மட்டக்களப்பு, கல்குடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஓட்டமாவடி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இங்கு ஆற்று நீரோடு முதலைகள் நடமாட்டமும் இருப்பதால், மக்களை அவதானமாக இருக்குமாறும், இந்த பகுதிகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறும், தேவையற்ற நடமாட்டத்தைக் குறைக்குமாறும் பிரதேசசபை உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாதுறு ஒயா ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின்
ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.

குறிப்பாக கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரம்படித் தீவு ,
முறுக்கன் தீவு, சாராவெளி, அம்புஸ்குடா போன்ற  கிராமங்களில் தற்போது வெள்ள நீர் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகு மூலம் வெளியேற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவத்தமுனை பகுதியிலுள்ள புதுவெளிப்பாலம், எப்பொழுதும் முதலைகள் நிறைந்ததாகவே காணப்படும். குறித்த இடம் தற்போது நீரில் மூழ்கியுள்ளதால், இந்த இடத்தைப் பார்வையிட சிறுவர்களும் இளைஞர்களும் அதிகம் வருகை தந்து நீராடி வருகின்றனர்.

இதேவேளை ஓட்டமாவடி பால ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை முதலை இழுத்துக் கொண்டு சென்ற போது, அங்கு நின்றவர்கள் அவரை போராடி மீட்டனர்.

 

 

Leave a Reply