மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலுப்பக்கடவை பகுதியில் அமைக்கப்படுகின்ற இறால் பண்ணையால் அக்கிராமத்தில் கரையோர மீன்பிடியை நம்பி வாழும் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
இதுதொடர்பாக இலுப்பக்கடவை மீனவ மக்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது,
”நாங்கள் இலுப்பக்கடவை மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாது என்ற படியினால் எங்கள் குடும்பங்களில் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் கரையோர மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றோம்.
இங்கு இறால் பண்ணை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் கரையோர மீன்பிடியை நம்பி வாழும் எங்களுடைய மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.
அதுமட்டுமல்லாது முதலில் நண்டுப் பண்ணை அமைப்பதற்கு அனுமதி கொடுத்து இருந்தார்கள். இதனால் மழை காலங்களில் அதில் வரும் கழிவு நீர் வடிந்து கடலுக்கு செல்ல முடியாமல் அருகிலுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிக்கின்றது. இதனால் துர்நாற்றங்களும் நுளம்பு பெருக்கங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
மேலும் இங்கு அமைக்கப்படும் நண்டு இறால் பண்ணைகள், கடல் கொந்தளிப்பு மழை வெள்ளப்பெருக்கு காலங்களில் எமது கிராமம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த இறால் பண்ணைகளின் தொடர் நடவடிக்கைகளால் கடலில் கழிவு நீர் கலப்பதுப்பதுடன் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வது தடுக்கப்படுகின்றது.
இந்தக் கொரோனா காலத்தில் ஏழை மீனவர்கள் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், இறால் நண்டு பண்ணை உரிமையாளர்கள் அதிக இலாபங்களை சம்பாதித்து அவர்களுடைய குடும்பங்களோடு வசதியாக வாழ்கின்றனர்.
இங்கு சிறு கரையோர மீன்பிடி தொழிலாளர்களாக இருக்கும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் இறுதியில் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
இந்த நண்டு இறால் பண்ணைகள் தடுத்து நிறுத்தப்பட்டால் இந்த கிராமத்தைச் சார்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட கரையோர மீன்பிடிக் குடும்பங்கள் அன்றாடம் உழைத்து நிம்மதியாக நீண்டகாலம் வாழ்வார்கள்” என தெரிவிக்கின்றனர்.