பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை 75 ஆக உயர்த்த பரிந்துரை

பிரித்தானியாவில் பணிபுரியும் மக்களின் ஓய்வூதிய வயதெல்லையை 75 ஆக உயர்த்துவதற்கு பிரித்தானியா அரசுக்கு  பிறக்சிற் நடைடிக்கையின் முன்னாள் ஆலோசகரும், கொன்சவேற்றிக் கட்சியின் கொடையாளருமான டேவிட் புரெஸ்ட் பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (2) பிரித்தானியாவின் மன்செஸ்ட்டர் பகுதியில் இடம்பெற்ற கொன்சவேட்டிவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் அந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார். ஓய்வூதிய வயதை 75 ஆக உயர்த்துவதன் மூலம் பொதுமக்களுக்கு செலவு செய்யப்படும் பெருமளவான நிதியை சேமிக்கலாம் என அவர் தனது பரிந்துரைக்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.

கடந்த 5 வருடங்களில் பிரித்தானியா அரசு இரண்டு தடவைகள் ஓய்வூதிய வயதை அதிகரித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. அதன் ஆண்டுக்கான செலவீனங்கள் தற்போது என்றுமில்லாதவாறு அதிகரித்து செல்கின்றது.

சுகாதாரம், ஓய்வூதியம், சமூக நலன் தொடர்பான செலவீனங்கள் இந்த வருடம் 784 பில்லியன் பவுண்ஸ்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் 713 பில்லியன் பவுண்ஸ்களாக இருந்தது. அரசின் கடனும் 2010 ஆம் ஆண்டு அதன் மொத்த உற்பத்தியில் 75 விகிதமாக இருந்தது தற்போது அது 100.5 விகிதமாக அதிகரித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு வரையில் ஓய்வூதிய வயது ஆண்களுக்கு 65 ஆகவும், பெண்களுக்கு 60 ஆகவும் இருந்தது. பின்னர் இரு தரப்பினருக்கும் 65 வயதாக 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் அது 66 ஆக 2020 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. 2028 ஆம் ஆண்டு அது 67 ஆகவும்இ 2048 ஆம் ஆண்டு அது 68 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.