புலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா? மனோ கேள்வி

913 Views

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால்  முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது.

அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைகிறது.

அவ்வாறான சலுகைகளில் ஒன்றுதான் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நினைவு கூரல் அனுமதிகள். ஆனால் தற்போது  அடக்குமுறைக்கு துணைபோகும்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினை வாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீள்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தனிப்பட்ட நபர்கள், மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு பெற்று நினைவுகூரல் நடவடிக்கைக்கு தடை விதித்தல் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக தொடர்ந்தும் மீறி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம்  ‘இலக்கு மின் இதழ்’ கண்ட நேர்காணலை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

“இலங்கையில் தமிழினம் ஒரு தேசிய இனம் என்பது அடிப்படை உண்மை. அது தன் உரிமைகளுக்காக குரல் எழுப்பவும், போராடவும் உரிமை கொண்டது. அடக்குமுறைக்கு எதிராக போராடும் உரிமை உலகமயமானது. சர்வமயமானது. தனி நபர்களும் சரி சமூகங்களும் சரி அந்த உரிமையைக் கொண்டுள்ளார்கள். இது கேள்விக்கு இடமில்லாத உண்மை.

இலங்கைத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில், மரணித்தோரை நினவுகூரல் – அவர்கள் பொது மக்களாக இருக்கலாம், போராளிகளாக இருக்கலாம் – மேலே சொன்ன உலகளாவிய உரிமை. ஆனால் தமிழரின் நினைவுகூரலை இன்றைய அரசு தடுக்கிறது. கடந்த நல்லாட்சியில் இந்த விவகாரம் மூர்க்கமாக தடுக்கப்படாமல் படிப்படியாக நினைவுகூரல் நடத்தப்பட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஆனால் உண்மை என்னவென்றால், அப்போதும்கூட இது ஒரு சலுகையாகவே வழங்கப்பட்டது. உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே புது அரசு வந்ததும் சலுகை திரும்பப் பிடுங்கப்பட்டு விட்டது.

தமிழரின் போராளிகள், சிங்கள தென்னிலங்கையை பொறுத்தவரையில், அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய ‘பயங்கரவாதிகள்’. அது மட்டுமல்ல போரில் மரணித்த பொது மக்களும் கூட சிங்கள தென்னிலங்கையை பொறுத்தவரையில் அரசுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ‘பயங்கரவாதிகள்’. இதுதான் தெற்கின் கசப்பான யதார்த்தம்.

இங்கே விசித்திரம் என்னெவென்றால், இதேமாதிரி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபி தெற்கில் பயங்கரவாதிகளாக கருதப்படுவதில்லை. ஜேவிபியினர் மரணித்த தமது சிங்களப் போராளிகளை பகிரங்கமாக ஆண்டு தோறும் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நினைவு கூருகின்றார்கள். கடைசியாக கடந்த 2019ஆம் வருடம் இதே நவம்பர் 13ஆம் திகதி, தென் மாகாணத்தின் காலி நகரில் சவோதா மண்டபத்தில் ஜேவிபியின் தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க, செயலாளர் நண்பர் டில்வின் சில்வா ஆகியோர் உள்ளிட்ட எல்லா தலைவர்களும், ஆதரவாளர்களும் கூடி ரோஹன விஜேவீர உட்பட கொல்லப்பட்ட தம் எல்லா போராளிகளையும் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தார்கள்.

இந்த வருடமும்  இதோ இந்த நவம்பரில் நினைவு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஜேவிபி மட்டுமல்ல  அதிலிருந்து பிரிந்த முன்னிலை சோஷலிச கட்சியும் நினைவு நிகழ்ச்சிகள் நடத்தும் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் விமல் வீரவன்ச கட்சியும் நடத்தியதாக நினைக்கிறேன்.

ஆனால் தென் மாகாணத்தில் நடத்தப்படும் சிங்கள ‘போராளி’ நினைவுகூரல்கள் தேசிய மட்டத்தில் சர்ச்சையைக் கிளப்புவதில்லை. ஆனால் வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களில் நடத்தப்படும் தமிழ் ‘போராளி’ நினைவு கூரல்கள், ‘பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுகிறார்கள்’ என்ற தலைப்பில் தேசிய ரீதியாக பெரும் சர்ச்சைகளைக் கிளப்புகின்றன.

வடக்கின் மிருசுவில் கிராமத்தில் பச்சிளம் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களை வெட்டி, கொத்தி படுகொலை செய்து இலங்கை நீதிமன்றத்தாலேயே விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை பெற்று சிறையில் இருந்த இராணுவச் சிப்பாய் இரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்று தன் சொந்த வீட்டுக்கு போய், தான் கழுத்தை வெட்டி கொலை செய்த குழந்தையின் வயதை ஒட்டிய தனது சொந்த மகளை மடியில் வைத்து கொஞ்சும் காட்சியை ‘தேசிய வீரர் வீடு வந்து விட்டார்’ என தலைப்பிட்டு ஊடகங்களில் பிரசுரித்து பார்த்து மகிழும் நாடு இதுவாகும். இதைவிட எதை சொல்ல?

எனது தொகுதி கொழும்பில் ரோயல் பார்க் என்ற மேல்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பில் இலங்கையின் மிகப்பிரபல கோடீஸ்வர சட்டத்தரணியின் உதவாக்கரை மகன் தன் காதலியை அடித்தே கொலை செய்து, தண்டனை பெற்று, சிறையில் இருந்தார். அவரும் முன்னாள் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டார். இப்போது கொலைக் கைதியான பிரபல ஊடக நிறுவன அதிபரின் சகோதரர் விடுவிக்கப்படப் போகிறார்.  தடுப்பில் இருந்த இன்னமும் பல சிப்பாய் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இன்னமும் பலர் வெளியே விடப்படப் போகிறார்கள்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இந்த கிரிமினல் படுகொலையாளிகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரத்தின் ஒரு சிறு விகிதம் கூட மரணித்த அல்லது உயிருடன் இருக்கும் தமிழ் போராளிகளுக்கு, போரில் மறைந்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு, சிங்கள மக்கள் மத்தியில் வழங்கப்படுவதில்லை. இதுதான் தென்னிலங்கை யதார்த்தம்.

