பூநகரி பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் மரணம்

153 Views

பூநகரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் விக்கினேஸ்வரன் ஜெயக்காந்தன், யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் போராளியான ஜெயக்காந்தன் போரின்போது முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார். இறுதிப் போரின் பின்னர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி தனது சொந்த முயற்சியால் கற்று அரச தொழிலும் இணைந்துகொண்டார்.

மனிதநேய சிந்தனையாளரான இவர், சமூகச் செயற்பாட்டாளராகவும் தீவிரமாகச் செயற்பட்டு வந்தார். இவர் பல்வேறான இடர் காலப்பகுதியிலும் பொதுமக்களுக்குத் தன்னாலான உதவிகளைப் புரிந்ததோடு தனது சிறப்பான சேவையையும் இதுவரையில் ஆற்றினார்.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உயிரிழை என்ற அமைப்பின் முன்னாள் தலைவராகவும் அவர் செயற்பட்டு வந்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பூநகரி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராகவும் அவர் செயலாற்றி வந் தார்.

இவருக்கு முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான சத்திர சிகிச்சை யாழ்.போதனா வைத்தியசாலையில் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது. இருந்தபோதிலும் உடல் நிலைப் பாதிப்புக்குள்ளான இவர் நேற்றுக் காலை உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு தமிழ் அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் தமது இரங்கல்கைளத் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றன.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஜெயக்காந்தனுக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

Leave a Reply