புதுரத்தம் பாய்ச்சுதல்-துரைசாமி நடராஜா

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இந்த வருடத்துடன் இருநூறு வருடங்கள் பூர்த்தியாகின்றது.இந்நிலையில் இம்மக்கள் இருநூறு ஆண்டுகளாக இலங்கைத் திருநாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் நோக்கில் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து விசேட தொடர் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.

இதற்கு அமைச்சரவை ஏற்கனவே  அங்கீகாரத்தையும் வழங்கி இருந்தது..இந்திய வம்சாவளி மக்கள் இங்கு வருகைதந்து இருநூறு வருடங்களாகியுள்ளபோதும் இவர்களின் வரலாற்றுக்கும் வாழ்க்கை அபிவிருத்திக்கும் இடையில் பாரிய விரிசல் நிலையே காணப்படுகின்றது.

இந்த விரிசலை இல்லாதொழித்து ஏனைய இனங்களுக்கு நிகராக இம்மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்தி தேசிய நீரோட்டக் கனவை மெய்ப்பிக்க அரசாங்கம் ஆவண செய்தல் வேண்டும்.

அத்தோடு பல்வேறு தரப்பினரும் இந்திய வம்சாவளி மக்கள் இங்கு வருகை தந்த  இருநூறு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்கள் பலவற்றையும் ஏற்பாடு செய்து வருகின்ற நிலையில் கொண்டாட்டத்தோடு மட்டும் நின்று விடாது ஒன்றுபட்ட அழுத்தத்தின் ஊடாக  இம்மக்களுக்கு உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

 தமிழக வரலாற்றில் என்றுமில்லாதவாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கையில் மட்டுமன்றி தொலைதூரத்திலுள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் அழைத்து சென்று குடியமர்த்தப்பட்டனர்.

நேவிஸ், அன்ரீல்ஸ், பிஜி, டேமாறா, மொரிசியஸ், வியட்நாம், தென்னாபிரிக்கா, ஜமெய்க்கா, சுமாத்திரா, அந்தமான் உள்ளிட்ட பல இடங்களும் இதில் உள்ளடங்கும்.தமிழகத்தில் நிலவிய வறுமை, பஞ்சம் போன்ற பல காரணிகளும் இவர்களின் இடம்பெயர்வில் செல்வாக்கு செலுத்தின.இவ்வாறாக தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் தாம் குடியேற்றப் பட்ட இடங்களில் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் உள்ளாகினர்.

அரசியல், பொருளாதார,சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய, பிரான்ஸிய ஆட்சியாளர்களாலும் , பின்னர் சுதேசிய ஆட்சியாளர்களாலும் , அந்தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும், தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தமிழர்களாலும், ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்கள் போன்றோராலும் கடுமையான சுரண்டல்களுக்கு உள்ளானதாக கலாநிதி க.அருணாசலம் சுட்டிக்காட்டுகின்றார்.

மேற்கூறப்பட்ட நாடுகள் மற்றும் தீவுகளில் வாழ்வோரில் பெரும்பாலான தமிழ்த் தொழிலாளர்கள் இன்று தமிழ் பேச, எழுத, வாசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை  இலங்கையில் குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலாளர்களும் பல்வேறு துன்ப துயரங்களையும் அனுபவிக்க வேண்டி நேர்ந்தது. இலங்கையில் இருந்த ஏனைய சமூகங்களால் இவர்கள் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் இவர்களை புறந்தள்ளும் ஒரு நிலையும் காணப்பட்டது.தோட்டக்காட்டான், கள்ளத்தோணி, இந்தியக்காரர் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு இவர்கள் இழிவுபடுத்தப்பட்ட வரலாறு மிகவும் கசப்பானதாகும்.அரசாங்கம் இவர்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும் பின்னடித்தே வந்தது.

” இலங்கையர்” என்ற பொது வரையறைக்குள் இம்மக்கள் உள்ளீர்க்கப்படாத நிலையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே இவர்கள் வழிநடத்தப்பட்டனர்.

டொனமூர் வாக்குரிமையை வழங்கிய போதுகூட இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என்பதிலே இனவாத ஆட்சியாளர்கள் குறியாக இருந்தனர்.பெரும்பான்மை அரசியல்வாதிகள் கூட இம்மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து குரல் கொடுத்திருந்தமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி நாடு சுதந்திரம் பெற்ற கையோடு இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தியது.இதன் தழும்புகள் இன்று வரையிலும் நீங்கியதாக இல்லை.கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல குறிகாட்டிகளும் பின்னோக்கிய நகர்வினையே கொண்டிருந்தன.தோட்ட நிர்வாகம் இவர்களின் கல்வியில் அக்கறை காட்டவில்லை.

தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் மேலெழுமிடத்து தமக்கு அது இடையூறாக அமையும் என்று இவர்கள் கருதினர். “பெருந்தோட்டக் கலாசாரத்தில் கல்வி என்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.தொழிலாளர் கல்வியை பெற்றுக் கொண்டால் தோட்டங்களின் மனிதவலு வழங்கலில் பாதிப்பு ஏற்படும்.எனவே தொழிலாளர்களின் பிள்ளைகள் எவ்வித கல்வியையும் பெற்றுவிடக் கூடாது” என்பது நிர்வாகத்தின் சிந்தனையாகும்.

பொருளாதார ரீதியில் இம்மக்களின பின்னடைவுக்கு இன்றுவரை உரிய பரிகாரம் கிடைக்கவில்லை.சம்பள நிர்ணய சபை,கூட்டு ஒப்பந்தம் இவையெல்லாம் தொழிலாளர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு தோள் கொடுக்கவில்லை.

இம்மக்களின் பொருளாதார பின்னடைவு ஏனைய பல துறைகளின் பின்னடைவுக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.இலங்கையில் வறுமையின் துறைசார் போக்குகள் குறித்து நாம் நோக்குகையில் பெருந்தோட்டத்துறையினர் அதிகரித்த வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளமையைக் காணலாம்.

1990/91 இல் நகரத்துறை வறுமை 16.3 வீதமாகக் காணப்பட்டது.1995/96 இல் 14.0, 2001/02 இல் 7.9, 2012/13 இல் 2.1 ஆக இது காணப்பட்டது.இதேவேளை 1990/91 இல் 29.4, 1995/96 இல் 30.9, 2001/02 இல் 21.7, 2012/13 இல் 9.6 வீதமாக கிராமியப் துறை வறுமை அமைந்திருந்தது.இந்நிலையில் பெருந்தோட்டத் துறை வறுமை குறித்து நோக்குகையில் 1990/91 இல் 20.5, 1995/96 இல் 38.4, 2001/02 இல் 30.0, 2012/13 இல் 10.9 வீதமாக இது அமைந்திருந்தது.இதேவேளை  தேசிய ரீதியில் நோக்குகையில் 1990/91 இல் 26.1, 1995/96 இல் 28.8, 2001/02 இல் 22.7, 2012/13 இல் 8.9 வீதமாக இலங்கையின் வறுமை நிலை காணப்பட்டது.இத்தரவுகளிலிருந்து பெருந்தோட்ட மக்களின் வறுமையின் அதிகரித்த போக்கினைக் காணலாம்.பெருந்தோட்ட வறுமை நிலை புள்ளிவிபரங்களைக் காட்டிலும் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

 ஐ.நா.வின் அறிக்கை

வறுமையானது பல்பரிமாணங்களைக் கொண்டவொன்றாகும். நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைத் தரத்தினை உறுதிசெய்து கொள்வதற்கு போதுமான வருமானமும் உற்பத்தித்திறன் கொண்ட சாதனங்களும் இல்லாதிருந்தல், பசியும் போஷாக்கின்மையும் காணப்படுதல், கல்வியையும் வேறு அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாதநிலை காணப்படுதல், நோய்வாய்ப்படுதலும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும்,வீடின்மை அல்லது போதுமான இருப்பிட வசதியின்மை, பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதோடு சமூக ரீதியான பாரபட்சங்களுக்கு உள்ளாதல் அல்லது ஒதுக்கி வைக்கப்படுதல் என்பன‌ வறுமையை ஏற்படுத்தும் காரணிகளென்று 1995 இன் ஐ.நா.வின் அறிக்கை வறுமை குறித்து  எடுத்தியம்புகின்றது.

இந்நிலையில் தோட்ட மக்கள் இந்நாட்டில் காலடி எடுத்து வைத்த காலம் தொட்டே மோசமான தாக்கத்திற்கும் ஒதுக்கல்களுக்கும் உள்ளாகி வருவதாக பேராசிரியர் எம்.சின்னத்தம்பி குறிப்பிடுகின்றார்.

