடைய நிலைப்பாடு இதுதான் என்பதை அவர் தெளிவாக கூறிவிட்டார். அதிகாரப் பரவலாக்கலை வழங்கப் போவதில்லை என்பதும், 13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய பொலிஸ் காணி அதிகாரங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வழங்கப்படாது என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. மாகாணசபை முறை நாட்டுக்கு அவசியம் இல்லை என்பது கூட அவரது நிலைப்பாடாக தெரிவிக்கப்பட்டாலும் கூட அதனை அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. பகிரங்கமாகச் சொல்வது இந்தியாவைச் சீண்டுவதாக இருக்கும் என்பதால், இரகசியமாக சிலவற்றைச் செய்வதற்கு அவர்கள் முற்படுகின்றார்கள்.

அதிகாரப் பரவலாக்கலையோ மாகாண சபைகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருந்த 13ஆவது திருத்தத்தையோ ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றால், மாகாண சபை முறையை கோத்தாபய ராஜபக்‌ஷ எவ்வாறு ஏற்றுக் கொள்வார் என்பது ஒரு முக்கியமான பிரச்சனை.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் நிலைப்பாடும் பெருமளவுக்கு இதனை ஒத்ததாகவே இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அளித்துள்ள பதிலில் இது தொடர்பு தன்னுடைய நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுத் தேர்தலின் பின்னரே தீர்வுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்பதையும், அந்த முயற்சிகள் கூட சிங்கள மக்களின் விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதையும் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக தெரிவித்திருக்கின்றார்.மாகாண சபைகளை பொருத்தவரையில் அதன் தேர்தல் முறையில் மாற்றத்தை செய்வதற்கான தீர்மானம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது கலப்புத் தேர்தல் முறையாக இருந்தமையால், அதற்காக எல்லை நிர்ணய குழு ஒன்றும் அமைக்கப்பட்டு அதனுடைய அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் இறுதியில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வதில்லை என்ற கருத்தை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது இருப்பதைப் போல விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படியே தேர்தல் நடைபெறும் என்பதுதான் அவர்களுடைய நிலைப்பாடு. ஆனால், பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும்.

மாகாணசபைகளுக்கான தேர்தலுக்குச் செல்வதற்கான நிலையில் அப்போது ரணில் விக்கிரமசிங்க இருக்கவில்லை. வடக்கில் விக்கினேஸ்வரனும் பலமான நிலையில் இருந்தார். அதனால், மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதை கூட்டமைப்பும் விரும்பவில்லை.ranil sam மாகாண சபை முறைக்கும் ஆப்பு? கோத்தா வகுக்கும் ரகசிய தீட்டம்-கொழும்பிலிருந்து அகிலன்

அதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் அக்கறை காட்டவில்லை. இப்போது மாகாண சபைகள் இல்லாத நிலை தொடர்கின்றது. அதாவது, தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய குறைந்த பட்ச அதிகாரப் பரவலாக்கலுக்கான பொறிமுறையும் காணாமல் போய்விட்டது.

இதிலுள்ள ஆபத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு விடயங்கள் இதில் கவனத்திற்கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஜனாதிபதி கோத்தாபய பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிகழ்த்திய உரையில் முக்கியமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். “நான் என்னுடைய பதவிக்காலத்தில் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் எனவும். பௌத்த மதத்தைப் பாதுகாப்பேன் எனவும் உறுதியளிக்கிறேன்” என அழுத்தியுரைந்திருந்தார். இவை இரண்டும் ஏற்கனவே உள்ளவை. இதில் பாதுகாக்க என்ன உள்ளது?

ஒற்றையாட்சி என்பது அரசியலமைப்பிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. தற்போதுள்ள நிலைமையில் ஒற்றையாட்சியை சற்று கேள்விக்குள்ளாக்கக்கூடியவகையில் இருப்பது மாகாண சபைகள்தான். ஆக, “ஒற்றையாட்சியை பாதுகாப்பேன்” என திரும்பத் திரும்ப கோத்தா சொல்லிக்கொள்வதன் உள்ளார்த்தம் மாகாண சபைகளை இல்லொதொழிப்பதாகவும் இருக்கலாம் என தமிழ்க் கட்சிப் பிரமுகர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமும் இருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவருவதை ராஜபக்‌ஷக்கள் தொடர்ந்தும் தவிர்த்துக்கொண்டால், மாகாண சபைகள் இல்லாத நிலையே தொடரும். அது காலப்போக்கில் பழகிவிட கவர்னர் ஆட்சிதான் தொடரும்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவரைச் சந்தித்த சிங்களக் கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர் இப்படிச் சொன்னாராம். “ரணிலைப் பாதுகாப்பதற்காகவும், விக்கினேஸ்வரன் குறித்த அச்சத்தினாலும் மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க நீங்கள் உதவினீர்கள். இனி மாகாண சபைகளே இல்லாத நிலைதான் தொடரப் போகின்றது.”  அவர் சொன்னதில் பெருமளவு உண்மை உள்ளது. கூட்டமைப்பின் தூரநோக்கற்ற – இராஜதந்திரமற்ற சுயநல அரசியல் போக்கினால் குறைந்த பட்ச அதிகாரத்தை வைத்திருப்பதற்காக இருந்த மாகாண சபைகள் கூட இல்லாமல் போய்விடுமா என்ற கேள்வி தமிழ்ப் புத்திஜீவிகள் மத்தியில் இன்று எழுகின்றது.