மட்டு முகத்துவார ஆற்றுவாயினை வெட்டுவது தொடர்பான கலந்துரையாடல்

395 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவகால மழை காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ள நிலைமையில் விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட 3212 ஏக்கர் தற்போது நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் விவசாய மக்கள் முகத்துவார ஆற்றுவாயினை வெட்டி நீரினை வெளியேற்றுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இக் கோரிக்கையினை கருத்திற்கொண்ட அரச அதிபர் அவசர கூட்டம் ஒன்றினை இன்று (09) கூட்டினார். இது தொடர்பாக சம்மந்தபட்ட திணைக்கள அதிகாரிகளுடன் ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பான சாதக பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இவ்வாண்டு பருவகால மழை வீழ்ச்சி இன்று வரையும் போதுமானதாக காணப்படாமையினால் சற்று தாமதமாக ஆற்றுவாய் வெட்டுவதன் ஊடாகவே நிலத்தடி நீரினை பாதுகாத்து கொள்ளமுடியும் என அதிகாரிகளினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய மற்றும் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள்  கருத்து தெரிவிக்கையில், விவசாயிகளின் பயிர்கள் நீரினால் மூழ்கிக்காணப்பட்டு அழிவுறும் நிலைமையில் உள்ளதாகவும் இதில் தங்களுடைய வாழ்வாதாரம் தங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். உடனடியாக ஆற்றுவாயினை வெட்டி நீரின் தாக்கத்தினை குறைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதே போன்று மீனவ சங்கங்களின் பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில் நீர்மட்டம் குறைவாக காணப்படுகின்ற நிலைமையில் ஆற்றுவாயினை வெட்டிவிடுகின்றபோது நன்னீர் மீன்கள் கடலினுள் செல்வதனால் தங்களுடைய தொழில் பாதிப்பு ஏற்படும் எனவும் இதை சற்று நீர்மட்டம் அதிகரிக்கும் போது வெட்டிவிடுவதன் மூலம் தங்களுடைய தொழில் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் எனத்திக்கொள்ளலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் இறுதித்தீர்மானமாக 6 பேர் கொண்ட ஒரு குழுவினை அரசாங்க அதிபரினால் நியமிக்கப்பட்டு அவர்களின் தொழிநுட்ப அறிக்கையினை 3 தினங்களுக்குள் சமர்ப்பிக்கும் சந்தற்ப்பத்தில் சாதக பாதக நிலைமைகளை கருத்திற்கொண்டு தீர்மானங்களை எட்டமுடியுமென அரசாங்க அதிபரினால் குறிப்பிடப்பட்டது.

DSC 0238 மட்டு முகத்துவார ஆற்றுவாயினை வெட்டுவது தொடர்பான கலந்துரையாடல்

இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் கே. ராஜகோபாலசிங்கம், மீன்பிடித்திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் குரூஸ் ருக்சாந், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் சசிநந்தன், கடலோர பாதுகாப்பு சபையின் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி பணிப்பாளர், கமநல சேவைத்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. ஜெகநாத், மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

Leave a Reply