போட்ஸ்வானாவில் 2 மாதங்களில் 350 யானைகள் மர்ம மரணம்

தெற்கு ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350இற்கு மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

இது தொடர்பாக பிரிட்டனில் இயங்கும் நஷனல் பார்க் ரெஸ்யும் விலங்குகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில்,

கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல் விமானம் மூலம் உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் பறந்து கண்காணித்த போது, 3 மணி நேரத்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர்.  பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் 350 யானைகளின் உடல்களை பார்த்துள்ளனர். இந்த விடயம் குறித்து அந்நாட்டிற்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர். ஆனால் அந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறந்த யானைகளின் உடல்களில் தந்தங்கள் காணப்படவில்லை. எனவே யானைகளின் உயிரிழப்பிற்கு வேட்டையாடப்படுவது தான் காரணம் என போட்ஸ்வான அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், வேட்டையாடப்படும் போது மற்ற உயிரினங்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்துள்ளன.  கடந்த ஆண்டு அந்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. இப்போதும் அதுபோன்ற ஏதாவது நோய்த் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என விலங்குகள் தொண்டு நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவில் நடக்கின்றன. இதனால் யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதாவது தாக்கியிருக்கக்கூடும் எனவும், இது மனிதர்களுக்கும் பரவும் எனவும் குறிப்பாக நீர், மண் வழியாக பரவ வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

இது மனிதர்களு்கான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றும், எனவே இது குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply