மனிதப் புதைகுழி விவகாரம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது-சமூக செயற்பாட்டாளர் இந்திக பெரேரா

முல்லைத்தீவு மனித புதைக்குழிகள்: விசாரணை மீண்டும் தொடங்குமா?

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், மனித புதைக்குழிகள் தொடர்பிலான பேச்சுக்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஓரிரு தினங்களிலேயே முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மற்றுமொரு மனித புதைக்குழி தொடர்பிலான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இலங்கையின் சமூக செயற்பாட்டாளர் இந்திக பெரேராவுடன் ஒரு நேர்காணல்…

  கேள்வி:- 

இனவாத நிலைமைகள் இலங்கையின் அபிவிருத்திக்கும், நல்லிணக்கச் சூழலை கட்டியெழுப்புவதற்கும் தடையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே!

*  பதில்:-

உண்மைதான்.இனவாதம் என்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகவுள்ளது.இனவாதத்தை கையில் எடுத்தவர்கள் இனவாதத்தாலேயே வீழும் நிலை ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு (1948)  முன்னரும் சரி, சுதந்திரம் பெற்ற பின்னரும் சரி இனவாத விதைப்பிற்கு ஒரு போதும் குறைவிருக்கவில்லை.சிறுபான்மை மக்கள் இனவாதத்தால் பல்வேறு துன்ப துயரங்களையும் கடந்த காலத்திலும் சம காலத்திலும் அனுபவிக்கும்  வரலாறு மிகவும் கொடுமையானதாகும்.இனவாதத்தால் இலங்கை சவால்கள் பலவற்றையும் சந்தித்துள்ளது.இதன் தொடர்ச்சி இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.நாட்டின் அபிவிருத்தி மட்டுமல்லாது சர்வதேசத்தின் முன்னாள் இலங்கை தலை குனிவதற்கும் இனவாத முன்னெடுப்புக்களே ஏதுவாகின என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.இவ்வாறாக இனவாதம் தீமைகள் பலவற்றுக்கும் அடிப்படையாக இருந்தபோதும் இனவாத சிந்தனையாளர்கள் இன்னும் இனவாதத்தால் கற்றறிந்த பாடங்களை கருத்தில் கொண்டு திருந்துவதாக இல்லை என்பது வருந்தத்தக்க விடயமாகவே தென்படுகின்றது. இனவாத முன்னெடுப்புக்கள் காரணமாக ஐக்கியம் மிக்க நாட்டை கட்டியெழுப்புவதில் பெரும் இடர்பாடுகள் எதிர்கொள்ளப்படுகின்றன.”இலங்கையர்” என்ற பொது வரையறைக்குள் காரியமாற்றுமிடத்து பிரச்சினைகள் பலவற்றுக்கும் இலகு வழியில் தீர்வினைக் கண்டுவிட முடியும்.எனினும் இனம்,மதம்,சாதி என்றும் மொழி ரீதியாகவும் பிரிந்து நிற்கையில் தீமைகள் பலவும் மேலோங்குவதைத் தவிர்க்க முடியாது.

இலங்கை இன்னும் பல்வேறு அபிவிருத்தி இலக்குகளையும் அடைய வேண்டியுள்ளது.கொரோனாவின் தாக்கம் மற்றும் அரசியல்வாதிகளின் எதேச்சாதிகார போக்குகள் என்பன நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்திற்கு தள்ளியுள்ளன.பலர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்க்கை நடாத்துகின்றனர்.மூன்று வேளை உணவை ஒரு வேளை உணவாக சுருக்கிக் கொண்ட குடும்பங்களும் நாட்டில் அநேகம் உள்ளன.போஷாக்கின்மை அதிகரித்து காணப்படும் நிலையில் பாடசாலைகளில் மாணவர் இடைவிலகலும் இடம்பெறுகின்றது.கலாசாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது கல்வி.மனிதனிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வது கல்வி என்று கல்விக்கு வரைவிலக்கணம் கூறுவார்கள்.இந்நிலையில் பூரணத்துவம் மிக்க கல்வியினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பல மாணவர்கள் இடர்படுவதையும் இங்கு கூறியாக வேண்டும்.இதனால் கல்வி நிலை பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றது.இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி எல்லா துறைகளிலும் உரிய இலக்கினை அடைந்து கொள்வதற்கு ஒற்றுமை அவசியமாகின்றது.எனினும் இனவாத சிந்தனையாளர்கள் இதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.இலங்கை பல்லின மக்களும் வாழ்கின்ற ஒரு அழகான நாடாகும்.ஒரு மலர் தனியாக இருப்பதை விட பல மலர்களும் இணைந்து கொத்தாக இருப்பதே அழகாகும்.இந்த வகையில் இலங்கையில் பல்லின மக்களும் வாழ்கின்றமை ஒரு அழகாகும்.இங்கு அனைவரும் சம உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உரித்துடையவராவர்.எனவே அனைத்து இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கேள்வி:-

இலங்கையின் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்!

