பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல்;விறுவிறுப்பான வாக்களிப்பு

பிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மக்களவைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.18 வயது பூர்த்தி அடைந்து உரிய அடையாள அட்டை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும். மொத்தம் 650 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் 326 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சி அமைக்க முடியும். பெரும்பான்மையை பெற்ற கட்சியின் எம்பிக்கள் ஒன்று கூடி பிரதமரை தேர்வு செய்வார்கள். இதனை அடுத்து நாட்டின் பிரதமராக அவரை மகாராணி நியமிப்பார். பிரிட்டன் மக்கள் தொகை 6.64 கோடியாக இருக்கிறது.

இதில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 4‌.57 கோடி பேர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை நீடிக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போதைய தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பழமைவாத கட்சிக்கும் , ஜெரிமி கோர்பினின் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பிரெக்ஸிட் விவகாரமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.

பிரெக்ஸிட்டை நிறைவேற்றியே தீருவேன் என போரிஸ் ஜோன்சனும், பிரெக்ஸிட் தொடர்பாக மீண்டும் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜெரிமி கோர்பினும் வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே ஐரோப்பிய ஒன்றியத்துடனே பிரிட்டன் நீடிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்களா? அல்லது பிரிந்து தனி நாடாக செயல்பட விருப்பப்படுகிறார்களா என்பதற்கான மறைமுக தேர்தலாகவே இந்த தேர்தல் கருதப்படுகிறது.

Leave a Reply