பெருந்தோட்ட மக்களின் சுகாதார பின்னடைவு குறித்தும் ஆய்வுகள் பலவும் சுட்டிக்காட்டுகின்றன.இலங்கையில் ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் சுகாதார வாய்ப்புகள் தோட்டத்துறை மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமாகும். இந்நிலையில் இச்சமூகத்தினரின் நோயுறு வீதம், இறப்பு வீதம், தாய்சேய் மரண வீதம், மந்தபோஷணை வீதம் என்பன ஏனைய சமூகத்தினரைவிட அதிகமாகவே காணப்படுகின்றன.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளுக்கான அரச முதலீடுகளூடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டத்துறை சுகாதாரத்திற்கான அரச முதலீடு குறைவாகவே காணப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு தேசிய ரீதியில் அரசினால் முன்னெடுக்கப்படும் சுகாதாரம், போஷாக்கு உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் பெருந்தோட்ட மக்களை உரியவாறு வந்தடைவதில் இழுபறி நிலையே காணப்படுகின்றது.

பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் உரிய பயனைத் தரவில்லை .தேர்தல் விஞ்ஞாபனங்களிலும், வரவு செலவு திட்டத்திலும் வீடமைப்பு குறித்து கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றதே தவிர நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.” ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாத” நிலையே  இருந்து வருகின்றது.தோட்டத் தொழிலாளர்களில் பலர் இன்னும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தற்காலிக குடில்களிலேயே வசித்து வருகின்றனர்.

1996 ம் ஆண்டின் தகவலொன்றின்படி 104556 இரட்டை லயன் காம்பரா அலகுகள் காணப்பட்டன. இதேவேளை ஒற்றை லயன் காம்பரா அலகுகள் 108825, குடிசைகள் தற்காலிக குடில்கள் 22410, தற்காலிக வீடுகள் 35100 என்றவாறு அலகுகள் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இன்று தோட்டங்களில் ஒரு இலட்சத்து 50,000 பேர் வரையில் தொழில் புரிகின்ற நிலையில் தனிவீட்டு தேவைக்கான எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்திய வீட்டுத்திட்டம் மலையகத்தில் அமுலில் உள்ள போதும் “யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற நிலையிலேயே நிலைமைகள் தொடர்வதாகவும் இந்திய உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

இதேவேளை தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை இங்கு அழைத்து வந்தவர்கள் என்ற ரீதியில் இம்மக்களின நலனோம்பலில் பிரித்தானியர்களின் வகிபாகமும் காத்திரமாக அமைதல் வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. வீடமைப்பு தொடர்பில் கற்றறிவாளர்களின் பங்களிப்புடன் முறையான திட்ட வரைவு உருவாக்கப்பட்டு அதனை நிறைவேற்றிக்கொள்ள மலையக அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

1982 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பல விடயங்களில் தோட்ட மக்கள் பின்தங்கியுள்ளதாக தெளிவுபடுத்தியது. குடியுரிமை, தொழில்வாய்ப்பு,கல்வி, வீட்டு வசதியும் சுகாதாரமும்,சமூகநலன் பேணல் எனப்பலவும் இதில் உள்ளடங்கும். இந்நிலையில் இம்மக்களை பின்தங்கிய நிலைமைகளில் இருந்து மீட்டெடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டின் முதுகெலும்பைப் போன்றவர்கள்.தன் வீடுயராதபோதும் நாடுயர பாடுபட்டவர்கள்.இன்னும் பாடுபட்டு வருபவர்கள். இவர்களால் தேசம் செழுமையுறுகின்றது. இந்நிலையில் இவர்களின் வாழ்விலுள்ள  இருள் அகற்றப்படுதல் வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்துக்கு இம்மக்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து விசேட தொடர் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது.இந்திய வம்சாவளி மக்களை கௌரவிக்கும் அதேவேளை அம்மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் களையப்பட்டு அவர்களின் உரிமைகளுக்கு வித்திடுவதற்கு அரசாங்கம் உறுதிபூண வேண்டும். நிலவுடைமை, வீட்டுடைமை சமூகமாக அவர்கள் இந்த ஆண்டில் மேலெம்ப வேண்டும். அத்துடன் தனித்தேசிய இனமாக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டு புதுரத்தம் பாய்ச்சப்படுவதும் அவசியமாகும்.

இதற்கெல்லாம் மேலாக இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல்வாதிகள் பேதங்களை மறந்து கை கோர்த்து இம்மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.இதைவிடுத்து தமக்கிடையே விரிசல்களை வளர்த்துக் கொண்டு பிரிந்து நின்று செயற்படுவதால் மலையக சமூகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்பதனை மறந்து விடுதல் கூடாது.