மடு மாதா அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா  எதிர்வரும் 2 ஆம் திகதி  இடம் பெற உள்ள நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (12) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், “மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா  எதிர்வரும் 2 ஆம் திகதி (02-07-2021) இடம் பெற உள்ளது. இவ்வருடம் எமக்கு சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஆடி மாத திருவிழாவை நடாத்த வேண்டியுள்ளது.
எனவே இம் முறை யாத்திரிகர்கள் , பக்தர்கள் மருதமடு அன்னையின் ஆடி மாதம் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள திருவிழாவிற்கு மன்னார் மறைமாவட்டத்தை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என்பதை அறியத்தருகின்றோம்” என்றார்.