பல தடைகளையும் தாண்டி கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் -தென்னகன்

626 Views

தமிழர் தேசம் இன்று கண்ணீருடனும் மனக்குமுறலுடனும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. எங்களுக்காக போராடிய எங்கள் உறவுகளின் நினைவைக்கூட நினைவுகூரமுடியாத வகையில் சிங்கள தேசம் இன்று தமிழர்களின் குரல் வளையினை நசித்துக் கொண்டிருக்கின்றது.

தமிழர்களின் போராட்டம் என்பது வெறும் பயங்கரவாதப் போராட்டம் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் பல்வேறு வகையான பிரசாரங்களை முன்னெடுத்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அந்த போராட்டமும் அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகளும் என்றும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது.

யுத்தம் மௌனிக்கப்பட்டு 11வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும், இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் அந்த யுத்தத்தின் தாக்கங்களும், அதன் மூலம் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட வேதனைகளும், வலிகளும் மறக்கமுடியாத நிலையிலேயே உள்ளன.

காலத்திற்குக் காலம் தமிழர்களின் உணர்வுகளை அழிப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு சிங்கள தேசம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்போது, எந்த வேலைத் திட்டத்தினாலும் தமிழர்களின் உணர்வுகளை அழிக்க முடியாது என்பதை தொடர்ச்சியாகத் தமிழர் தேசத்தில் முன்னெடுக்கப்படும் உணர்வு ரீதியான செயற்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன.

உலக வழக்கத்தினையெல்லாம் மீறும் வகையில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் செயற்பாடுகளும், அழுத்தங்களும், அடக்குமுறைகளும் இன்று ஜனநாயக ரீதியாக தமிழர்களை பல வழிகளிலும் போராட வைத்துள்ளது.

இன்று வடகிழக்கு எங்கும் உணர்வுகள் பொங்கிட எழுச்சி பீறிட தமது மனக்குமுறல்களை கொட்டிவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கும் கல்லறை வாரமாகும்.

சிங்கள தேசம் எவ்வளவுதான் தடைகளைப்போட்டு மறைத்தாலும் உணர்வு என்பது மாற்று வழிகளினால் வெளிவருவது என்பதை அண்மைக்கால சம்பங்கள் உணர்த்தி வருகின்றன.

தமிழர்களின் உணர்வுகள் மேல்லெழுந்து வருவதையோ, தமிழர்களின் போராட்டங்கள் ஏற்படுவதையோ சிங்கள தேசம் விரும்பாத நிலையில், அவை எழும் வழிகளாக சந்தேகிக்கும் வழிகளை மறித்து – அடைக்கும் முயற்சிகளை திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.

30வருட போராட்டங்களில் தமிழ் மக்கள் இழந்த பாரிய இழப்பினை தமிழர் மனங்களில் இருந்து அழுத்தங்களைப் பிரயோகித்து அழித்து விடலாம் என்று நினைப்பதுதான் வேடிக்கையான விடயமாகும்.

தமிழ்கள் இந்த நாட்டின் மக்கள் என்பதை சிங்கள தேசம் ஏற்க மறுத்த காரணத்தினால், தமிழ் இளைஞர்கள் இந்த நாட்டில் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தமது இனம் இந்த நாட்டில் ஏனைய இனங்கள் போன்று சுதந்திரமாகவும் தமது பகுதிகளை தாங்களே கட்டியெழுப்பி ஆளவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் ஆயுதங்களை ஏந்திப் போராடினார்கள்.

இன்று அந்த ஆயுதப் போராட்டங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அந்த ஆயுதப்போராட்டத்தில் ஆகுதியாகிய எங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு இன்று சிங்கள தேசம் தடைவிதிப்பதானது இந்த நாட்டில் தமிழர்கள் எந்த உரிமையும் அற்றவர்கள் என்பதை சிங்கள தேசம் பறைசாற்றுவதாகவ உள்ளது.

80 காலப்பகுதியில் சிங்கள அரசுக்கு எதிராக சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய நிலையில், அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து, இன்றும் அந்த போராட்டத்தில் உயிர்நீர்த்த இளைஞர்கள் எந்தத் தடையும் இன்றி நினைவுகூரப்படும் நிலையில், தமது இனத்திற்காக போராடிய தமிழ் இளைஞர், யுவதிகளை நினைவுகூருவதில் என்னவிதமான ஆபத்து உள்ளது என்பதை சிங்கள தேசம் புரியும் மனநிலையில் இல்லை.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள், மாவீரர் நாள் என்பன கிழக்கில் தொடர்ச்சியாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், உணர்வெழுச்சிப் போராட்டங்களுக்கு என்றும் பின்நிற்காத வகையில், அழுத்தங்களுக்கு அடிபணியாத வகையில் இந்த நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

2015ஆம் ஆண்டு வரையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறாவிட்டாலும், மாவீரர் நாட்கள் பல வழிகளில் அனுஸ்டிக்கப்பட்டன. அதேபோன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 2010ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்படுகின்றது.

