மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை தோள்களில் சுமந்து நனவாக்குவோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

440 Views

“இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின் குறியீடாக அமைந்துவிட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12ஆவது ஆண்டை எட்டியுள்ளது.

நான்காம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் செல்திசை வழியே மாறா உறுதியுடன் பயணித்து முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்படும் வரை எமது உறவுகளின் எண்ணம்-கனவு-இலட்சியம் என யாவுமாக இருந்தது என்னவிலை கொடுத்தேனும் விடுதலையை பெறுவது என்பதாகவே இருந்தது. அவ் உயரிய இலட்சியத்தின்பாற்பட்டு உயிர்தியாகம் செய்த புனிதர்களை வலிசுமந்த இந்நாளில் நினைவு கூருகின்றோம்.

ஆண்டுக்கொருமுறை கூடிக் கலையும் சடங்காகவோ, கண்ணீர் சிந்தி கதறியழும் நாளாகவோ இந்நாளை கடந்து செல்லாது, எங்களுக்காக, எங்கள் வருங்கால சந்ததிக்காக தம்முயிரை உவந்தளித்து தியாக வேள்வி நடத்திய அவர்களது கனவுகளை நனவாக்குவது உலகத் தமிழர் ஒவ்வொருவருடைய வரலாற்றுப் பெருங்கடனாகும்.

21ஆம் நூற்றாண்டின் மனிதகுல வரலாற்றில் பெரும் கறையாகவே மாறிவிட்ட தமிழினப்படுகொலையுடன் நேரடியாக தொடர்புபட்ட ராஜபக்ச தரப்பினரே சிறிலங்காவில் மீண்டும் ஆட்சி-அதிகாரத்தில் அலங்கரித்துக் கொண்டுள்ளனர்.

2009 மே-18 இற்கு முன்னதாக நேரடியாக முன்னெடுத்த தமிழின அழிப்பு செயற்பாட்டை இப்போது மறைமுகமாக பல்வேறு வழிகளில் முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றனர். அரச கட்டமைப்புகளையும், திணைக்களங்களையும், அமைச்சுகளை முன்னணி படை சக்திகளாக வலுப்படுத்தி இச் செயற்பாட்டினை கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கொதிராக ஒன்றுபட்ட பெரும் சக்தியாக தமிழர்கள் போராடாது விடுவோமானால் மிகக்குறுகிய காலத்தில் எமது காலத்திலேயே சிங்கள சிறிலங்காவில் தமிழர்கள் அடிமையினமாக மாறும் அவலத்தை காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும்.

தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட-கிழக்கில், தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையுடன் ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமாக வாழும் நிலையை உருவாக்குவது என்ற இலட்சியத்தில் சமரசம் செய்யும் உரிமை எம்மெவருக்கும் இல்லை என்பதை இடித்துரைத்து கூறுகின்றோம்.

மேற்குறித்த இலட்சியத்தை தம்முயிர் துறந்து வலிதானதாக்கிய இலட்சக்கணக்கான உறவுகளின் உயிர்த்தியாகம் இந்த ஒன்றைத்தான் எமக்கு தினமும் முரசறைகிறது.

அரசியல் காரணங்களுக்காகவோ, வேறெந்த காரணங்களுக்காகவோ, விட்டுக் கொடுக்கவோ, சமரசம் செய்யவோ நம்மில் எவாராகிலும் துணிவோமாயின், தமது உயிர்களையே விலையாக கொடுத்து இலட்சியத்தை உரமேற்றிய புனிதர்களுக்கு செய்யும் பெருந்துரோகமாகும்.

ஆகவே, தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்த துறையில் வளர்ந்தாலும் அந்தந்த தளங்களில் நின்று தமிழினப் படுகொலைக்கான நீதியை பெறுவதற்கும் அதன்வழியே தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும் பாடுபட முன்வருமாறு அன்புரிமையுடன் கோருகின்றோம்.

ஈழத் தமிழர்களுடைய மரபுவழித் தாயகமான வட-கிழக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடங்காத அருவருப்பான ஆசையின் வெளிப்பாடாக பௌத்த விகாரைகளை நிறுவி வலிந்த ஆக்கிரமிப்பினை முன்னெடுத்து வருபவர்கள் தமிழர்களின் நினைவேந்தும் உரிமையைக்கூட தட்டிப்பறிப்பதானது, அவர்களது மாறாத மனநிலையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

இதனை நல்லிணகத்தின்பாற்பட்டு சிந்தை தடுமாறும் எம்மவர்களும், சர்வதேசமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழினத்தின் விடுதலையெனும் ஒப்பற்ற பெரும் இலட்சியத்திற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மூச்சடங்கிய நிலையில் மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை எமது தோள்களில் சுமந்து நனவாக்குவோம் என உலகத் தமிழர்கள் அனைவரும் இந்நாளில் உறுதிகொள்வோம்”.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Leave a Reply