மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- சில இடங்கள் முடக்கம்

526 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவு பட்டாபுரம் பகுதியில்  கோவிட் 19 தொற்று ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் சுகாதார திணைக்களம் மற்றும் பிரதேசசபை,பொலிஸார் மற்றும் படையினர் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

26-10-2020ம் திகதி வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் இனங்காணப்பட்டு வெல்லாவெளி பொதுச் சுகாதார வைத்திய அலுவலகத்தில் வைத்து 30பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பட்டாபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் 26வயதுடைய நபர் ஒருவர் இனங்காணப்பட்டார்.

இவர் கொழும்பு பம்பலப்பட்டியில் கடமையாற்றிய நிலையில், கடந்த 22ஆம் திகதி இலங்கை போக்குவரத்துசபை பஸ்ஸில் மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளார். இவர் கொரோனா தொற்றுக் குள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து பெரிய போரதீவு பட்டாபுரத்தில் 5 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் மற்றும் வெல்லாவெளி பொதுச்சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் உள்ளனர்.

தற்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள வெல்லாவெளி இராணுவ சோதனைச்சாவடி வீதி மூடப்பட்டுள்ளதுடன் பொறுகாம வீதி பெரிய போரதீவு சந்தி (பட்டிருப்பு) மூடப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து பொதுமக்களின் வீதீப் போக்குவரத்தை முற்றாக தடை செய்துள்ளனர்.குறிப்பாக பழுகாமம் பெரியபோரதீவு பட்டாபுரம் முனைத்தீவு பொறுகாமம் கோவில் போரதீவு ஆகிய கிராமங்கள் ஆகியனவற்றில் பொதுமக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனியின் ஆலோசனையின் கீழ் குடி நீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளதுடன் வீடுகளுக்கு தொற்று நீக்கும் செயற்பாடுகள் பிரதேசசபை ஊழீயர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிசாரும் இராணுவத்தினரும் பொதுச்சுகாதார பரிசோதக உத்தியோகஸ்தர்களும் கொரோனா நோய் இனங்கானப்பட்டவருடன் தொடர்புடைய நபர்களை தேடும் பனியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave a Reply