மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை அபகரிப்பு – சிங்களப்பிரதிநிதிகளை உருவாக்கும் சதி.! – பா.அரியநேத்திரன்

கிழக்கு மாகாணத்தில் பால்தரும் எருமை, பசுமாடுகள் ஏறக்குறைய  101,726 காணப் படுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறக் குறைய நான்கு இலட்சம் எருமை, பசு மாடுகள் உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பொலனறுவை மாவட்டங்களின் எல்லை பகுதியாக மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரதேசங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகள் வனப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளன. பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவு கெவிளியாமடு காத்தமல்லியார்சேனை வெட்டிப்போட்டசேனை விக்சிச்தோட்டம், மணல் ஏற்றம், ஆகியபகுதிகளிலும்  மேய்ச்சல் தரைகள் உள்ளன. ஊர்காவல்படையினர் உதவியு டன் வெளிமாவட்ட பொலனறுவை, அம்பாறை சிங்களவர்கள் பயிர்செய்கை என்ற போர்வையில் அத்துமீறி குடியேற்றப்படுகிறார்கள்.பண்ணையா ளர்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுப்புக்குரிய முயற்சிகளும், கவனயீர்ப்பு போராட் டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடை பெற்றுக் கொண்டே இருக்க அத்துமீறல்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.

தமது கால் நடைகளைத் தேடிச் சென்ற பண்ணையாளர்கள் தாக்கப்படுவார்கள்; கைது செய்யப்படுவார்கள்; பண்ணை நடவடிக்கை களுக்காக அமைத்திருக்கும் குடிசைகள் நாசம் செய்யப்படும்; கால்நடைகள் கொல்லப்படும்; கவரப்பட்டு கப்பம் கோரப்படும். இவ்வாறு பல இன்னல்களை அனுபவித்தபடியே, தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய கட் டாயத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பண் ணையாளர்கள் இருக்கிறார்கள்.

உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி சிங்களவர்களை குடியேற்றுவதற்கான நோக்கம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே தமிழர்கள் கூடுதலாக வாழும் மாவட்டமாகும். 2012, உத்தியோக பூர்வ கணக்கெடுப்பின் புள்ளி விபரத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் 72.61%,இஷ்லாமியர் 25.49%,சிங்களவர்1.17%, பரங்கியர் 0.53% ஏனையோர் 0.21% வீதமும் வாழ்கிறார்கள். 2012,க்கு பின்னர் இலங்கையில் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

சிங்களவர்களை 1.17 % வீதத்தில் இருந்து அதிகரிக்கவே சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது. அதன்மூலம் தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கவும், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கவும் மேற்கொள்ளும் நீண்ட கால சதித்திட்டத்தின் வெளிப்பாடகவே இதனை பார்க்க முடிகிறது.

ஈழவிடுதலை ஆயுத போர்க்காலத்தில் இவ்வாறான அத்துமீறல்கள் காணப்படவில்லை அப்போது விடுதலைப்புலிகளின் நடமாட்டம் காரணமாக அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் இப்பகுதிகளில் இருந்ததில்லை, போர் முடிந்த கையோடு 2009, மே,18, க்கு பின்னரே அத்துமீறிக் குடியேற்றம் தொடர்கிறது. இவர்களை வெளியேற்றுவதற்கு கிழக்கு முதலமைச்சர் ஆளுநர் களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப் போது பயனளிக்கவில்லை. 2015இல் ஆட்சி மாற்றத்தையடுத்து 2016இல் அத்துமீறல் செய்த 99 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்றக் கட்டளையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் வெளி யேற்றப்பட்டார்கள். இந்த நடவடிக்கைகள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்து ழைப்புடன் நடைபெற்றன.

கிழக்கு மாகாண சபை 2017 செப் டெம்பரில் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்துமீறுவோரின் நடவடிக்கைகள் மீண்டும் நிகழ ஆரம்பித்தன. இப்போது வரை தடுத்து நிறுத்த முடியவில்லை அது பரவிக்கொண்டே இருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இல்லாத நிலையில், பல தடவைகளில் நிரந்தரமான மேய்ச்சல் தரைக்காக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது திட்டமிட்டு அரசால் நிறைவேறாது போயி ருக்கிறது. மகாவலி அதிகாரசபையும் அதனை தடுக்கிறது.

