நான் கீழ் மட்டத்திலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவன். ஆகையால் மலையக மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள், சமூக பொருளாதார அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நன்கு அறிவேன். எனவே எல்லைகளையும் கடந்து மலையக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். என்னால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளை எனது தலையை அடகு வைத்தேனும் நிறைவேற் றுவேன் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையில் உப தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினரான அருணாச்சலம் அரவிந்தகுமார், வேலுகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், எஸ். ஸ்ரீதரன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் நாயகம் சந்திரா சாப்டர், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்திருந்த நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.
குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்களின் அடிப்படை தேவைகள், வீடமைப்பு சமூக பொருளாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி தமது தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தது. சகலரினதும் வெளிப்படுத்தல்களையும் செவிமடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகையில் , நான் கீழ் மட்டத்திலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவன்.
ஆகையால் மலையக மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள், சமூக பொருளாதார அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நன்கு அறிவேன். எனவே எல்லைகளையும் கடந்து மலையக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
அது மாத்திரமின்றி மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை எட்டும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன். அதனூடாக பிரச்சினைகளை இலகுவாக அனுகுவதற்கும் தீர்வுகளை காண்பதற்கும் முடியுமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் என்னால் வழ்கப்படுகின்ற அனைத்து வாக்குறுதிகளையும் எனது தலையை அடகு வைத்தேனும் நிறைவேற்றியே தீருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.