தென்னிலங்கையின் சிங்கள மனித உரிமை சமூகத்தில் ஒரு கையளவு நேர்மையாளர்களை தவிர வேறு எவரும் அப்பாவி மக்களை கொலை செய்த இராணுவச்  சிப்பாய் ரத்நாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்படும் போது எதிர்க்குரல் எழுப்பவில்லை. ஆகவே இவர்களைப் பற்றி நமது தமிழ் அரசியல்வாதிகள் தம்மை பெரிய மனித உரிமைப் போராளிகளாக உருவகித்துக்கொண்டு, அலட்டிக்கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

இந்த கிரிமினல் குற்றவாளிகள் வேறு. நமது போராளிகள் வேறு என எனக்கு எவரும் வகுப்பு எடுக்கவும் தேவையில்லை. எனக்கு இது மிக மிக நன்றாக தெரியும். ஆனால் சிங்களத்துக்கு தெரியவில்லையே? அதுதான் பிரச்சினை.

உண்மையில் நாம் எல்லோரும் கூடக்குறைய தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் ஒரே குரலில்தான் பேசுகின்றோம். ஆனால் நமது பிரச்சினைகளை பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் – ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ – பேச வேண்டும். சிங்கள சமூகம் பேச வேண்டும். அவர்களை நாம் பேச வைக்க வேண்டும். புரிந்துகொள்ள வைக்க வேண்டும். இதுதான் இன்றைய தேவை. இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

இல்லாவிட்டால், எமது பிரச்சனைகளை நாம் பேசிக்கொண்டே இருக்கலாம். தீர்வு வருவது போல தோன்றும். ஆனால் கடந்த அரசில் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்த புதிய அரசியலமைப்பு போன்று அது ஒருபோதும் வராது. வந்தாலும் அரைகுறையாத்தான் இருக்கும். இந்நாட்டில் அந்தளவு பேரினவாதம் ஆழப்பதிந்து உள்ளது. இதுதான் இன்றைய யதார்த்தம்.

இது ஏன்? இதை எப்படி எதிர்கொள்வது என இனியாவது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். “ஜேவிபி போராளிகளை நினைவுகூர முடிகிறதே. தமிழ் போராளிகளை நினைவுகூர முடியவில்லையே” என நான் சமீபத்தில் சிங்களத்தில் பேசி இருந்த காணொளி ஒன்றை பார்த்து விட்டு எனது சிங்கள முற்போக்கு நண்பர் எனக்கு ஒரு விடயம் சொன்னார். அவர் சொன்ன விடயம் எனக்கும் தெரியும். என் காணொளியிலும் நான் சொன்னதுதான். ஆனாலும் அவர் சொன்னதை அப்படியே இங்கே கூறுகிறேன்.

“மனோ ஜேவிபியின் மீது ஒரு காலத்தில் தடை இருந்தது. இப்போது இல்லை. ஆகவே நினைவு கூருகிறார்கள். புலிகள் மீது இன்னமும் தடை இருக்கிறது. ஆகவே அவர்களை நினவுகூர முடியாதுள்ளது. அதைப் பயன்படுத்தி போராளிகளை மட்டுமல்ல, சாதாரண பொது மக்களை நினைவுகூருவதைக் கூட இந்த இனவாத ஒடுக்குமுறை அரசு தடுக்கிறது. உங்கள் அரசியல் சட்டத்தரணிகளை கொண்டு இலங்கை நீதிமன்றத்தில் புலிகளின் மீதான தடையை நீக்கும்படி கோரி வழக்காடச் சொல்லுங்கள்.

உடனடியாக தடை நீங்கா விட்டாலும்கூட படிப்படியாக தீர்வு வரும். இதுபற்றி சிங்கள சமூகத்தில் பேசப்படும். இதுதான் இன்று தேவை. உலகின் பல்வேறு நாடுகளில் இதை செய்கிறீர்கள்தானே? புலிகளின் பெயரை பயன்படுத்தி தானே தமிழர்களின் பிரபல ஜனநாயக உரிமைகளை இன்னமும் இந்த அரசு மறுக்கிறது? அதை வைத்தே சட்டப்படி தீர்வையும் தேடுங்கள்” என்று என் சிங்கள நண்பர் சொன்னார். இதையே நானும் இங்கே சொல்கிறேன்.

மற்றபடி உங்கள் கேள்வியில் ஒலிக்கும் ஒரு விடயம் தமிழ்நாடு..! அங்கே தமிழ்நாட்டில் இப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை ஊடக கிளர்ச்சிப் பிரச்சினையே தவிர உணர்வுரீதியான அரசியல் பிரச்சினை அல்ல. எப்படியும் நண்பர் சீமான் முதலியோர் ஒரு நிகழ்வை சமாந்தரமாக நடத்துவார்கள். அவ்வளவுதான். இப்போது பைடனின் உபஜனாதிபதி கமலா வந்து தீர்வு தருவார் எனவும் நம்பாதீர்கள். தமிழகம் உட்பட உலகத்தில் நமது சிக்கல்கள் இன்று முன்னுரிமை பட்டியலில் இல்லை. நாம் இங்கே நமது நாட்டில்தான் செயற்பட வேண்டும்.”

Leave a Reply