* பதில்:-

இவ்விடயம் தொடர்பில் நாம் ஆழமாக நோக்க வேண்டியுள்ளது.இலங்கையில் முப்பதாண்டு கால கொடிய யுத்தம் இடம்பெற்றது.யுத்தம் பல்வேறு துன்ப துயரங்களையும் நாட்டில் ஏற்படுத்தியது.நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்க வேண்டிய இளம் சமூகத்தினர் இரு தரப்பிலும் உயிரிழக்க நேர்ந்தது.நாட்டின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் வீழ்ச்சி கண்டதோடு பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.இதன் தழும்பில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை.நாட்டின் தேகத்தில் யுத்தத் தழும்புகள் ஆழமாகவே பதிந்துள்ளன.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் பலர் காணாமல் போயுள்ளமை உண்மையாகும்.இவர்களில் பலர் குறித்து இன்னும் சரியான விவரங்களை அறிந்து கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அல்லது உயிரிழந்து விட்டனரா? என்பதனை அறிந்து கொள்ள முடியாதுள்ளது.காணாமல் போனோர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் நிலைமைகளில் இன்னும் பூரண அபிவிருத்தியைக் காண முடியவில்லை.காணாமல் போனோரின் குடும்பங்கள் இன்று கண்ணீரும் கம்பலையுமாக அழுது புலம்புவது நெஞ்சை உருக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது.இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பில் விரிவானதும் ஆக்கப்பூர்வமானதுமான முன்னெடுப்புக்கள் அவசியமாகவுள்ளது.இதன் மூலம் காணாமல் போனோரின் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரத்தை பெற்றுக் கொடுக்க முடியும்.

 இது இவ்வாறிருக்க தற்போது இலங்கையில் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் வலுவாக பேசப்பட்டு வருகின்றது.மனிதப் புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அண்மையில் முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன.இதன்போது மேலும் பல எழும்புக் கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.அதேநேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உள்ளிட்ட சில சான்றுப் பொருட்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும் மனிதப் புதைகுழி விவகாரம் ஒரு அச்ச சூழ்நிலையை ஏற்ப்படுத்தி இருக்கின்றது என்பதை மறுத்துவிட முடியாது.இதன் தாக்க விளைவுகளை உடனடியாக கூறுவதற்கில்லை.பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி:-இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்குமா?

பதில்:-

இலங்கையின் இனப்பிரச்சினை “பிச்சைக்காரனின் புண்ணைப் போன்று” புரையோடிப்போய் இருக்கின்றது.இலங்கையின் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று திடமாக நம்பப்பட்டது.சர்வதேச நாடுகளும் இது குறித்து தனது கவனத்தை செலுத்தி இருந்தன.எனினும் இது சாத்தியப்படாத நிலையில் இதய சுத்தியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்பது குறித்து சந்தேகங்கள் மேலெழுந்துள்ளன.

இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டு மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன.தமிழ் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.எனினும் இந்நடவடிக்கை தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை.இதேவேளை பின்னரான காலப்பகுதியில் 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டு காலங்கடந்துள்ளதால் 13 ஐயும் விஞ்சிய தீர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.இலங்கைக்கு அப்போது வருகை தந்திருந்த இந்திய பிரதமரும் 13 ஐயும் விஞ்சிய தீர்வை வலியுறுத்திப்பேசி இருந்தார்.இந்நிலையில் 13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையே வழங்காத ஆட்சியாளர்கள் எவ்வாறு 13 ஐயும் விஞ்சிய தீர்வை வழங்கப் போகிறார்கள் என்று புத்திஜீவிகள் சிலர் சந்தேகத்தையும் வெளியிட்டிருந்தனர்.

பின்நாளில் இந்த சந்தேகம் நியாயமாகி இருந்தது.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாத நிலையில் இழுத்தடிப்பு நடவடிக்கைகளையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.இது விரும்பத்தக்கதல்ல.தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டு அனைவரும் ஒற்றுமையுடன் கை கோர்க்க வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.அனைத்து இனங்களினதும் ஐக்கியத்தின் ஊடாக இலங்கைத் திருநாட்டை மீளவும் கட்டியெழுப்ப ஆட்சியாளர்கள் உறுதி பூண வேண்டும்.இதன் மூலம் ஒருவரையொருவர் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நடவடிக்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனலாம்.

கேள்வி:-

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

* பதில்:-

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்ப்புகள் பலவும் வெளிக்கிளம்பி வருகின்றன.இதன் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் நாட்டின் ஏனைய தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.ஆகவே நடுத்தர மக்களை பாதுகாப்பதற்கான கடன் சீரமைப்பு முன்னர் பிரதான நிலை வர்த்தகர்கள், செல்வந்தர்கள் மற்றும் அரச வங்கிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீளப் பெற்றுக் கொள்ள நிதியமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன.மேலும் கடன் மறுசீரமைப்பினால் தொழிலாளர்களின் 12 ட்ரில்லியன் ரூபா குறைக்கப்படுவதாக எதிர்க்கட்சியும் தெரிவித்துள்ளது.எனினும் விமர்சனங்களை மறுத்துள்ள அரசு இக்கடன் மறுசீரமைப்பு  யாருக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறி வருகின்றது.மேலும் சர்வதேச கடன் மறுசீரமைப்பில் எதிர்மறைத் தாக்கம் வராது என்றும் வலியுறுத்தியுள்ளது.   எவ்வாறெனினும் கடன் மறுசீரமைப்பு தொழிலாளர்களுக்கு பலத்த அடியாக அமையக்கூடும் என்றே பொதுவாக எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

    நேர்கண்டவர் :-

    துரைசாமி நடராஜா

Leave a Reply