மற்றுமொரு ஆபிரிக்க நாட்டையும் இழந்தது பிரான்ஸ்

ஆபிரிக்காவின் ஆமற்கு கரையில் உள்ள கபோன் என்ற நாட்டில் கடந்த புதன்கிழமை (30) இடம்பெற்ற இரணுவப்புரட்சியை தொடர்ந்து அந்த நாட்டின் அரச தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

1960 ஆம் ஆண்டு பிரான்ஸிடம் சுதந்திரமடைந்த பின்னர் ஒமார் பொன்கோ 2009 ஆம் ஆண்டுவரை ஆட்சிபுரிந்து வந்ததுடன், அவரின் மரணத்தின் பின்னர் அவரின் மகன் அலி பொன்கோ அதிபராக பதவியேற்றிருந்தார்.

அவரும் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்து வந்ததுடன், பிரான்சுடன் நெருக்கிய தொடர்புகளையும் அவர்கள் பேணிவந்திருந்தனர். கடந்த சனிக்கிழமை(26) அங்கு இடம்பெற்ற தேர்தலில் மூன்றாவது தடவை அலி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோதும், அதனை ஏற்க மறுத்த படைத்தரப்பு தேர்தல் முடிவுகளை நிராகரித்ததுடன் அரச தலைவரை சிறைப்பிடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

படைத்தரப்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளிவந்ததும் பெருமளவான மக்கள் தமது மகிழ்சிகளை தெரிவித்து வீதிகளில் இறங்கி படையினருக்கு தமது ஆதரவுகளை தெரிவித்ததை பல ஊடகங்கள் ஒளிபரப்பியிருந்தன.

அண்மையில் நைகரில் இடம்பெற்ற படைத்துறை புரட்சியை தொடர்ந்து அந்த நாட்டை இழந்த பிரான்ஸ் தற்போது மற்றுமொரு நாட்டையும் இழந்துள்ளது. மாலி, குனியா, புர்கினோ பசோ, சாட் மற்றும் நைகர் ஆகிய நாடுகளில் அண்மையில் இராணுவப்புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளபோதும், தேர்தல் முடிவுகள் மதிக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.