‘நாமெல்லோரும் இலங்கையர்கள்’ என்ற அடிப்படையிலும், இலங்கையர் எல்லோர் தொடர்பிலும் சட்டங்கள் பாராபட்சமின்றிப் பிரயோகிக்கப்பட வேண்டும்.  ஆனால் பார பட்சமாகவே கடந்த ஆட்சிகளில் எல்லாம் இது நடந்தது. தற்போது தேசிய மக்கள் சக்தி புதிய ஜனாதிபதியாக அநுர பதவி ஏற்று 159, பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியில் உள்ளபோதும் “கிளின் ஶ்ரீலங்கா” என்ற கோஷத்தால் மேய்ச்சல் தரைக்கான பிரச்சினை தீர்க்கப் படவில்லை. மாறாக மேய்ச்சல் தரைகளில் இருந்து மாடுகளை கிளின் செய்வதையே காணமுடிகிறது. பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும் ஜனாதி பதி அநுர கால்நடைகள் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சினையாக உள்ள மேய்ச்சல் தரை தீர்க்கப்படாமல் தொடருமானால் பால் உற் பத்தியிலும் வீழ்ச்சி ஏற்படும்.

கடந்த 2024, ம் ஆண்டு மட்டும் 1,750 க்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்பட்டும், பிடிக்கப் பட்டும், சித்திரவதைகளுக்கு உள்ளாகியும் உள்ளன.

1974ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து, மட்டக் களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வரப்படும் பிரதேசமே மயிலத்தமடு, மாதவணை, கெவிளியாமடு பிரதேசங்களாகும். மாதவணை, புதிய மாதவணை, மயிலத்தமடு, மாந்திரியாற்றுப் பகுதி என்னும் இடங்களிலுள்ள 3,000 ஏக்கர் மேய்ச்சல் தரைக் காணிகளை பொலநறுவை, அம்பாறை மாவட் டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 2014ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் விவசாயச் செய்கைக்கு வழங்கு வதற்கு வனவள திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்ததாக அறிய முடிகிறது.

அது பல்வேறு முயற்சிகளால் நிறுத்தப் பட்டாலும், கிழக்கு ஆளுநரால் 2024, கடந்த வருடத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த திட்ட மிடப்பட்டது. மேய்ச்சல் தரை நிலங்களை விவசாயத்துக்கு வழங்கும் திட்டத்தைத் தடுக்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகளால் மேற்கொள் ளப்பட்ட பல முயற்சிகளின் பின்னர், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் தடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்த பொலிசாரும் அசமந்த போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணிலின் காலத்தில் பண் ணையாளர்கள் தொடர் போராட்டங்களை சித் தாண்டி சந்தியில் முன்எடுத்த நிலையில் ஜனாதிபதி ரணில் செங்கலடி  மத்திய கல்லூரிக்கு வருகை தந்து 2023 செப்டம்பர் 08,கொம்மாதுறையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஏறாவூர் பொலிசார் பண்ணையாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், சீ.யோகேஷ்வரன், ஊடகவியலாளர்களான கிருஷ்ண பிள்ளை, சஜீதரன், மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளை சேர்ந்த 32, பேருக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளனர், இதுவரை 15, மாதங்களாக கடந்த 2023, நவம்பர், 17, தொடக்கம் 2025,ஜனவரி,22, வரை 8, தவணை வழக்கு இடம்பெற்றும் முடிவுகள் இல்லை 9, வது தவணை எதிர்வரும் 2025,ஏப்ரல்,22,ல் மீண்டும் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையா ளர்களுக்கு மாடுகள் மேயும் மேய்ச்சல் தரையும் இதுவரை இல்லை, மேய்ச்சல் தரை மீட்புக்காக கவன ஈர்ப்பு நடத்திய 32, பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் முடிவுறவில்லை தொடர்ந்து செல்லும் அவலமாகவே உள்ளது.