புதிய அரசமைப்பு பணியை முன்னெடுங்கள்: கோட்டாவிடம் சுமந்திரன் கோரிக்கை

446 Views

“கடந்த அரசின் காலத்தில் இந்த நாடாளுமன்றமே ஏகமனதான தீர்மானம் மூலம் அரசமைப்புப் பேரவையாக மாறி, புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அது கணிசமான அளவு முன்னேறியுள்ளது. அந்தப் பணியை அப்படியே முன்னெடுத்து, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதான புதிய அரசமைப்பு உருவாக்கத்தைப் பூர்த்தி செய்யுங்கள்”

இவ்வாறு புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை நேற்று நாடாளுமன்ற உரை மூலம் கோரியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

கடந்த மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆற்றிய அவரது கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்த உரையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“எனது இந்த அறிக்கையானது கடந்த ஜனவரி மூன்றாம் திகதி அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பானதாகும். இக்கொள்கை பிரகடனமானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி புரிந்த அரசாங்கங்களின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதி னால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஜனாதிபதி கடந்த நவம்பர் 16, 2019 அன்று மிக முக்கியமான வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்தப் பாரிய வெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் பெரும்பான்மையான சிங்கள,பெளத்த மக்களை தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதி அவர்களில் நம்பிக்கை வைப்பதற்கு தயாராக இல்லை என்பதாகும்.

இதை எவ்விதத்திலும் ஜனாதிபதி மீது அவதூறு கொண்டு வரும் நோக்கில் நான் கூறவில்லை. மாறாக, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்கவேண்டுமன்பதில் கரிசனையாக இருந்தால், இத்தகைய ஒரு முக்கியமான அம்சத்தினை நாம் புறக்கணிக்க முடியாது என்பதனை சுட்டிக்காட்டவே இந்தக் கருத்தினை முன்வைக்கின்றேன்.”

Leave a Reply