மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட்

குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் குழப்பம் என்பனவும், அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதும், மக்களுக்கான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.

இலங்கையில் ஆய்வுப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.“இலங்கையில் மேலும் ஜனநாயகத்தை முன்னேற்ற வேண்டுமெனில், அது மக்களது ஐக்கியத்தின் ஊடாகவே சாத்தியப்படும் . எனினும், இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்ற சமூகங்களில் காணப்படும் பிரிவினைகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மக்களின் அபிலாசைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது என்பது மிக முக்கியமானது. போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது.

அமைதியாக ஒன்றுகூடல், சங்கங்களை அமைக்கும் சுதந்திரம் என்பன இலங்கை அரசியல் அமைப்பில் பேணிப் பாதுகாக்கப்படுகின்ற போதிலும், தண்டனைச் சட்டக் கோவை, பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன இந்த உரிமைகளை இல்லாதொழிக்கும் வகையில் காணப்படுகிறது.

காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் இச்சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, தற்போது நீடிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமும் மக்களுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையிலேயே காணப்படுகிறது.

அத்தோடு, யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் கூட பாதுகாப்புத் துறையில் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாதமையானது, சிவில் சமூக இயக்கத்தில் தடையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பரவலாகக் காணப்படும் பகைமை உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உரைகளின் வளர்ச்சி குறித்தும் விசேட நிபுணர் எடுத்துரைத்தார்.

அதேநேரம், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை ஆராய்ந்துள்ள இவர், இது தொடர்பான தனது விசேட அறிக்கையினையும், பரிந்துரைகளையும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் சமர்ப்பிப்பார் .