மண்ணில் மறைந்திருந்து கையையும் கண்ணையும் பறித்த கைக்குண்டு-பி.மாணிக்கவாசகம்

“காலைப் பிடிச்சு விடுங்கோ… அப்பா… காலை பிடிச்சு விடுங்கோ…..” என்றான் வைத்தியசாலை கட்டிலில் குறுகிப் படுத்துக் கிடந்த அந்தச் சிறுவன். அருகில் கதிரையொன்றில் அமர்ந்திருந்தவாறே அந்த சிறுவனின் கால்களை அவனது தந்தை பிடித்து அமத்திக் கொண்டிருந்தார்.

“நல்லா அழுத்திப் பிடிச்சு விடுங்கோ…” குரலில் தாளாத வலி கலந்த கெஞ்சல் இழையோடியது. அந்த தந்தையின் பிடியில் அழுத்தம் கூடியது. காலைப் பிடித்து விடுவது மகன் விநோதனுக்கு இதமாக இருக்கும். ஆனால்  அழுத்திப் பிடித்தால் நோ கூடி விடுமே என்ற எண்ணம் குறுக்கிட்டு அவரை அலைக்கழித்தது.

காய வலியின் வேதனையைத் தாங்க முடியாமல் கட்டிலில் உருண்டு பிரண்டு அனுங்கிய வண்ணமே இரவு முழுதும் கழிந்தது. காயமடைந்த நாள் முதலாக இதுதான் நிலைமை.

வவுனியா இரணை இலுப்பைக்குளம் பகுதியில் உள்ள மண்கிண்டி என்ற கிராமத்தில் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். இருவருமே சகோதரிகளின் பிள்ளைகள்.

Yathushan 1 மண்ணில் மறைந்திருந்து கையையும் கண்ணையும் பறித்த கைக்குண்டு-பி.மாணிக்கவாசகம்

அவர்களில் இளையவனாகிய 10 வயதுடைய விநோதனுக்கு கண்களில் சிதறல் துண்டுகள் பாய்ந்தன. வலது கண் பார்வை இழந்து விட்டது. இடது கண்ணும் சிதறல் துண்டுகளினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

கைகள் இரண்டிலும் ஏற்பட்ட படுகாயங்களினால் இடது முன்னங்கையை அகற்ற வேண்டியதாயிற்று. வலது கைவிரல்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கால்களிலும் பலத்த காயங்கள்.

விநோதனின் தாயாரின் சகோதரியினுடைய மகன் வில்வராசா யதுஷனுக்கும் (13 வயது) இந்த சம்பவத்தில் படுகாயம் ஏற்பட்டது. கால்களிலும், தொடைகளின் பின்புறத்திலும் சிதறல் துண்டுகள் பாய்ந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. வயிற்றிலும் சிதறல் துண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றை முழுமையாக அகற்ற முடியவில்லை. வைத்தியசாலையில் தாத்தா சுப்பிரமணியம் அவனைப் பராமரித்தார்.

அம்மம்மா காந்தி விறகு பொறுக்கச் சென்ற போது சிறுவர்கள் இருவரும் அவருடன் சென்றார்கள். வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் உள்ளதொரு மானாவாரி காணியின் ஒரு பகுதியில் அம்மம்மா விறகு பொறுக்கினார். சிறுவர்கள் இருவரும் உழுது கிடந்த காணியில் ஒரு மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது மண்ணில் இலேசாக மறைந்தும், மறையாமலும் கிடந்த ஒரு பொருளை விநோதன் எடுத்துப் பார்த்தான். யதுஷனும் அவனுடன் இணைந்து கொண்டான். அது ஒரு கைக்குண்டு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதுவோர் அபாயகரமான வெடிப்பொருள் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்கவில்லை. இனந்தெரியாத பொருட்களைக் கையில் எடுக்கக் கூடாது. அவற்றைக் கையாளவும் கூடாது –  என்ற கண்ணிவெடி மற்றும் அடையாளம் தெரியாத வெடிப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் இருக்கவில்லை.

அந்த கைக்குண்டின் உள்ளே என்ன இருக்கின்றது, அது என்ன பொருள் என்பதைக் கண்டறிய இருவருமாகக் குந்தியிருந்து அதனை அடித்து உடைக்க முற்பட்டார்கள். விநோதன் அதனை அடித்து உடைத்தான். அது ஒரு கைக்குண்டாச்சே. தன்னுடைய இயல்புக்கமைய அழுத்தம் ஏற்பட்டதும் அது வெடித்துச் சிதறியது. வெடிச்சத்தத்தோடு இரண்டு சிறுவர்களும் படுகாயமடைந்து சரிந்து விழுந்தார்கள்.

வெடிப்புச் சத்தம் கேட்டு அம்மம்மா அலறியடித்துக் கொண்டு ஓடிவர ஊரவர்களும் திரண்டு விட்டார்கள். காயமடைந்த சிறுவர்கள் இருவரும் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

Vinothan 1 மண்ணில் மறைந்திருந்து கையையும் கண்ணையும் பறித்த கைக்குண்டு-பி.மாணிக்கவாசகம்

இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் பற்றிய முன்னறிவித்தல் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட துறை சார்ந்த வைத்திய நிபுணர்களும், வைத்தியர்கள், தாதியரும், ஏனையோரும் தயார் நிலையில் காயமடைந்தவர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

காயமடைந்த சிறுவர்கள் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்ததும் அவர்களுக்கான அவசர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. படுகாயங்களின் இரத்தப் பெருக்கினால் உயிராபத்து ஏற்படாமல் பாதுகாத்து, இருவருக்கும் சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இளையவனாகிய விநோதன் ஒரு கண் பார்வையை இழந்துள்ளதுடன், எதிர்காலத்தில் மற்ற கண்ணிற்கும் என்ன ஆகுமோ என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளான்.

இயல்பாக பிறவியெடுத்த அவன் இடது கையையும் வலது கையில் விரல்களையும் இழந்து; பத்து வயதிலேயே ஓர் அங்கவீனனாகி உள்ளான். அவனது சகோதரன் யதுஷன் கால்களிலும் வயிற்றிலும் ஏற்பட்ட காயங்களில் புகுந்துள்ள குண்டுச் சிதறல்களுடன் வாழ யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனாலும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி மிகவும் நுணுக்கமானது. தாமதம் மிக்கது. இதனால் கண்ணிவெடிகளை குறுகிய காலத்தில் அகற்றி ஆபத்தான பிரதேசங்களை மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இலங்கையில் இராணுவத்தின் ஒரு பிரிவு உட்பட ஏழு நிறுவனங்கள் கண்ணிவெடி அற்றும் பணியில் ஈடுபட்டிருந்தன. யுத்த பிரதேசங்களை 2020 ஆம் ஆண்டு முழுமையாகக் கண்ணிவெடிகள் அற்ற பாதுகாப்பான பகுதிகளாக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது நிறைவேறவில்லை.

இலங்கையின் கண்ணிவெடி பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டிருந்த இடங்களில் ஒன்றாகிய கிழக்கு மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆயினும் வடமாகாணத்தில் அந்தப் பணிகள் இன்னும் தொடர்கின்றன.

நிலத்தில் மழை காலங்களில் ஏற்படுகின்ற மண்ணரிப்பு காரணமாக கண்ணிவெடிகள் இடம் மாறி இருப்பதனால் கண்ணி வெடிகள் அற்ற பிரதேசங்களாகக் கருதப்பட்ட பகுதிகளும் ஆபத்தான பிரதேசங்களாக மாறி இருக்கின்றன.

ஆயுத மோதல்கள் இடம்பெறாததும், இராணுவ முகாம்களோ அல்லது விடுலைப்புலிகளின் நிலைகளோ இல்லாத பிரதேசங்களும் இதனால் ஆபத்தான பிரதேசங்களாகி இருக்கின்றன.

