மட்டக்களப்பில் அத்துமீறி காணி அபகரிப்பு- கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றம்

562 Views

மட்டக்களப்பு மயிலந்தனமடு-மாதவனை பகுதியில் கால் நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை காணிகளை வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களும், புத்தபிக்குகள் சிலரும் அத்துமீறி அபகரிப்பதை தடுப்பதற்கான தீர்மானங்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திட்டமிட்ட காணி அபகரிப்பு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானமிக்க கலந்துரையாடலானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்.செல்வராசா தலைமையில்  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், த.கனகசபை, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, பிரசன்னா இந்திரகுமார், மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் பொ.செல்லத்துரை, ஓய்வுநிலை அரசாங்க அதிபர் மா உதயகுமார், ஓய்வுநிலை மாவட்ட காணி ஆணையாளர், க.குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் காணி அபகரிப்பு தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

இதன்படி காணி அபகரிப்பு தொடர்பில் ஐந்து கட்டங்களாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

முதலாவதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மற்றும் காணி தொடர்பாக விடங்களை கையாளும் மேலதிக அரச அதிபர் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய சந்திப்பு ஒன்றை ஏற்படுத்துதல்.

இரண்டாவதாக கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தி உடனடியாக மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி பயிர்ச்செய்கை செய்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுத்தல்.

மூன்றாவதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளல்.

நான்காவதாக பண்ணையாளர்கள் மற்றும் காலநடை வளர்ப்பாளர்களுடன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துதல்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்வதுடன் இந்த நான்கு விடயங்களுக்கும் சாதகமான பதில்கள் கிடைக்காதுவிடின், ஐந்தாவதாக உச்ச நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் அதற்கான சகல ஆவனங்களையும் உடன் தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய பொது விடயங்கள் தொடர்பாக அடுத்த கூட்டங்களில் ஆராய்வது எனவும் இக் கூட்டமானது நிறைவுறுத்தப்பட்டது.

Leave a Reply