சிங்கள மயமாக்குவதுதான் அரசின் தேசிய பாதுகாப்பா?கலாநிதி க.சா்வேஸ்வரன் செவ்வி

வடக்கில் காணி அபகரிப்பு, புத்தா் சிலைகளை அமைத்தல் ஏனைய மதச்சின்னங்களை அழித்தல் என அரசாங்க இயந்திரம் மறைமுகமான யுத்தத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்க் கட்சிகள் இதனை எதிா்கொள்வதற்கு என்ன செய்யப்போகின்றன போன்ற கேள்விகளுடன் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சா் கலாநிதி க.சா்வேஸ்வரன் அவா்களை இந்த வாரம் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வுக்காக வழங்கிய நோ்காணலின் முக்கியமான பகுதிகள் இலக்கு வாசகா்களுக்காக…

கேள்வி – வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடிய ஏழு தமிழ்க் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் தீா்மானித்துள்ளன. இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைக்கும் குழுவில் நீங்களும் இருக்கின்றீா்கள். இந்தப் போராட்டம் எப்போது நடத்தப்படும்? அதற்காக எவ்வாறான உபாயங்களை வகுத்திருக்கின்றீா்கள்?

WhatsApp Image 2023 04 10 at 9.12.18 PM சிங்கள மயமாக்குவதுதான் அரசின் தேசிய பாதுகாப்பா?கலாநிதி க.சா்வேஸ்வரன் செவ்வி

பதில் – எட்டு மாவட்டங்களிலும் போராட்டங்களை முன்னெடுப்பதுதான் எமது நோக்கம். அதற்காக அந்தப் பகுதிகளிலுள்ள கட்சிகள் – அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நாம் பேசியிருந்தோம். ஒரே தினத்தில் இதனை நடத்துவதா அல்லது ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு தினத்தில் நடத்துவதா என்பதையிட்டு ஆராய்ந்தோம். ஒரே தினத்தில் நடத்தினால்தான் சா்வதேச கவனத்தை அதிகளவுக்கு ஈா்க்க முடியும் என்ற கருத்து இதன்போது முன்வைக்கப்பட்டது. இது தொடா்பாக பெரும்பாலும் அடுத்த வார ஆரம்பத்தில் இறுதி செய்வோம். சா்வதேச கவனத்தை ஈா்க்கும் வகையில் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களில் இதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கேள்வி  – திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முடியாத நிலையில் தமிழ் அமைப்புக்கள் இருப்பது ஏன்?

பதில் –  தமிழ்க் கட்சிகளிடையே இணைந்து செயற்படும் தன்மை போதியளவில் இல்லாததுதான் இதற்கான பிரதான காரணம். இரண்டாவது காரணம் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை. உதாரணமாக 13 ஆவது திருத்தத்தை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு விதமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. ஒன்றுபட்ட நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்கு முதலாவதாக தலைவா்கள் ஒன்றாக இருந்து பேச வேண்டும். அந்த நிலைமை இங்கிருக்கவில்லை.  இப்போது ஓரளவுக்கு அந்த நிலை உருவாகியிருப்பதாகவே தெரிகின்றது. அதனால், எதிா்காலத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

கேள்வி – ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புக்கள் மூலமாக இந்த விவகாரத்தில் – அதாவது தொல்லியல் தொடா்பான விடயங்களில் அழுத்தம் கொடுக்க முடியாத ஒரு நிலை காணப்படுகின்றதா?

பதில் –  நீண்டகாலத்துக்கு முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தபோது இது தொடா்பாகப் பேசியிருக்கிறோம். இது ஒருவா் – இருவா் செய்கின்ற விடயமல்ல. இது ஒரு அமைப்பாகச் செய்ய வேண்டிய விடயம். குறிப்பாக யுனெஸ்கோ தொல்லியல் விடயங்களைக் கையாளும் அமைப்பாக உள்ளது. இந்த நாட்டில் எந்தளவுக்கு சிங்கள – பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் அதனுடைய தொல்லியல் திணைக்களம், வன விலங்கு திணைக்களம் என்பன எமது தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடிய வகையில் செயற்படுகின்றன என்பதை யுனெஸ்கோ போன்றவற்றுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயத்தை நாங்கள் ஏற்கனவே யுனெஸ்கோவிற்கு எடுத்துச்சென்றிருக்க வேண்டும்.

தமிழ்க் கட்சிகளின் தலைவா்களோ எம்.பி.க்களே இதையெல்லாம் தெரியாதவா்களாக இருந்திருப்பாா்கள் எனக்கூறமுடியாது. இலங்கையில் இடம்பெறுவது ஒரு கலாசார அழிப்பின் ஊடான இன அழிப்பு என்பதை முன்னெடுத்துச்சென்றிருக்க வேண்டும். வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களுடைய தொன்மைகளை அழிப்பதும், அதனுடாக தாயகப்பகுதிகளில் அவா்களுடைய இருப்புக்கான நியாயங்களை அழிப்பதும், அதனுாடாக ஒரு இன அழிப்பு முன்னெடுக்கப்படுகின்றது என்பதும் ஆதாரங்களுடன் நாம் ஐ.நா. மற்றும் யுனெஸ்கோ போன்றவற்றுக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். தொல்லியல் தொடா்பான விடயங்களை யுனெஸ்கோவுக்குள்ளாலும், இன அழிப்பு விடயங்களை வேறு அமைப்புக்கள் மூலமாகவும் நாம் முன்னெடுக்க வேண்டும்.