அப்பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட வெடிப்பொருட்களும் எதிர்பாராத வகையில் மக்களுடைய நாளாந்த செயற்பாடுகளின்போது வெடித்துச் சிதறியதன் மூலமே அப்பகுதிகளில் வெடிப்பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இத்தகைய நிலைமைகளில் யுத்தகால எச்சங்களாகிய வெடிப்பொருட்களினால் அவ்வப்போது மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களிலும் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறி மக்ளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

யுத்தகால எச்சங்களாக மண்ணில் மறைந்துள்ள வெடிப்பொருட்கள் 20, 25 வருடங்களுக்கு உயிர்ப்புடையவையாக இருக்கும் என்பது வெடிப்பொருள் நிபுணர்களினதும், அது தொடர்பான நிறுவனங்களினதும் கருத்தாகும்.

அந்த வகையிலேயே இரணைஇலுப்பைக்குளம் மண்கிண்டியில் மண்ணில் மறைந்து கிடந்த கைக்குண்டை அறியா பருவத்து சிறுவர்கள் கையாண்டபோது வெடித்துச் சிதறி அனர்த்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

யுத்தகால எச்சங்களாக வெடிப்பொருட்கள் மறைந்து கிடக்கின்ற பிரதேசங்கள் உயிராபத்து மிக்கவையாகத் திகழ்கின்றன. இது தொடர்பில் நீண்டகால ஆயுத முரண்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ள நாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்பொருள் எச்சங்கள் ஐரோப்பிய நாடுகளில் 65 வருடங்களின் பின்னரும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vinothan 2 1 மண்ணில் மறைந்திருந்து கையையும் கண்ணையும் பறித்த கைக்குண்டு-பி.மாணிக்கவாசகம்

இதனால் ஆயுத முரண்பாடு நிலவிய பிரதேசங்களில் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் வெடிப்பொருட்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

அத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் வடமாகாணத்தில் கண்ணிவெடி அகற்றப்படுகின்ற இடங்களில் இயந்திரத்தின் துணைகொண்டு முதலில் நிலத்தைக் கீறுவதற்கு தொல்பொருள் திணைக்களம் தடை விதித்திருக்கின்றது.

நிலத்தைக் கீறி மண்ணைக் கிளறுவதன் மூலம் தொல்பொருள் அடையாளங்கள் அழிக்கப்படுவதாகவும் அதற்கு அனுமதிக்க முடியாது என்று அந்தத் திணைக்களம் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்குக் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதையும்விட வெடிப்பொருட்களினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள், அவயவ இழப்புக்கள் மற்றும் படுகாயமடைதல் போன்ற பாதிப்புகளுக்கு உரிய சரியான இழப்பீடுகள் வழங்குவதற்கு உரிய சட்டங்களும் இலங்கையில் வகுக்கப்படவில்லை. அதேபோன்று யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நான்கு வருடங்களில் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்தகாலத்து வெடிப்பெருள் வெடிப்புச் சம்பவங்களில் 586 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிரிழப்பும் இடம்பெற்றிருந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகசேவைத் திணைக்களத்தினால் இழப்பீடுகள் வழங்குவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ள போதிலும், அது போதியவையாகக் கருதப்படவில்லை. இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்து 11 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற ஒரு வெடிப்புச் சம்பவத்தில் குமாரகுலசிங்கம் விநோதன் மற்றும் வில்வராசா யதுஷன் ஆகிய இரண்டு சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

உலகம் தெரியாத அப்பாவிகளான அந்த சிறுவர்களுக்கு எத்தகைய இழப்பீட்டு நிவாரணம் கிடைக்கப் போகின்றது? இந்த அனர்த்தத்திற்கு யார் பொறுப்பு கூறப் போகின்றார்கள்?