பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸில் ஒன்றுகூடிய ஈழத் தமிழர்கள்

648 Views

சிறிலங்கா பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக புதன்கிழமை புலம்பெயர் ஈழத் தமிழர்களால் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கண்டனப் போராட்டம் பிற்பகல் 3.00 மணிமுதல் 5.00மணிவரை இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் வன்கொடுமைகளைக் குறிக்கும் பதாகைகளை கைகளில் தாங்கியிருந்தனர்.

கலந்து கொண்ட மக்களின் சார்பில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறிலங்காவின் இனவாதம் குறித்து சான்று பகரும் உரைகளும் இடம்பெற்றன.

போராட்டத்தின் நிறைவில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் மேத்தா உரையாற்றினார். அவர் தனது உரையில் சிறிலங்கா அரசானது தமிழின அழிப்பை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த இன அழிப்பின் பிரதிபலிப்பாக எம்மில் ஒரு பகுதியினர் தாய்த் தமிழகத்திலும், ஒரு பகுதியினர் தாய் மண்ணிலும், மற்றொரு பகுதியினர் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றோம். அது மட்டுமல்லாமல் தமிழர்களுடைய அடுத்த தலைமுறையினரையும் விடுதலை பயணத்தில் பங்கு கொள்ள வைத்து, அவர்களுடைய அளப்பரிய பங்கை ஏற்றும் போற்றியும் நிற்கின்ற வேளை, ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஒரு தனி வரலாறு இருக்கின்றது என்று புத்தகங்களிலும் பெரும் காவியங்களிலும் உணர்த்தி வரப்படும் அந்த விடயங்கள் இன்று கீழடி என்ற இடத்திலே மண்ணிற்குள் புதைந்து போன எமது தமிழர்களின் வரலாறு தொன்மை மிக்க சான்றுகள் கண்முன்னே கண்டெடுக்கப்பட்டு, அது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வகத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட துணிவோடும் நிமிர்வோடும் நிற்கின்றோம்.

தமிழினம் உலகின் மூத்த குடி என்பதைப் பறைசாற்றி நிற்கும் இந்த வேளையில், நாம் தொடர்ந்து போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply