மட்டு- மாநகரசபையின் ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் நியமனம்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கவாசகர் தயாபரன் இன்று தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாநகரசபையின் ஆணையாளராக க.சித்திரவேல் கடமையாற்றியிருந்த நிலையில், அவர் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்ட நிலையில் புதிய ஆணையாளராக நிருவாக சேவையின் முதல் தரத்தினை சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்கவந்தபோது அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து இந்த வரவேற்பினை வழங்கினர். அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள் முன்பாக ஆணையாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

IMG 6994 மட்டு- மாநகரசபையின் ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் நியமனம்

இதன் போது மாநகரசபை முதல்வர்,பிரதி முதல்வர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,பொதுமக்கள் ஆணையாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள தயாபரன் அரச சேவையில் ஆசிரியராக இணைந்து 1990ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உதவி காணி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர், மத்திய வங்கியின் கிழக்கு மாகாண வறுமை ஒழிப்பு நுண்கடன் திட்டத்தின் கிழக்கு மாகாண முகாமையாளராகவும் அரச துறையில் பல்வேறுபட்ட உயர் பதவிகளை வகித்து வந்த இவர் குச்சவெளி, வெருகல், மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய நிலையில் கொழும்பில் உள்ள பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் கடமையாற்றி வந்த இவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண ஆளுனரால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு குருக்கள் மடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் குருக்கள் மடம் கலைமகள் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்று அதன் பின்னர் உயர்கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தொடர்ந்த இவர் தனது பட்டப்படிப்பினை பேராதேனிய, கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.