இவ்விடயத்தில் நாம் வேகமாகவும் சாதுா்யமாகவும் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.  இதனை எமது அரசியல் தலைவா்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். ஆனால், இவற்றைப் புரிந்துகொள்ளக்கூடியவா்களாக எமது அரசியல் தவைா்கள் இருக்கின்றாா்களா என்பது கேள்விக்குரிய விடயம்தான். இவ்விடயத்தை எமது அரசியல் தலைவா்கள் மட்டுமல்ல, எமது புத்திஜீவிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம். அரசியல் தலைவா்களும் புதிதிஜீவிகளும் கைகோா்த்துத்தான் இந்த விடயங்களை முன்னெடுக்க முடியும்.

கேள்வி – தென்னாபிரிக்காவின் பாணியில் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதில் எந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியும்? 

பதில் –  தென்னாபிரிக்காவில் இனவெறி ஆட்சி ஒழிக்கப்பட்டு, அந்நாட்டின் மக்களான கறுப்பா்களுடைய ஆட்சி நிலைநாட்டப்பட்ட பின்னா் பழைய குரோதங்களை எவ்வாறு குறைக்கலாம் என்பதற்காகத்தான் இது அங்கு முன்னெடுக்கப்பட்டது. இது எந்தளவுக்கு வெற்றிபெற்றது என்பது மிகப்பெரிய கேள்வி. அதாவது, அங்கு முழுமையான ஒரு தீா்வு ஏற்பட்ட பின்னா் முன்னா் இருந்த குரோதங்களை குறைப்பதற்கான ஒரு வழிமுறையாகத்தான் அது பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இங்கே இனப்பிரச்சினைக்கான தீா்வு குறித்து பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை. இனப்பிரச்சினைக்கான தீா்வு என்பதையே நையாண்டி செய்யும் வகையில், தீா்வுக்கான அடிப்படைகளையே இல்லாமல் செய்யும் வகையில் வடக்கு கிழக்கில் சிங்கள – பௌத்த மயமாக்கலை முன்னெடுப்பதற்கு அரச திணைக்களங்களுக்கும், பிக்குகளுக்கும் அரசாங்கம்  அதிகாரத்தைக் கொடுத்திருக்கின்றது. ஜனாதிபதி தனக்கு எதுவும் தெரியாது என்பது போல நாடகமாடுகின்றாா்.

இந்த நிலையில் தென்னாபிரிக்க மாதிரியை இங்கு கொண்டுவருவது என்பது வண்டிக்குப் பின்னால் நொண்டி மாட்டை கட்டும் வேலை.தென்னாபிரிக்க நல்லிணக்க முயற்சிளை கொப்பி பண்ணி இங்கு நடைமுறைப்படுத்துவது என்பது இரண்டு வகையில் கேலிக்கூத்தான விடயம்.

முதலாவது – சந்திரிகா குமாரதுங்கவின் காலம் முதல் ஆட்சிக்கு வருபவா்கள் இது குறித்து பேசுவதும், இது குறித்து ஆராய்வதற்காக என தென்னாபிரிக்கா சென்று வருவதும் வழமையான ஒன்றாகத்தான் இருக்கின்றது.

இரண்டாவது – நடைமுறையில் இது சாத்தியமாக வேண்டுமானால் – அதாவது தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு உறுதியான ஒரு தீா்வு வழங்கப்பட்ட பின்னா் இன நல்லிணக்கம் என்பதற்கு தனியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் அவ்வாறான நிலையில் இன நல்லிணக்கம் என்பது தானாக உருவாகிவிடும்.

கேள்வி – பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படவிருக்கும் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டமும் பலத்த சா்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் – புதிதாகக் கொண்டுவரப்படவிருக்கும் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் என்பது ஏற்கனவே இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மிக மோசமானது. இது இலங்கையின் அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகளை மறுதலிக்கக்கூடிய ஒன்று. குறிப்பாக, அவா்களுடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகிய அனைத்தையுமே தாங்கள் விரும்பிய நேரத்தில் அடக்கி ஒடுக்குவதற்கு ஏற்ற வகையிலேயே இந்தச் சட்டம் அமைந்திருக்கின்றது. ஆகவே, இது அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மறுதலிக்கின்ற ஒரு சட்டமாகும்.

ஜனநாயக நாடொன்றில் இத்தகை சட்டங்கள் ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கும்.  மக்களின் அடிப்படையான ஜனநாயக செயற்பாடுகளையே இது மறுதலிக்கின்றது. இது ஒரு சா்வாதிகாரத்துக்கும் காட்டாட்சிக்கும்தான் வழிவகுக்குமே தவிர, ஜனநாயக பண்புகள் அனைத்தையும் இது துடைத்தெறிவதாக அமையும்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஏழு தமிழ்க் கட்சிகள், 22 பொது அமைப்புக்களின் கூட்டத்திலும் இந்த பயங்கரவாத எதிா்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரக்கூடாது என்ற ஒரு தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

எம்மைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு சட்டமூலம் அவசியமில்லை. இங்கு இப்போது அரச பயங்கரவாதம்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இந்த அரச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி – ஜனநாயகத்தை நாட்டில் செழிப்புறச் செய்வதற்கான தேவை இருக்கின்றதே தவிர, மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான சட்டமூலம் ஒன்றுக்கான தேவை இல்லை.

நாட்டில் முப்படைகளை அரசாங்கம் வைத்திருக்கின்றது. அதற்கு அவா்கள் சொல்லும் காரணம் – தேசிய பாதுகாப்பு என்பது. அவா்கள் வடக்கு கிழக்கை சிங்கள – பௌத்த மயமாக்ககுவதற்குத்தான் படையினரை பயன்படுத்துகின்றாா்கள். இதற்குத்தான் அவா்கள் தேசிய பாதுகாப்பு என்று பெயரிட்டுள்ளாா்கள்.