மட்டுவில் சம்பவத்தின்போது இராணுவம் துப்பாக்கிச் சூடு – ஐந்து பேர் பொலிஸாரால் கைது

மட்டுவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக மக்களுடன் பயணித்த ஐந்து பஸ்களில் ஒரு பஸ் வீதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மட்டுவில் சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (வயது-70) என்பவர் மீது மோதியதால் அவர் உயிரிழந்தார்.

சம்பவத்தை அடுத்து அங்கு திரண்ட சிலர் பஸ்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர்.

அதனை அடுத்து பஸ்ஸில் பயணித்தவர்களால் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதன் பின்னரேயே நிலைமை கட்டுக்குள் வந்ததாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்ட சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதால் மேலும் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply