வாழ்விடம் இன்றி அல்லலுறும் மக்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கான நிதியினை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு இன்றையதினம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,
வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ் வீடுகளை மக்கள் தமது பங்களிப்புடன் கட்ட ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
அவற்றுக்குரிய நிதி அரசினால் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.
அதனை நம்பி எமது மக்கள் தமது சொத்துக்கள், நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் வீடுகளை கட்ட தொடங்கியிருந்தனர்.
அரசாங்கத்தினால் அவற்றிற்குரிய நிதி இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் அநேகமான வீடுகள் நிதிப்பற்றாக்குறையினால் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ளன.
தற்போது ஏற்பட்ட கன மழை வெள்ளத்தின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வாழ வாழ்விடம் இன்றி அல்லலுறுகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களே அதிகளவில் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாடுமுழுவதும் உள்ள ஒரு பாரிய பிரச்சினையாகும்.
எனவே வீடமைப்பு அமைச்சராக உள்ள தாங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிதியினை வழங்கி பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை முழுமையாக கட்டுவதற்கும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் விரைந்து நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.