2015 தொடக்கம் 2019வரையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெற்றாலும், இன்றைய சூழ்நிலையில் அவற்றினை மாவீரர் துயிலும் இல்லங்களில் நடாத்துவதற்கான ஏதுவான காலநிலையினை காணமுடியவில்லை. மாவீரர் நாள் நடைபெறுவதையோ, மாவீரர்களை நினைவுகூருவதையோ தடுக்கும் வகையிலான பல்வேறு செயற்பாடுகள் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுதிப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் தீவிர பாதுகாப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை காரணம் காட்டி இவ்வாறான தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர்கள் என்பது தமிழர்களின் இரத்தத்துடனும், சதையுடனும் பின்னிப்பிணைந்தவர்கள் என்பதை மறந்து, இலங்கை அரசாங்கம் மாவீரர்களை நினைவுகூருவதற்கு தடை விதித்துள்ளது.

எனினும் அனைத்துத் தடைகளையும் தாண்டி வீடுகளில் அன்றைய தினம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசியத்தினை நேசிப்போரினால் அறைகூவல் விடுத்துள்ள அதேவேளை, இலங்கையில் தமது உறவுகளைக்கூட நினைவுகூரமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாங்கள் இந்தவேளையில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.வடகிழக்கு தமிழர்களின் தாயகம். இந்தத் தாயகத்தில் நாங்கள் அடையாளங்களாக கொண்டவற்றினை பாதுகாப்பதற்கான ஒரு பொதுவான வேலைத்திட்டம் அவசியம் என்பதை இன்றைய காலம் எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றது.

நாங்கள் இந்த மாவீரர் நாளில் சுடர் ஏற்றி நினைவினை அனுஸ்டித்த பின்னர், அடுத்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே அது தொடர்பில் சிந்திக்கும் நிலையுள்ளது. இவ்வாறான நிலைமை மாற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் நினைவேந்தல்கள், தமிழர்களின் முக்கியமான விடயங்களை மேற்கொள்வதானது தொடர்ச்சியான செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதற்காக தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து பொதுவான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போதே எதிர்காலத்தில் இவ்வாறான சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள முடியும்.

இன்று இந்த மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கான தடையுத்தரவு வடகிழக்கில் நீதிமன்றங்கள் ஊடாக பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. அதோபோன்று மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு வருவோரை தடுக்கும் வகையிலான தடையுத்தரவு பெறப்பட்டு அவ்வாறு செல்வோர் கைதுசெய்யப்படவோ அச்சுறுத்தப்படவோ செய்யப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, தரவை, மாவடிமுன்மாரி ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் த.சுரேஸ் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலைமையினை நாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொண்டு அதனை நாங்கள் எதிர்கால சமூகத்திற்கு வழங்கப் போகின்றோம் என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதற்கான சரியான கட்டமைப்பினை ஏற்படுத்தி நாங்கள் முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், எஞ்சியுள்ள நினைவுகளை பேரினவாதம் இலகுவில் அழித்துவிட்டுச் செல்லும் நிலைமை உருவாகும்.

எனவே நாங்கள் வெறுமனே இந்த நினைவு காலத்தில் மட்டும் எமக்கான இந்த மண்ணில் வித்தாகிய மறவர்களை நினைவில் கொள்ளாமல் இந்த தமிழர் தேசம் உள்ளவரையில் வாழும் நிலையினை ஏற்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அதேபோன்று மாவீரர் குடும்பங்களில் பல இன்று நிர்க்கதியான நிலையில் உள்ளது. நாங்கள் மாவீரர்களை நினைவுகூரும்போது அவர்களின் குடும்பங்களின் நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயமாகவுள்ளது. தமது குடும்பங்களை துறந்து ஆகுதியாகிய மறவர்களின் குடும்பங்களையும் நாங்கள் தத்தெடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் நாங்கள் செய்வதனால் அந்த பொதுவான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கான மணியை கட்டுவதற்கு தேசியத்தினையும் மாவீரர்களையும் நேசிப்போர் முன்வர வேண்டும்.

Leave a Reply