இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகினீ்றது.அதன் அர்த்தம் இலங்கை மக்களின் அடிமைச்சங்கிலி உடைத்தெறியப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன என்பதாகும்.
இலங்கையின் சுதந்திரம் வேண்டி சேர். பொன. இராமநாதன், சேர் பொன்.அருணாசலம், டாக்டர் டீ.பி.ஜாயாஉள்ளிட்ட பல தலைவர்கள் அடிக்கடி பிரித்தானியாவிடம் வலியுறுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவுடன் ஒப்பிடுமிடத்து இந்தியத் தலைவர்கள் அந்நாடு சுதந்திரமடைய மேற்கொண்ட தீவிர முயற்சிகளைப் போல இலங்கையர்கள் மேற்கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு அண்ணல் காந்தியடிகள் அகிம்சை வழிமுறையை கடைபிடித்தார்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் துப்பாக்கி முனையில் சுதந்திரம் காண விழைந்தார்.இருவரது இலக்குகளும் ஒன்றாகவே இருந்தன.எனினும் அந்த இலக்குகளை அடைவதற்கான போக்குகள் வெவ்வேறாக காணப்பட்டன.சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு விதிமுறைகளில் இந்தியாவின் சுதந்திர இலக்கு எட்டப்பட்டது.
எனினும் இலங்கையில் தலைவர்கள் சுதந்திரம் வேண்டி பிரித்தானியாவிடம் அறிக்கை விடுதல், மனுசெய்தல் போன்ற நடவடிக்கைகளையே கூடுதலாக மேற்கொண்டனர்.எவ்வாறாயினும் 1947 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திர பறவைகளாக இலங்கையர்கள் பறக்கத் தொடங்கினர்.இவ்வேலையில் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் மலையக மக்களின் சார்பாக இச்சுதந்திரம் எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது? என்று நோக்குமிடத்து நிலைமை மிகவும் கசப்பானதாக உள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.பட்டு வேட்டிக் கனவில் ஆசையுடன் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்ட நிலையிலேயே மலையக மக்களின் வாழ்க்கை பயணம் ஓடிக்கொண்டிருக்கின்றது.அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளில் மலையக மக்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த நிலையிலும் பார்க்க இப்போது வெகுவாக அபிவிருத்தி அடைந்துவிட்டனர் என்று சொல்வதற்கில்லை.
வெள்ளையர்களால் தேயிலையில் மாசி உண்டு என்று ஏமாற்றப்பட்டு கூலித் தொழிலாளர்களாக தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட இம்மக்கள் தொடர்ந்தும் அடிமை வாழ்வையே மேற்கொள்ள வேண்டிய ஒரு நிலை மேலெழுந்து காணப்படுகின்றது.இவ்வடிமை வாழ்வில் இருந்து மீட்சி பெறுவதற்கு வழிவகைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றபோதும் திருப்தியற்ற வெளிப்பாடுகளே எஞ்சி நிற்கின்றன.அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாக மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பல அரசியல்வாதிகள் சந்தாப்பணத்தின் மீது காட்டும் அக்கறையை சமூகத்தின் மீது காட்டவில்லை என்ற பலமான குற்றச்சாட்டு ஒன்று மலையக மக்களிடையே இருந்து வருகின்றது.ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுமிடத்து மலையக மக்கள் இலங்கையில் மிகவும் பின்தள்ளப்பட்ட ஒரு சமூகமாக இருந்து வருவதனை அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
இச்சமூகத்திற்கு கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளையும் இனவாதிகள் தட்டிப் பறிப்பதில் மிகவும் குறியாக இருந்தை வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.அரசியல்வாதிகள் மலையக சமூகத்துக்கு சலுகைகளை பெற்றுக் கொடுத்து சமூக கொந்தளிப்பினை தற்காலிகமாக கட்டுப்படுத்த முற்படுகின்றனரே தவிர உரிமைகளை பெற்றுக் கொடுத்து மலையக மக்கள் எழுச்சிப் பாதையில் பயணிக்க வழிகாட்டுவதென்பது குறைவாகவே உள்ளது.தூரநோக்கு, தூரதரிசனம் என்பன குறைந்த நிலையிலுள்ள சில அரசியல்வாதிகளின் பின்தங்கிய செயற்பாடுகள் காரணமாக இம்மக்களின எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.மலையக அரசியல்வாதிகள் சிலர் தமக்குள்ளேயே கருத்து முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டு பிளவுபட்டு செயற்படுகின்றார்கள்.இந்நிலையில் இனவாதிகளும் மலையக மக்களை கூறுபோட்டு குளிர்காய்ந்து வருகின்றனர்.காய் நகர்த்தல்களையும் இவர்கள் சௌகரியமாக மேற்கொண்டு வருகின்றனர்.இனவாதிகளின் மாய வலைக்குள் சிக்கிய மலையக அரசியல்வாதிகள் அற்ப சலுகைகளுக்கும் அமைச்சு பதவிகளுக்கும் விலைபோவதாக கண்டனக் குரல்கள் மேலோங்கி வருகின்றன.
