பொதுபலசேனா அமைப்பு கலைக்கப்படவுள்ளது  – ஞானசார தேரரின் அதிரடி அறிவிப்பு

இந்த நாட்டிற்கு தற்போது ஒரு நல்ல தலைமை கிடைத்துள்ளதால், பொதுபலசேனா அமைப்பு கலைக்கப்படவுள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய பிரதேசத்தில் இன்று(19) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே தேரர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசுகையில்,

இந்த நாட்டில் சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல்  அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்தது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இந்தக் கருத்தை பொய்யாக்கியுள்ளன.

எப்படியாயினும், இந்த நாட்டிற்கு இப்போது ஓர் சிறந்த தலைமைத்துவம் கிடைக்கப்பெற்றுள்ளதால், பொதுத் தேர்தலின் பின்னர் நல்லதோர் அமைச்சரவையுடன், நல்ல பயணமொன்றை மேற்கொள்ள முடியும் என்றும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப இப்போது நல்ல ஒரு தலைவர் கிடைத்திருக்கின்றார் இதனால் இனிமேல் பொதுபல சேனா என்ற ஓர் அமைப்பு தேவையில்லை என்றும் கூறினார்.

ஞானசார தேரர் என்பவர் ஓர் இனவாத பௌத்த துறவி ஆவார். எப்போதுமே தமிழர்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருபவர். முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், அங்கு அத்துமீறி தங்கியிருந்த பௌத்த பிக்குவின் உடலை எரிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவரும் இவரே ஆவார்.