ஆட்சியில் அமரப்போகும் பிரதான சக்திகளை தீர்மானிப்பவர்களாக விளங்கிய மலையக மக்கள் இப்போது பேரினவாதிகளிடம் தஞ்சமடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இனவாதிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளினால் மலையக அரசியல் ஆளுமை படிப்படியாக மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது.ஏற்கனவே கோலோச்சிய பேரம்பேசும் ஆளுமையின் வலுவிழந்த போக்கும் வெளித்தெரிகின்றது.எதிர்காலத்தில் இந்நிலைமை மேலும் மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமுள்ளன.இலங்கைக்கு அரசியல் ரீதியாக சுதந்திரம் கிடைத்தபோதும் மலையக மக்களுக்கு அரசியல் ரீதியாக எதுவிதமான சுதந்திரமும் கிடைத்ததாக இல்லை என்பதே உண்மையாகும்.
பொருளாதார ரீதியாகவும் இம்மக்களின வாழ்க்கைத்தரம் மேம்பாடு கண்டுள்ளதாக தெரியவில்லை.நாட்கூலிகளாக தொழில் புரியும் இவர்கள் மாதச்சம்பளம் கோரி நடாத்திய போராட்டங்கள்”செவிடன் காதில் ஊதிய சங்காகி ” இருக்கின்றன.. உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், மெதுவாக பணி புரியும் போராட்டம் என்பவற்றின் ஊடாக ஆகக்குறைந்த சம்பள உயர்வுகளையே இவர்களால் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளமை வருந்தத்தக்கதேயாகும்.ஏனைய சமூகங்களுக்கு கிடைப்பதைப் போன்று சுயதொழில் ஊக்குவிப்பு கடன்களோ அல்லது மேலதிக வருவாயை ஈட்டித் கொள்ளக் கூடிய வகையில் உற்பத்தி மார்க்கங்களோ இவர்களுக்கு கிடையாது.பெருந்தோட்டப் புறங்களில் பயிரிடப்படாத சுமார் 35,000 ஹெக்டேயர் தரிசு நிலங்கள் காணப்படுகின்றன.இவற்றில் பொருளாதார அபிவிருத்தி கருதி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமக்குபகிர்ந்தளிக்குமாறு தொழிலாளர்கள் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.என்றபோதும் சாதக விளைவுகள் இதுவரை ஏற்படவில்லை.
குடியிருப்பு வசதியின்மை
அரசின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகின்றது.எனினும் வரவு செலவு திட்டம் அரச ஊழியர்களை மையப்படுத்தி அவர்களை திருப்திப்படுத்த முனைகின்றதே தவிர சாதாரண தோட்டத் தொழிலாளர்களுக்கு இதனால் எவ்விதமான நன்மையும் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமாகும். சொற்ப தொகை நாட்கூலிக்காக மலையக மக்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளனர்.உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பது இவர்களுக்கு கானல் நீராகியுள்ளது.வெள்ளையர்களின் பிடிக்குள் இலங்கை இருந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய நெருக்கீடுகளே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.வெள்ளையர்கள்்தொழிலாளர்களை. கூலிப்படைகளாக இலங்கைக்கு அழைத்து வந்து தற்காலிக தங்குமிடங்களாக ” லயன் ” வீடுகளை அமைத்துக் கொடுத்தனர்.பின்னதாக சிறப்பானதும் அழகானதுமான வீடுகள் தொழிலாளர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் என்று வெள்ளையர்களால் வாக்குறுதி வழங்கப்பட்டது.எனினும் இவ்வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன.
தேயிலைத் தோட்ட தொழில் நிமித்தமாக இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் தாயகம் செல்வதிலேயே குறியாக இருந்தனர்.எனவே லயன் வீடுகளை புனரமைக்க நிர்வாகத்தை கோருவது தொடர்பான அக்கறை அவர்களுக்கு இருக்கவில்லை.அதைப்போன்றே நிர்வாகமும் இது குறித்த .அக்கறை இல்லாத நிலையிலேயே இருந்தது.இந்நிலையில் லயன் அறைக் கலாசாரம் இன்னும் மலையகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.150 வருடங்கள் பழைமையான லயன்களே இடிந்து விழும் நிலையில் மலையகத்தில் இப்போது காணப்படுகின்றன.காலத்துக்கு காலம் ஆட்சிபீடமேறும் அரசாங்கங்கள் தோட்டப் புற குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தப்போவதாக மார்தட்டிக் கொள்கின்றபோதும் அநேகமான மக்கள் லயத்துச் சிறைகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.இதனால் கல்வி, உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டு வரும் நிலையில் கலாசார பின்னடைவுகளையும் இவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தனிவீடுகள் இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளபோதும் முறையான திட்ட வரைவின் கீழ் இவை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சுதந்திரத்துக்கு முன்னதாக தாம் குடியிருந்த குடியிருப்புகளிலேயே இன்றும் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சுதந்திரத்தின் பின்னர் கல்வித்துறையில் ஓரளவு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.1980 காலப்பகுதியில் தோட்டப் புற பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.இதனால் மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பு அல்லது திருப்புமுனை ஏற்பட்டது.மலையகத்தின் பல கஷ்டப்பிரதேச பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டு வளப்பற்றாக்குறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.உயர்கல்வி பெறுவோரின் தொகையிலும் சுதந்திரத்துக்கு முன்னைவிட ஓரளவு அதிகரிப்பினை காண முடிகின்றது.எனினும் தேசியமட்ட வாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் மலையகத்தின் கல்விப் போக்கு திருப்திகரமானதாக இல்லை.உரிய கல்வி இலக்குகளை அடைவதற்கு மலையகம் இன்னும் பல மைல் கற்களை தாண்ட வேண்டியுள்ளது.வருடாந்தம் பல்கலைக்கழக அனுமதிபெறும் மலையக மாணவர்களின் தொகை 0.5 வீதத்திற்கும் குறைவாகும்.எனவேஇந்நிலை உயர்த்தப்படுதல் வேண்டும்.பெருந்தோட்டப்புற அரசாங்க பாடசாலைகளில் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகமாகவுள்ளன.துறைசார்ந்த ஆசிரியர்களுக்கான பற்றாகுறை நிலவுகின்றது.இவ்வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டு மலையகத்தின் கல்வி அபிவிருத்திக்கு வலுவூட்டுதல் வேண்டும்.தேசிய கல்வி நிலைமையுடன் போட்டியிட்டு செல்வதற்கு ஏதுவாக மனித மற்றும் பௌதிகவள விருத்தி மலையக பாடசாலைகளில் இடம்பெறுதல் வேண்டும்.
இன விகிதாச்சாரத்துக்கேற்ப தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் நிலைமைக்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டியதும் அவசியமாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெருமுயற்சியால் இந்திய வம்சாவளி மக்கள் பறிக்கப்பட்ட பிரசாவுரிமை, வாக்குரிமை என்பவற்றை மீளவும் பெற்றுக் கொண்டனர்.இதனால் அரச தொழிற்றுறையில் மலையக இளைஞர் யுவதிகளின் உள்ளீர்ப்பு சாத்தியமானது.இப்பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்படுதல் வேண்டும்.
இலங்கை 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் மலையக மக்கள் இன்னும் பல்வேறு துறைகளிலும் எழுச்சி பெற வேண்டியுள்ளது. இந்த எழுச்சி சாத்தியமாவதற்கு அரசாங்கம் ஆவண செய்வதோடு எல்லா துறைகளிலும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுதலும் வேண்டும்.மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், அரசுசார்பற்ற நிறுவனங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இனவாதமற்ற நிலையில் அனைத்து சமூகத்தினரும் மலையகத்தவர்களுடன் சுதந்திர தினத்தில் கைகோர்ப்பது பல்துறை அபிவிருத்திக்கு உந்துசக்தியாகும் என்பதை மறுப்பதற்கில்லை.